ஓய்வுக்கு பிறகும் பணிக்கு வந்தார், உயிரையே தியாகம் செய்தார்! செவிலியர் செம்மல் ஜோன் மேரி பிரிசில்லா!
சென்னை: சென்னை ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையின் தலைமைச் செவிலியர் ஜோன் மேரி பிரிசில்லா, ஓய்வுக்கு பிறகு பணி நீட்டிப்பு செய்யப்பட்ட நிலையில், உயிரை தியாகம் செய்துள்ளார் என்ற உருக்கமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா பிரச்சினை காரணமாக, அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை, 58லிருந்து, 59ஆக உயர்த்தி, தமிழக அரசு மே 7ல் அரசாணை பிறப்பித்தது. இதன்படி, மே 31ல் ஓய்வு பெறுவோர், மேலும் ஓராண்டு பணியில் நீட்டிப்பர்.
அதேநேரம், கொரோனா பிரச்சினையால், பல அரசு ஊழியர்களுக்கும் ஏற்கனவே பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது. ஏப்ரலில் பணி ஓய்வு பெறவிருந்த ஊழியர்களுக்கு மே 31 வரை பதவி நீட்டிப்பு செய்யப்பட்டது.

பதவி நீட்டிப்பு
இப்படித்தான், பதவி நீட்டிப்பு பெற்றார், சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த ஜோன் மேரி பிரிசில்லா. சென்னை ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையின் தலைமை நர்சாக வேலை பார்த்தார். இவருக்கு 58 வயதாகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் பணி ஓய்வு பெற்றார். ஆனால், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் பணிகள் நடந்துவந்ததால், அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவேதான், தொடர்ந்து பணியாற்றி வந்தார்.

மூச்சுத் திணறல்
இந்த நிலையில், 24ம் தேதி அவருக்கு லேசாக மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனால், ராஜீவ்காந்தி மருத்துவமனையிலேயே 3வது மாடியில் இவர் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். அவருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டது. இதன் முடிவு நேற்று வெளியானது.

நீரிழிவு
ரிசல்ட் என்ன என்பது பற்றி அவரது குடும்பத்தினருக்கு, தெரியாது. இருப்பினும், நோயிலிருந்து மீண்டுவிடுவார் என்று அவர்கள் நம்பினர். இருப்பினும் நேற்று இரவு 11 மணியளவில் ஜோன் மேரி பிரிசில்லா உயிரிழந்தார். இவருக்கு நீரிழிவு நோய், இதய கோளாறு என பல பிரச்சினைகள் இருந்ததாகவும், கொரோனாவால் இல்லை, வேறு உபாதைகளால்தான் இறந்தார் என்றும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தியாகம்
ஒருவேளை பதவி நீட்டிப்பு பெற்றிராவிட்டால், ஜோன் மேரி ஓய்வு எடுத்துவிட்டு, குடும்பத்தாரோடு, மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருந்திருக்க கூடும். ஆனால், பொதுச் சேவையை அவர் வயது முதிர்வையும், நீரிழிவையும், காரணம் காட்டி புறக்கணிக்கவில்லை. தனது கடமையை செவ்வனேயாற்றி, நோய் பாதிப்புக்கு உள்ளாகி, உயிரை இழந்துள்ளார்.. இல்லை, இல்லை. தியாகம் செய்துள்ளார் என்று சொன்னாலும், அந்த வார்த்தைக்கு தகுதியானவர்தான் இந்த செவிலி.

அரசு மருத்துவமனை சேவை
சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனைகளில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ஒதுக்கப்பட்ட பெட்களில் 70% காலியாக இருப்பதாக கூறுகிறது ஒரு புள்ளி விவரம். "ஒவ்வொரு நாளும், தனியார் மருத்துவமனைகளிலிருந்து குறைந்தது இரண்டு நோயாளிகளாவது சீரியசான நிலையில் ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பப்படுகிறார்கள்" என்கிறார் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, டீன் ஆர்.ஜெயந்தி. தனியார் மருத்துவமனைகள் முக்கியமான கட்டத்தில் நோயாளிகளை கைவிடுகின்றன. ஆனால் அரசு மருத்துவமனைகள்தான் இறுதிவரை போராடுகின்றன. அப்படியான ஒரு மருத்துவமனையின், தலைமை செவிலியராக இருந்து, ஓய்வுக்கு பிறகும் கடைசிவரை மக்களுக்காக போராடி உயிரை தியாகம் செய்துள்ளார் ஜோன் மேரி பிரிசில்லா.












Click it and Unblock the Notifications