சென்னைவாசிகளுக்கு மிக பெரிய நிம்மதி.. சீரானது புறநகர் ரயில் சேவை.. வழக்கமான அட்டவணையில் இயக்கம்!
சென்னை: எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடந்து வந்த சூழலில், சென்னையில் புறநகர் ரயில் சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையே மறுசீரமைப்பு பணிகள் திட்டமிடப்பட்ட காலத்திற்கு முன்கூட்டியே முடிக்கப்பட்ட சூழலில், மீண்டும் வழக்கமான ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் சென்னையில் வழக்கமான புறநகர் ரயில் சேவைகள் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் பொது போக்குவரத்துகளில் ஒன்றாகப் புறநகர் ரயில் சேவை உள்ளது. ஒவ்வொரு நாளும் பல லட்சம் மக்கள் புறநகர் ரயில் சேவைகளைப் பயன்படுத்தி வருகிறார்கள். இதற்கிடையே கடந்த பிப்ரவரி 20ம் தேதி எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் தொடங்கியது. இதனால் புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.

எழும்பூர்
எழும்பூர் ரயில் நிலையத்தின் 10 மற்றும் 11ஆவது நடைமேடைகளில் மறுசீரமைப்புப் பணிகள் தொடங்கிய நிலையில், ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டது. வழக்கமான அட்டவணைகள் ரத்து செய்யப்பட்டு தற்காலிக அட்டவணை அறிவிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும், போதியளவில் ரயில்கள் இல்லாத காரணத்தால் பொதுமக்கள் சிரமத்தை எதிர்கொண்டனர்.
இதையடுத்து பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதன்படி ஓரிரு நாட்கள் முன்கூட்டியே எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் முடிந்துள்ளன. இதனால் ஏப்ரல் 5ம் தேதி தொடங்க வேண்டிய வழக்கமான ரயில் சேவைகள், முன்கூட்டியே தொடங்கியுள்ளது. இன்று ஏப்ரல் 3ம் தேதி முதலே எழும்பூரில் வழக்கமான ரயில் சேவை பயன்பாட்டிற்கு வருகிறது.
ரத்து
அதன்படி தற்காலிக ரயில் கால அட்டவணை ரத்து செய்யப்பட்டு, வழக்கமான அட்டவணை நடைமுறைக்கு வந்துள்ளது.. இதன் காரணமாக சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடங்களில் கூடுதல் ரயில்கள் இயக்கப்படும். பீக் ஹவரில் கூடுதல் ரயில்கள் இருக்கும் என்பதால் பொதுமக்களின் சிரமம் குறையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
தெற்கு ரயில்வே
இது தொடர்பான அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. அதில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 10 மற்றும் 11வது நடைமேடை வழியாக மீண்டும் வழக்கம்போல ரயில் சேவை தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த பிப்ரவரி முதல் அமலில் இருந்த தற்காலிக அட்டவணை ரத்து செய்யப்படுகிறது என்றும் இன்று முதல் வழக்கமான வார நாட்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணை மீண்டும் அமலுக்கு வருகிறது என்றும் அறிவிக்கப்பட்டது.
மொத்தம் எத்தனை ரயில்கள்
அதன்படி, வார நாட்களில் சென்னை கடற்கரை - தாம்பரம் செங்கல்பட்டு மார்க்கத்தில் 106 ரயில்கள் இயக்கப்படும். மறுமார்க்கமாக, செங்கல்பட்டு தாம்பரம் - கடற்கரை ரூட்டிலும் 106 ரயில்கள் இயக்கப்படும். அதாவது இந்த வழித்தடத்தில் மொத்தம் 212 மின்சார ரயில்கள் இயக்கப்படும். அதேபோல ஞாயிற்றுக்கிழமை அட்டவணையில் சென்னை கடற்கரை- தாம்பரம்-செங்கல்பட்டு ரூட்டில் மொத்தம் மொத்தம் 190 ரயில்கள் இயக்கப்படும்.












Click it and Unblock the Notifications