“பெரிய விசில் போடு”.. மாநகர பஸ் கண்டக்டர்களுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் வழங்கும் செம பரிசு!
சென்னை: "சென்னை சூப்பர் கிங்ஸுக்கு பெரிய விசில் போடு" இதுதான் ஐபிஎல்லில் சிஎஸ்கேவின் கீதம். இப்போது, சென்னை மாநகர பஸ் கண்டர்களுக்கு "விசில்" வழங்க திட்டமிட்டுள்ளது சிஎஸ்கே நிர்வாகம்.
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா 17வது சீசன் உச்சகட்டத்தை எட்டி உள்ளது. ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் சிறப்பாக விளையாடி வருகிறது. இதுவரை சென்னை அணி 11 போட்டிகளில் விளையாடி 6-ல் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது.

புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆஃப் போட்டிகளுக்கு தகுதி பெறும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மட்டுமல்லாது சென்னைக்கும் இந்த ஐபிஎஸ் கொஞ்சம் ஸ்பெஷல். காரணம், கடந்த மார்ச் 22 ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்டமான தொடக்க விழா நிகழ்ச்சியுடன் ஐபிஎல் தொடங்கியது. வரும் மே 26ஆம் தேதி சென்னையில் தான் இறுதிப்போட்டி நடைபெற உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் விசிலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. சென்னை அணியின் தாரக மந்திரமாக 17 ஆண்டுகளாக ஒலித்து வருவது "விசில் போடு" என்ற கீதம் தான். சென்னை அணி களமிறங்கும் ஒவ்வொரு போட்டியின் போதும் ரசிகர்கள் விசில்களுடன் தான் களமிறங்குவார்கள். எனவே மைதானம் முழுவதும் விசில் சத்தம் விண்ணைப் பிளக்கும்.
இந்நிலையில், விசில் உடன் ஆத்மார்த்தமான உறவைக் கொண்ட சிஎஸ்கே அணி, விசில்களை அன்றாடம் உபயோகிக்கும் பேருந்து நடத்துநர்களுக்காக ஒரு சூப்பரான திட்டத்தை கையில் எடுத்துள்ளது. அதாவது சென்னை பெருநகரப் போக்குவரத்துக் கழகத்தின் மாநகர பஸ் கண்டக்டர்களுக்கு 8 ஆயிரம் தரமான உலோகத்தினால் ஆன விசில்களை வழங்க உள்ளது சிஎஸ்கே நிர்வாகம்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தங்களுக்கான "விசில்" சத்தத்தை இன்னும் அதிர வைக்கவும், பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் வகையிலும் மெட்டல் விசில்களை இலவசமாக வழங்க உள்ளது. எனவே இனி சென்னையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விசில் பட்டையைக் கிளப்பப் போகிறது.
இதுகுறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை நிர்வாக அதிகாரி கே.எஸ்.விஸ்வநாதன் கூறுகையில், "சென்னை மாநகர பஸ் கண்டக்டர்களுக்கு விசில் வழங்குவதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மகிழ்ச்சி அடைகிறது. இந்த விசில் எப்போதும் சி.எஸ்.கே மற்றும் சென்னையுடன் இணைந்துள்ளது. பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்க உலோக விசில் ஒரு சிறிய முயற்சி. இந்த விசில் நீண்ட காலம் நீடிக்கும்.
இந்த சீசனில் மாநகர போக்குவரத்து கழகம் உடனான எங்களின் பார்ட்னர்ஷிப்பால் ஏராளமான ரசிகர்கள் ஏற்கனவே பயன் அடைந்துள்ளனர். சென்னையில் ஐபிஎல் போட்டி நடக்கும் நாட்களில் டிக்கெட்டுகளுடன் ரசிகர்கள், அரசு மாநகர பஸ்களில் இலவசமாக பயணிக்கலாம். பொதுமக்கள் மற்றும் மாநகர பஸ் கண்டக்டர்களின் முகத்தில் புன்னகையை ஏற்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" எனக் கூறி உள்ளார்.
சென்னை சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டி நடைபெறும் நாளன்று ரசிகர்களின் வசதிக்காக சி.எஸ்.கே அணி நிர்வாகம், மாநகர் போக்குவரத்து கழகத்துடன் இணைந்து சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. அதன்படி சிஎஸ்கே போட்களின் போது, போட்டியை காண டிக்கெட் வைத்திருக்கும் ரசிகர்கள், போட்டி தொடங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பிருந்தே மாநகர பஸ்களில் (ஏ.சி அல்லாத பேருந்துகளில்) இலவசமாக பயணம் செய்யலாம்.












Click it and Unblock the Notifications