சென்னை மக்களே.. இந்த ரூட்ல போக முடியாது.. சுதந்திர தின கொண்டாட்ட ஒத்திகையால் போக்குவரத்து மாற்றம்!
சென்னை: சுதந்திர தின விழா கொண்டாட்டத்திற்கான ஒத்திகையை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. எனவே, சென்னையின் முக்கிய சாலைகளில் பயணிப்பவர்கள் இதை கண்டிப்பாக அறிந்துகொள்ள வேண்டும்.
சுதந்திர தினவிழா கொண்டாட்டம் வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி செயிண்ட் ஜார்ஜ் கோட்டை, தலைமை செயலகத்தில் நடைபெற உள்ளது. தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், கோட்டையில் தேசியக்கொடி ஏற்ற உள்ளார்.

இதனை முன்னிட்டு ஆகஸ்ட் 8, 11 மற்றும் 13 ஆகிய தினங்களில் ஒத்திகை நடைபெற உள்ளது. இந்த 3 நாட்களுக்கு காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை கீழ்கண்ட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
1. உழைப்பாளர் சிலை முதல் போர் நினைவுச் சின்னம் வரை அமையப் பெற்றுள்ள காமராஜர் சாலை, போர் நினைவுச் சின்னத்தில் இருந்து இந்திய ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வரை, அமையப்பெற்றுள்ள ராஜாஜி சாலை மற்றும் கொடிமரச்சாலை ஆகிய சாலைகளில் அனைத்து வாகனங்களின் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
2. காமராஜார் சாலையில் இருந்து ராஜாஜி சாலை வழியாக பாரிமுனையை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் உழைப்பாளர் சிலையிலிருந்து வாலாஜா சாலை, அண்ணாசாலை, மன்ரோ சிலை, முத்துசாமி பாலம், முத்துசாமி சாலை, ராஜா அண்ணாமலை மன்றம் சந்திப்பு மற்றும் வடக்கு கோட்டை பக்க சாலை (NFS Road) வழியாக பாரிமுனையை சென்றடையலாம்.
3. அண்ணா சாலையில் இருந்து பாரிஸ் கார்னர் நோக்கிச் செல்லும் வாகனங்கள் முத்துசாமி பாலம், முத்துசாமி சாலை, ராஜா அண்ணாமலை மன்றம், வடக்கு கோட்டை பக்க சாலை (NFS Road) வழியாக பாரிஸ் கார்னரை அடையலாம்.
4. ராஜாஜி சாலையில் இருந்து வரும் வாகனங்கள், தலைமைசெயலகம் வழியாக காமராஜர் சாலைக்கு செல்ல, பாரிஸ் கார்னர், வடக்கு கோட்டை பக்க சாலை (NFS Road), ராஜா அண்ணாமலை மன்றம், முத்துசாமி சாலை, முத்துசாமி பாலம், அண்ணாசாலை, மன்ரோ சிலை மற்றும் வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையை அடையலாம். அனைத்து வாகன ஓட்டிகளும் தங்களது ஒத்துழைப்பை நல்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications