சென்னையே விய(ர்)க்குது..போலீஸ்காரர் தலையில என்ன பாருங்க.. அதுபாட்டுக்கு சுத்துதே.. "குளிரும்" காக்கி
சென்னை: போக்குவரத்து போலீசாருக்கு சிறப்பு ஏற்பாடுகளை தமிழக அரசு செய்துள்ளது. இதையடுத்து, சென்னை போலீசார் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
வெயிலோ, மழையோ விடுமுறையின்றி போக்குவரத்தை கண்ணும் கருத்துமாக ஒழுங்குப்படுத்தி வருபவர்கள் போக்குவரத்து போலீசார்.. காலநேரமின்றி செய்யப்படும் இவர்களது பணி மகத்தானது...

இதனால், போக்குவரத்து போலீசாரின் நன்மைக்காக, தமிழக அரசும் இவர்களுக்கு சிறப்பு வசதிகளை செய்து தந்து வருகிறது. அதேபோல வெயில் காலத்தில், அரும்பாடு பட்டு டியூட்டி பார்க்கும் போக்குவரத்து போலீசாருக்கு, நீர் மோர், கூலிங்கிளாஸ் போன்றவை வழங்கப்படுகின்றன.. இதனால், வெயிலின் தாக்கத்தில் இருந்து தற்காத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சமீபத்தில், சேலம் மாநகர காவல் துறையில், போக்குவரத்துப் பிரிவில் பணிபுரியும் போலீஸார் கோடை வெயில் தாக்கத்தில் இருந்து தற்காத்துக் கொள்ளும்விதமாக கழுத்துப் பட்டை ஃபேனை, மாநகர காவல் ஆணையர் விஜயகுமாரி வழங்கியிருந்தார்.
போக்குவரத்து போலீசார்: இப்போது, சென்னையில் போக்குவரத்து போலீசாருக்கு ஒரு மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.. அதாவது, வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்காக ஏற்கனவே ஒரு தொப்பியை டிராபிக் போலீசார் அணிந்துள்ளனர்.. ஆனால், ஆந்திரா, குஜராத், மேற்குவங்க மாநிலங்களில், குளிர்ச்சி தரும் தொப்பி பயன்பாட்டில் உள்ளதாம்.
அதுபோலவே, நம்முடைய போலீசாருக்கும் குளிர்ச்சியான புதிய தொப்பி வாங்கப்பட்டிருக்கிறது.. சோதனை முறைக்காக, இப்போதைக்கு இந்த தொப்பியை ஒருசிலருக்கு மட்டுமே தந்துள்ளனர்..
ஹைலைட்: இந்த தொப்பியின் ஸ்பெஷாலிட்டி என்னவென்றால், தொப்பிக்குள்ளேயே, சிறிய மின்விசிறி பொருத்தப்பட்டிருக்குமாம்.. பார்ப்பதற்கு அப்படியே ஹெல்மெட் போலவே இருக்கிறது இந்த தொப்பி..
இதன் முன்பகுதியில் ஃபேன் பொருத்தப்பட்டுள்ளது.. இந்த ஃபேனை வைப்பதற்காகவே, பிளாஸ்டிக் போல வடிவமைத்திருக்கிறார்கள்.. சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரி உதவியுடன் இந்த மின்விசிறி செயல்படுகிறது. இந்த பேட்டரியை போலீசார் தங்கள் இடுப்பில் மாட்டிக்கொள்கிறார்கள். 900 கிராம் எடை கொண்டது இந்த தொப்பி.
மின்விசிறியில் இருந்து வெளியாகும் காற்று போலீசாருக்கு குளிர்ச்சியான சூழலை ஏற்படுத்துமாம்.. இப்போதைக்கு, வேப்பேரியில் உள்ள போக்குவரத்து சிக்னலில் இந்த தொப்பியை பயன்படுத்தி பெண் போலீசார் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
டபுள் குஷி: தொப்பி எப்படி இருக்கிறது? பயன்படுத்துவதற்கு வசதியாக இருக்கிறதா? என்று போலீசாரிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. போலீசார் சொல்லும் கருத்தின் அடிப்படையிலேயே, தொப்பியை அதிக அளவில் வாங்கி பயன்படுத்தவும் முடிவு செய்துள்ளார்களாம்.
இன்னொரு ஹைலைட்டும் காத்திருக்கிறது.. தொப்பியில் ஃபேன் இருப்பதை போலவே, சட்டையில் அணிந்து பயன்படுத்தப்படும் சிறிய கேமரா ஒன்றும் போக்குவரத்து போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ளது.. அரசின் இந்த சிறப்பு நடவடிக்கைகளால், போலீசார் "குளிர்ந்து"போய் உள்ளார்களாம்.












Click it and Unblock the Notifications