சென்னை மாநகர பஸ்களுக்கு அதிரடி செக்... ஆட்டோக்களையும் விட்டுவிக்கலையே.. ஆக்சனில் இறங்கிய போலீஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் மாநகர பஸ்கள் நடுரோட்டில் பயணிகளை ஏற்றி இறக்குவதற்கு கடிவாளம் போட்டு வருகிறார்கள் மாநகர போக்குவரத்து போலீசார். பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் நடுரோட்டில் பயணிகளை இறக்கிவிட்ட டிரைவர்களை கண்டித்த போலீசார், மீண்டும் இதுபோன்ற விதிமீறலில் ஈடுபட்டால் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று எச்சரித்தனர்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வாகன பெருக்கம் கடந்த 10 வருடங்களில் வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. அதற்கு தகுந்தாற் போல் சாலை கட்டமைப்பை இனிமேல் மாற்றியமைக்கவே முடியாது என்கிற நிலை உள்ளது. ஏனெனில் சாலைகள் இதற்கு மேல் அகலப்படுத்த முடியாது என்கிற அளவிற்கு பல சாலைகள் அகலப்படுத்தப்பட்டு விட்டது. தற்போதைய நிலையில் மக்களை பொதுபோக்குவரத்தை பயன்படுத்த ஊக்குவிக்கும் பொருட்டு மெட்ரோ ரயில் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது,.

Chennai Traffic police warns mtc bus drivers who dropped passengers in the middle of road

இதனால் சாலைகள் பல இடங்களில் குறுகிய அளவில் உள்ளன. இது ஒருபுறம் எனில் மழைநீர் வடிகால்வாய் பணி, மின் வாரிய கேபிள் அமைக்கும் பணி, குடிநீர் குழாய் அமைக்கும் பணி, பாதாள சாக்கடை அமைக்கும் பணி என சென்னையில் பல பகுதிகளில் சாலைகள் தோண்டப்பட்டு குறுகிய நிலையில் சாலைகள் காணப்படுகின்றன.

இதன் காரணமாக வாகனங்களால் வழக்கமான வேகத்தில் கூட செல்ல முடியாத சூழல் காணப்படுகிறது. இதையடுத்து சென்னை போக்குவரத்து போலீசார், ஒருவழிப்பாதை, சுற்றுவழிப்பாதை, பக்கத்தில் இரு சாலைகள் இருந்தால் வாகனங்களை மாற்றிவிடுவது, ஒருவேளை அதுவும் முடியாத நிலை ஏற்பட்டால், யூடர்ன் அமைப்பது, சில இடங்களில் யூடர்ன்களை தடுப்பது என்று பல விஷயங்களை செய்து, வாகனங்கள் தங்குதடையின்றி செல்ல நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இதற்காக கூகுள் நிறுவனத்துடன் இணைந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வாகனங்களின் எண்ணிக்கையை தினசரி கண்காணித்து, போக்குவரத்து மாற்றங்களை சென்னை போலீசார் செய்து வருகிறார்கள் . எந்த சிக்னல்களில் எவ்வளவு வாகனங்கள் நிற்கின்றன என்பதை கண்காணித்து, அதற்கு தகுந்தாற் போல் சிக்னல்கள் நேரத்தை மாற்றி அமைத்தும் போக்குவரத்து நெரிசல் குறைக்கப்படுகிறது.

ஆனாலும் ராங்சைடில் (ஒருவழிப்பாதையில்) இருசக்கர வாகனங்கள் செல்வது, ஆட்டோக்கள் செல்வது அதிகமாக உள்ளது. இதுபோல் வருவது விபத்திற்கு முக்கிய காரணமாக உள்ளது. இதேபோல் அரசு பஸ்கள் நடுரோட்டில் பயணிகளை ஏற்றி இறக்குவதாலும் சாலைகள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.இதற்கும் முற்றுப்புள்ளி வைக்க விரும்பிய சென்னை மாநகர போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் ஆர்.சுதாகர்,கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னை போக்குவரத்து காவல் உதவி ஆணையர்கள் முதல் இணை ஆணையர்கள் வரையிலான போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது அவர் சென்னை போக்குவரத்து போலீசாருக்கு சில முக்கியமான அறிவுறுத்தல்களை வழங்கினார். அதன்படி, அரசு பஸ்கள், ஆட்டோக்கள், பைக்குகள் போன்ற ரோட்டில் ஒழுங்கற்று சென்றால் அவற்றை உடனடியாக ஒழுங்குபடுத்த வேண்டும். பஸ்களை பொறுத்தவரை, பேருந்து நிறுத்தங்களில் மட்டுமே நின்று செல்ல வேண்டும். சாலைகளில் நடுநேராட்டில் நிறுத்த அனுமதிக்கக்கூடாது.

இதேபோல் சாலையை ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்தினால் உடனடியாக அவற்றை அப்புறப்படுத்த வேண்டும். விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது கடும் எடுக்க வேண்டும். மெட்ரோ ரயிலுக்கான வழித்தடம் அமைக்கும் பணியால் சாலைகள் குறுகலாக உள்ளது. எனவே அந்த பகுதியில் தேவையான மாற்றங்கள் செய்து போக்குவரத்தை சீர் செய்ய வேண்டும் என்று போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் ஆர்.சுதாகர் கூறியிருந்தார்.

இதன்படியே சென்னையில் போக்குவரத்து போலீசார் நேற்று அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். 'பீக் அவர்ஸ்' எனப்படும் பள்ளி மற்றும் அலுவலகம் செயல்படும், முடியும் நேரமான காலை மற்றும் மாலை வேளைகளில் சில ஆட்டோ ஓட்டுநர்கள், இருசக்கர வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்காமல் ஒருவழிப்பாதையில் செல்வது, சிக்னலை மீறுவது போன்ற செயல்களை அதிகம் செய்து வந்தனர். அந்த விவகாரத்தில் நேற்று அதிரடி நடவடிக்கை எடுத்தனர். ஒருவழிப்பாதையில் சென்றவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.சிக்னலை மீறி செல்பவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. போக்குவரத்து விதிகளை மீறிய ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் மீது நேற்று நடவடிக்கை எடுத்தனர்.

மேலும் பஸ் நிறுத்தங்களில் மாநகர பஸ்கள் முறையாக நிறுத்தப்படுகிறதா?, ஆட்டோக்களால் பஸ் நிறுத்தம் ஆக்கிரமிக்கப்படுகிறதா? என்பதை போக்குவரத்து போலீசார் தீவிரமாக கண்காணிக்கவும் செய்தனர் . பஸ் நிறுத்தத்தில் நிற்காமல் சில அடி தூரம் தள்ளி சென்று பஸ்சை நிறுத்திய டிரைவர்களை போலீசார் பல இடங்களில் கண்டிக்கவும் செய்தனர். சாலை விதிகளை மதிக்க வேண்டும். போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்த கூடாது என்றும் பயணிகளுக்கு சிரமத்தை அளிக்க கூடாது என்று அறிவுறுத்தினர். மீண்டும் இதுபோன்ற விதிமீறலில் ஈடுபட்டால் வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் டிரைவர்களை போலீசார் எச்சரித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+