வண்டலூர் டூ மீஞ்சூர் ரோடு.. அடுத்தடுத்து சம்பவம்! ஏற்கனவே விழிபிதுங்கும் சென்னை.. இப்ப இது வேறயா
சென்னை: வண்டலூர் - மீஞ்சூர் சாலையில் மீண்டும் ஒரு சம்பவம் நடந்து பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது.
வண்டலூரிலிருந்து மீஞ்சூர் பகுதி வரை 60.5 கிமீ தூரத்துக்கு வெளி வட்டச்சாலை 6 வழி சாலையாக போடப்பட்டுள்ளது.. இதனால், மீஞ்சூர்-வண்டலூர் சாலையில் கனரக வாகனங்கள் தடையின்றி செல்லலாம்.. அத்துடன் கனரக வாகனங்கள் நிறுத்துவதற்கும் இடம் தாராளமாகவே ஒதுக்கப்பட்டிருக்கிறது.

இந்த விசாலமான பகுதிகளில், வாரவிடுமுறை நாட்களில் பைக் ரேஸ், ஆட்டோ ரேஸ்கள் நடக்கின்றன. போலீசார் எவ்வளவுதான் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தபோதிலும் இதுபோன்ற ரேஸ்கள் நடந்துவிடுகின்றன.
இப்படிப்பட்ட சூழலில், கடந்த வாரம் மீஞ்சூர் - வண்டலூர் வெளிவட்ட சாலையில் நடந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயமடைந்தனர். எனவே, இந்த விபத்து செங்குன்றம் போலீசார் விசாரணையை துவங்கினர்.
ஆட்டோக்கள்: இதற்காக அந்த பகுதியிலுள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோதுதான் விபத்து நடந்த நேரத்தில், ஆட்டோ ரேஸ் நடத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. சம்பவத்தன்று மீஞ்சூர்-வண்டலூர் சாலையில் சுமார் 10-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் போட்டி போட்டுக்கொண்டு சாலையில் சீறிப்பாய, இந்த ஆட்டோக்களுக்கு பின்னாலேயே 20-க்கும் மேற்பட்ட பைக்குகளில் இளைஞர்கள் கத்தி கூச்சலிட்டபடியே செல்வதும் பதிவாகியிருந்தது.. இவர்களுடன் 2 கார்களும் பின்னாடியே சென்றிருக்கிறது.
இப்படி ஆட்டோ ரேஸ் நடந்துகொண்டிருந்தபோதுதான், அதில் ஒரு ஆட்டோ ஒன்று கவிழ்ந்துவிடவும், அதற்குபிறகு ஒவ்வொருவராக பைக்கில் வந்தவர்களும் அதன் மீது மோதி விழுந்து உள்ளனர். இதில்தான் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார்கள்.
வண்டலூர் சாலை: இந்த சம்பவம் அடங்குவதற்குள்ளாகவே குன்றத்தூர் அருகே வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகியிருக்கிறது..
வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்டச் சாலையில் திருமுடிவாக்கம் பகுதியில் சாலையில் நேற்று இரவு ஏராளமான வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது சாலையின் குறுக்கே திடீரென மாடு ஒன்று குறுக்கே ஓடியதால், அதன்மீது மோதாமல் இருப்பதற்காக, கார் ஒன்று பிரேக் அடித்துள்ளது. இதனால் காருக்கு பின்னால் வந்த வாகனங்கள் அடுத்தடுத்து ஒன்றன்பின் ஒன்றாக மோதியது. இதில் 4 கார்கள், ஒரு லோடு வேன் என மொத்தம் 5 வாகனங்கள் அப்பளமாய் நொறுங்கி விட்டது.
மாடுகள்: ஆனால், அதிர்ஷ்டவசமாக வாகனத்தில் பயணம் செய்தவர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இதையடுத்து அங்கு வந்த குரோம்பேட்டை போக்குவரத்து போலீசார், சாலையில் தடுப்புகளை அமைத்து சேதமடைந்த வாகனங்களை கிரேன் மூலம் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனால் வண்டலூர்-மீஞ்சூர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நேற்று இதே வண்டலூர்- மீஞ்சூர் வெளிவட்டச் சாலையில் மாடு ஒன்றின் மீது பைக் மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் மோகன் என்பவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்..
ஆட்டோ ரேஸ்: ஏற்கனவே ஆட்டோ, பைக் ரேஸ்களை இந்த பகுதியில் நடத்த தடை விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துவரும் நிலையில், இதே சாலையில் மாடுகளும் அதிகமாக சுற்றித்திரிந்து விபத்துகள் அதிகமாகி வருவது பொதுமக்களை கொந்தளிப்புக்கு ஆளாக்கி வருகிறது. எனவே, உயிரிழப்புகளை தடுக்க மாட்டின் உரிமையாளர்கள் மீது அபராதம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று மீண்டும் கோரிக்கைகளை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications