32.62 கோடி செலவு... ஜொலிக்கும் விக்டோரியா ஹால்! பழைய லேண்ட் மார்க்கை மீட்டு தந்த ஸ்டாலின்!
சென்னை: விக்டோரியா பப்ளிக் ஹால் மிகச் சிறப்பாகப் புனரமைக்கப்பட்டு, மீண்டு மக்கள் பயன்பாட்டிற்குத் திறந்துவிடப்பட உள்ளது. விரைவில் முதலமைச்சர் ஸ்டாலின் கையால் இதற்கான திறப்புவிழா நடைபெற உள்ளது.
வரலாற்றுச் சின்னமான இந்தக் கட்டடம் கிட்டத்தட்ட 32.62 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்படும் என்று கடந்த மார்ச் மாதம் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அது மட்டுமல்ல சென்னையில் உள்ள பல வரலாற்றுக் கட்டடங்கள் 'சிங்கார சென்னை2.0' திட்டத்தின் கீழ் புனரமைக்கப்படும் என்று அவர் அறிவித்திருந்தார்.

அதன்படி சென்னையிலுள்ள மெட்ராஸ் உயர்நீதிமன்றம், விக்டோரியா பப்ளிக் ஹால் போன்ற பல கட்டடங்களைப் புதுப்பிக்கும் பணி தொடங்கியது. பல வருடங்களாக அழுக்குப் படிந்துபோய் காட்சியளித்த பாரம்பரிய கட்டடங்கள், மீண்டும் இந்த ஆட்சியில் மறு உயிர்பெற்று வருகின்றன.
அறிவிப்பு வெளியாகும்போதே இந்த விக்டோரியா அரங்கம் எப்படிப் புதுப்பிக்கப்பட உள்ளது என்று ஒரு விளக்கம் படமும் மக்கள் பார்வைக்காக முன்வைக்கப்பட்டது.
இந்த ஹாலின் தரைதளத்தில் திறந்தவெளி கண்காட்சிக் கூடம் அமைக்கப்படும் என்றும் அதில் பொதுமக்கள் தங்களின் நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்வதற்கான வசதிகளும் செய்துதரப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது.
அதன்படி இப்போது இந்த அரங்கம் வடிவமைக்கப்பட்டு, திறப்பு விழாவுக்கான தயார் நிலையை எட்டி உள்ளது.
மேலும் முதல் மாடியில் நம் வரலாற்றுப் பெருமைகளை எடுத்துக்கூறும் வகையில் புகைப்படக் கண்காட்சி ஒன்றையும் அமைத்துள்ளனர். அதற்கு Chennai art and heritage museum என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அங்கே, ஆங்கிலேயர் காலத்தில் எடுக்கப்பட்ட படங்கள், சென்னை மாநகரத்தின் அந்தக் கால மேப், பழங்காலச் சிற்பங்கள், கல்வெட்டுகள் எனப் பல பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

கூடவே ஒரு அருங்காட்சியகம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் வைக்கப்பட்டுள்ள காட்சிப் பொருட்கள் 3 மாதத்திற்கு ஒருமுறை மாற்றப்பட உள்ளது. பார்வையாளர்கள் அடிக்கடி வந்துபோகும் இடமாக இதை மாற்ற இப்படி ஒரு யுக்தியைக் கையாண்டுள்ளது அரசு.
இந்த வசதிகள் தவிர, ஒரு கான்ஃபிரன்ஸ் அறையும் அமைக்கப்பட்டுள்ளது. அது சரி, இந்த விக்டோரியா ஹால் எங்கே இருக்கிறது என்கிறீர்களா? ரிப்பன் பில்டிங்குக்கும் சென்ட்ரல் ஸ்டேஷனுக்கும் நடுவில்தான் இது இருக்கிறது.
இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்கக் கட்டடம் பற்றிச் சிறப்பான தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் சென்னை வரலாறுகள் பற்றித் தொடர்ந்து எழுதிவரும் எழுத்தாளர் ஸ்ரீராம்.

"கடந்த 100 வருடங்களுக்கு முன்னால் இந்தக் கட்டடம்தான் சென்னையில் முக்கியமான இடம். அங்குள்ள அரங்கத்தில்தான் சென்னையில் பல முக்கியமான நிகழ்ச்சிகள் நடந்தன. 1882 ஆம் வருடம் சென்னை மாநகராட்சி ஒரு பொதுக்கூட்டம் நடத்தியது.
அதில், இந்த நகரத்திற்கு என்று ஒரு பொது அரங்கம் வேண்டும் என்று முடிவு எடுத்தது. அதற்கான தேவை இருப்பதைப் பலரும் உணர்ந்திருந்தனர். ஆகவே அதை அந்தத் திட்டத்தை அனைவரும் வரவேற்றனர்.
அதற்கு நிதியை எப்படித் திரட்டுவது என யோசித்த போது, சென்னையிலுள்ள பல செல்வந்தர்களிடம் பணம் வசூலித்து அதற்கான செலவை ஈடுகட்டலாம் என்றும் முடிவு செய்யப்பட்டது. அதற்காக இடம் தேர்வு செய்யவும் தீர்மானிக்கப்பட்டது.

அந்தக் காலத்தில் சென்ரல் ஸ்டேஷனுக்கு பக்கத்தில் மூர் மார்கெட் இயங்கி வந்தது. பலரும் தங்களுக்குத் தேவையான சாமான்களை இங்கே வந்துதான் வாங்கிக் கொண்டு போவார்கள். ஆகவே, அந்த இடம் மக்கள் புழக்கம் அதிகம் உள்ள இடமாகவும், அனைவருக்கும் தெரிந்த இடமாகவும் இருந்தது.
அதன் பக்கத்திலேயே நகராட்சிக்குச் சொந்தமான இடம் காலியாக இருந்தது. அதைத் தேர்வு செய்து அங்கே விகோரியா பப்ளிக் ஹால் கட்டுவதாக முடிவெடுத்தனர். அதற்காக 57 கிரவுண்ட் நிலத்தை எடுத்தார்கள். ஒரு கிரவுன் என்பது 2400 சதுரடி. அப்படியென்றால் மொத்தம் 1,36,800 சதுரடி. இவ்வளவு பெரிய இடத்தில் கட்டடத்தைக் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டன.
அரசு நிலத்தில் கட்டுவதால், அதற்கு வாடகை தரவேண்டும். அதற்காக ஒரு கிரவுண்டுக்கு எட்டணா வாடகை என முடிவு செய்தார்கள்.

சரியாக 1887 ஆம் வருடம் இங்கிலாந்து மகாராணி விக்டோரியா ராணியாகப் பட்டம் ஏற்று 50ஆவது ஆண்டு நிறைவு பெற்றிருந்தது. அதற்கான பொன்விழாவைக் கொண்டாடியது பிரிட்டிஷ் அரசு. இந்த விழா தொடங்கும் போது சரியாக இந்தக் கட்டடப்பணிகளும் நிறைவடைந்தன. அதனால், கட்டடத்திற்கு விக்டோரியா பப்ளிக் ஹால் என்று பெயர் சூட்டப்பட்டது. அதாவது விக்டோரியா பொது அரங்கம்.
இந்தக் கட்டடத்தைக் கட்டுவதற்கான வரைபடத்தைத் தயாரித்தவர் Robert Chisholm. இவர்தான் அந்தக் கட்டட கலைக்கான ஆர்கிடெக். இது மட்டும் இல்லை. சென்னையில் இதைப்போன்று சிவப்பு நிறக் கட்டடங்கள், அதாவது நீதிமன்றம் போன்ற பழைய கட்டடங்களுக்கு எல்லாம் இவர்தான் ஆர்கிடெக்.
இந்தக் கட்டடத்திற்கு ஒப்பந்ததாரராக இருந்தவர் தாட்டிகொண்ட நம்பெருமாள் செட்டி. இவர் ஒரு இந்தியர்" என்றவர் மேற்கொண்டு சில விசயங்களைப் பகிர்ந்து கொண்டார்.

"பிரம்மஞான சபை என ஒரு அமைப்பு சென்னை அடையாறு பகுதியில் இருக்கிறது. உலகம் முழுக்க உள்ள ஒரு மதம் இது. அதற்காகத் தலைமை அலுவலக சென்னையில்தான் உள்ளது. அந்த அமைப்பின் முதல் கூட்டம் இந்த விக்டோரியா பொது அரங்கில்தான் நடைபெற்றது. இது நடந்தது 1893இல்.
அடுத்து 1897ஆம் வருடம் சிகாகோவிலிருந்து விவேகானந்தர் இந்தியா திரும்பி வந்தபோது, இந்தக் கட்டடத்தில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு சொற்பொழிவு செய்துள்ளார். அந்தக் கூட்டத்தில் 10 ஆயிரம் பேர் கலந்துகொண்டு அவரது பேச்சைக் கேட்டுள்ளனர். வந்தவர் அனைவரிடம் இருந்து 2 ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது.

சென்னைக்கு சினிமா என்பது 1896 ஆம் வருடம்தான் அறிமுகமானது. டி.ஸ்டீஃபன் என்பவர் மெட்ராஸ் போட்டோகிராஃபி ஸ்டோர் என்று ஒரு கடையைச் சென்னையில் நடத்து வந்தார்.
அவர் ஒரு புராஜெக்டரை விலைக்கு வாங்கி, 1896 டிசம்பர் 8 ஆம் தேதி இந்த அரங்கில் வைத்துத்தான் சினிமா என்றால் என்ன என்று விளக்கிக்காட்டினார். இன்றைக்கு சினிமாவின் தலைநகரங்களில் ஒன்றாகச் சென்னை மாறியுள்ளது.
இதைவிட எல்லாம் சிறப்பான ஒருவர் இங்கே வந்துள்ளார். 1915 ஆம் வருடம் ஆப்பிரிக்காவிலிருந்து வந்த ஒரு குஜராத்தி வழக்குரைஞர் இங்கே சொற்பொழிவு நடத்தினார். அவர் பெயர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. பின்னால் அவர் மகாத்மா காந்தியாக இந்தியாவையே சுற்றி வந்தார்" என்று பல சுவாரஸ்ய கதைகளை விளக்கிச் சொன்னார்.

நீதிக் கட்சிக்கு முன்னோடியான தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் முதல் கூட்டம் இங்குதான் நடந்தது. 1916-ல் இந்தக் கூட்டம் நடந்தது. அதுதான் பின்னர் நீதிக்கட்சி, திராவிடர் கழகம் என வளர்ந்தது.
இவர் சொன்னதைப் போன்று இந்தக் கட்டடத்திற்கு இன்னொரு சிறப்பு இருக்கிறது. இந்த அரங்கில் 1919 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருகூட்டத்தில் கலந்துகொண்டு பாரதியார் சொற்பொழிவு செய்தார்.

இவ்வளவு வரலாற்று முக்கியத்துவம் கொண்ட இந்த அரங்கம் இவ்வளவு காலம் பாழடைந்து கிடந்தது. இதன் பெருமையை உணர்ந்துதான் இப்போது முதல்வர் ஸ்டாலின் அதை மீண்டு மீட்டுக் கொடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications