"வாட்டிய தனிமை.." 2 கோடி சொத்தை கேன்சர் மையத்திற்கு தந்துவிட்டு மரணித்த பெண்! சென்னையில் நெகிழ்ச்சி
சென்னையில் உயிரிழக்கும் போதும் பெண் ஒருவர் மற்றவர்களுக்கு பேருதவி செய்துள்ளார்.
சென்னை: சென்னையில் குடும்பத்தில் இருக்கும் அனைவரும் உயிரிழந்துவிட்ட நிலையில், பெண் ஒருவர் தான் இறக்கும் போது தனது 2 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை கேன்சர் மையத்திற்கு எழுதி வைத்துவிட்ட மறைந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த உலகத்தில் நாம் என்ன தான் சம்பாதித்தாலும் கடைசியில் எதையும் எடுத்துச் செல்லப்போவதில்லை. பேராசை கொண்டு பணத்தை முறைகேடாகச் சேர்ப்பவர்களுக்கு இதைத்தான் அட்வைசாக சொல்வார்கள்.
என்ன தான் பணத்தைக் கோடி கோடியாகச் சேர்த்தாலும் நாம் இறந்தால் அது எதுவுமே பயன் தராது. இதனால் வாழும் காலங்களிலேயே நாம் நம்மால் முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.

சென்னை
இதனிடையே சென்னை அடுத்துள்ள ஆவடியில் மரணிக்கும் போதும் பெண் ஒருவர் மற்றவர்களுக்கு உதவிய நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது. சென்னை அடுத்துள்ள ஆவடி காமராஜ் நகரில் மகிழம்பு தெருவைச் சேர்ந்தவர் சுந்தரி பாய்.. 54 வயதான இவர் கடந்த பிப். 17ஆம் தேதி மரணமடைந்துவிட்டதாக அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக விசாரணையையும் தொடங்கினார்,

அடுத்தடுத்து உயிரிழப்பு
சுந்தரி பாய் அந்த வீட்டில் அவரது அக்கா ஜானகி என்பவருடன் வசித்து வந்துள்ளார். அங்கே இருவரும் மட்டுமே தனியாக வசித்துள்ளனர். இதனிடையே ஜானகிக்கு திடீரென கடந்த மாதம் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு உரியச் சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனில்லாமல் அக்கா ஜானகி கடந்த 14ஆம் தேதி உயிரிழந்தார். அவர் உயிரிழந்த சில நாட்களிலேயே சுந்தரியும் உயிரிழந்த நிலையில், சந்தேகமடைந்த போலீசார், அவரது வீட்டைச் சோதனை செய்தனர்.

குடும்பத்தில் அனைவரும் மரணம்
போலீசார் மற்றும் மற்றும் வருவாய்த் துறையினர் இணைந்து சுந்தரி வீட்டைச் சோதனை செய்தனர். அப்போது அங்கே கடிதம் ஒன்றை அவர்கள் கண்டுபிடித்தனர். அந்த கடிதத்தில், "எங்கள் அப்பா, அம்மா மாரடைப்பால் 2000ஆம் ஆண்டிலேயே உயிரிழந்துவிட்டனர். 2013, 2014 ஆண்டுகளில் என் அக்கா, தம்பி இருவரும் கேன்சரால் அடுத்தடுத்து உயிரிழந்துவிட்டனர். இதனால் நானும் எனது அக்கா ஜானகியும் மட்டும் 10 ஆண்டுகள் இங்கே வாழ்ந்து வந்தும். நாங்கள் தனிமையில் தான் இருந்தோம்.

சொத்துகள் தானம்
இந்தச் சூழலில் கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி எது அக்காயும் ஜானகியும் உடல்நலக்குறைவால் மரணமடைந்துவிட்டார்.. அவரும் போன பிறகு என்னால் இந்த வீட்டில் தனிமையில் இருக்க முடியவில்லை. இப்போது எங்கள் வீட்டில் 90 சவரன் நகை இருக்கிறது. மேலும், தபால் அலுவலக வங்கியில் 30 லட்ச ரூபாயும், இந்தியன் வங்கியில் எங்கள் பெயரில் 30 லட்ச ரூபாயும் இருக்கிறது. இது மட்டுமில்லாமல் நாங்கள் வாழ்ந்த வீட்டையும் சேர்த்து காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா கேன்சர் மையத்திற்குக் கொடுத்துவிடுங்கள்" என்று அவர் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

வருவாய் துறைக்கு ஒப்படைப்பு
சுந்தரி பாய்க்கு வாரிசுகள் யாரும் இல்லை. இதனால் அவரது சொத்துகளை வருவாய்த் துறையிடம் ஒப்படைக்க முடிவு செய்தனர். அதன்படி, 54 சவரன் தங்க நகைகள், பணம், வீடு பத்திரம் உள்ளிட்டவற்றை ஆவடி போலீசார் ஆவடி துணை தாசில்தாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து அந்த சொத்துகளை வருவாய்த்துறை அதிகாரிகள் ஆவடி கருவூலத்தில் பாதுகாப்புடன் வைத்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நகைகள் மாயம்?
அதேநேரம் அந்த பெண் உயிரிழக்கும் போது எழுதிய கடிதத்தில் 90 சவரன் நகை எனக் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், போலீசாரோ 54 சவரன் நகைகளை மட்டுமே வருவாய்த் துறையிடம் ஒப்படைத்துள்ளனர். மீதி 36 சவரன் நடை என்ன ஆனது. அது எங்கே இருக்கிறது. திடீரென மரமாகக் குறைந்தது எப்படி என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது. எனவே, போலீசார் இது குறித்தும் விசாரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications