'விரக்தி'.. ஆசைப்பட்ட பெண்ணுக்கு தள்ளிப்போன விவாகரத்து.. சென்னை இளைஞர் எடுத்த விபரீத முடிவு
சென்னை: சென்னை திருவொற்றியூரில் விவாகரத்து ஆகாத பெண்ணை திருமணம் செய்ய இருந்த நிலையில், விவாகரத்து வழக்கு தள்ளிப்போனதால் விரக்தி அடைந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை திருவொற்றியூர் தியாகராஜபுரத்தைச் சேர்ந்த 25 வயதாகும் யுகேஷ்குமார், ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், திருமணமாகி, கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விட்டு பிரிந்து விட்டார். தற்போது யுகேஷ்குமார் வீடு அருகில் தான் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். அந்த இளம் பெண் விவாகரத்து கோரி தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் விவாகரத்து கேட்டு வழக்கு தொடரந்துள்ள அந்த இளம்பெண்ணை, யுகேஷ்குமார் திருமணம் செய்து கொள்ள விரும்பி இருக்கிறார். தனது விருப்பத்தை பெற்றோரிடம் தெரிவிக்க, இருதரப்பு குடும்பத்தினரும் இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்திருக்கிறார்கள்.
இதற்காக கடந்த 11-4-22 அன்று இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. வருகிற மே மாதம் 25-ந்தேதி இவர்களுக்கு திருமணம் நடைபெற இருந்தது. அதற்குள் வழக்கு முடிந்து விவாகரத்து கிடைத்துவிடும் என எதிர்பார்த்தார்கள். அடுத்த மாதம் திருமணம் நடைபெற வேண்டிய நிலையில், அந்த பெண்ணுக்கு கணவருடனான விவாகரத்து வழக்கு இப்போதைக்கு முடிவுக்கு வரவிலலை. நீதிமன்றதில் வழக்கு தள்ளிப்போனது.
இதனால் யுகேஷ்குமார் விரக்தி அடைந்தார்.ஏனெனில் தனக்கு விவாகரத்து கிடைத்தவுடன் திருமணம் செய்து கொள்ளலாம் என அந்த பெண், சில தினங்களுக்கு முன்பு யுகேஷ்குமாரிடம் கூறினார். ஆனால் விவாகரத்து கிடைக்கவில்லை. இதனால் யுகேஷ்குமாருக்கும், அந்த பெண்ணுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டிருக்கிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த யுகேஷ்குமார், ஞாயிற்றுக்கிழமை வேலைக்கு போகாமல் வீட்டிலேயே இருந்து விட்டார்.
இந்த நிலையில் ஞாயிறு மாலை வீட்டின் முதல் மாடியில் உள்ள யுகேஷ்குமார் அறை கதவு நீண்டநேரமாகியும் திறக்கப்படாமல் மூடி கிடந்தது. இதை பார்த்து சந்தேகம் அடைந்த பெற்றோர், மாடிக்கு சென்று பார்த்துள்ளனர்.
அங்கு யுகேஷ்குமார் மின்விசிறியில் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவரை மீட்டு 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து பார்த்தபோது யுகேஷ்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுபற்றி திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருவொற்றியூரில் விவாகரத்து ஆகாத பெண்ணை மணக்க இருந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்கொலை எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வல்ல. தற்கொலை செய்யும் மனநிலை வந்தால் அரசின் உதவி எண்ணான 104க்கு அழையுங்கள்.












Click it and Unblock the Notifications