குடலிறக்க அறுவைச் சிகிச்சை எதிரொலி... காரிலிருந்து இறங்க சிரமப்பட்ட முதலமைச்சர்..!
சென்னை: குடலிறக்க அறுவைச் சிகிச்சை எதிரொலியாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காரிலிருந்து இறங்குவதற்கு சிரமப்பட்டிருக்கிறார்.
காரில் இருந்து எப்போது இறங்கினாலும் விறுவிறுவென நடையை கட்டும் முதலமைச்சர், இன்று மெதுவாகவே நடந்தும் சென்றிருக்கிறார்.
அறுவைச் சிகிச்சைக்கு பிறகு மருத்துவர்கள் ஓய்வில் இருக்க வலியுறுத்தியும் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் தயாரிப்பது குறித்து தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் அவர் பங்கேற்றிருக்கிறார்.

கருத்துக் கேட்பு
தூத்துக்குடியில் இயங்கி வரும் வேதாந்தா நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையில், ஆக்ஸிஜன் உற்பத்தி தொடர்பாக கலந்து ஆலோசிக்க தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தியது. இந்தக் கூட்டத்திற்கு தலைமையேற்க வேண்டிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அறுவைச் சிகிச்சைக்கு பின் எடுக்க வேண்டிய ஓய்வையும் ஒதுக்கி வைத்துவிட்டு காலை 9.30 மணிக்கெல்லாம் கோட்டைக்கு வந்துவிட்டார்.

காரிலிருந்து இறங்க
தலைமைச் செயலகத்திற்குள் எப்போதும் நிற்கும் இடத்தில் அவரது கார் வந்து நின்றவுடன் அதிலிருந்து இறங்குவதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிரமப்பட்டதை உணர முடிந்தது. கார் கதவை பிடித்தபடி அவர் இறங்கியதும், பின்னர் மெதுவாக நடந்து சென்றதும் அங்கிருந்தவர்கள் மத்தியில் விவாதத்தை எழுப்பியது.

நேரடியாக அழைப்பு
ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடர்பான விவகாரம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் தான் அவர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார். மேலும், கொரோனா பரவல் அச்சம் காரணமாக முதலில் காணொலி வாயிலாக இந்தக் கூட்டத்தை நடத்த அதிகாரிகள் திட்டமிட்ட நிலையில், முதலமைச்சர் தான் நேரடியாக அழைத்துப் பேசி முடிவெடுப்போம் என அவர்களிடம் கூறியிருக்கிறார்.

அமைச்சர்கள்
இதனிடையே அனைத்துக் கட்சி கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், விஜயபாஸ்கர் மற்றும் தமிழக டிஜிபி திரிபாதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கூட்டம் தொடங்குவதற்கு முன்னர் முதலமைச்சரை சந்தித்த ஒரு சில உயரதிகாரிகள் மட்டும் அவரது உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர்.












Click it and Unblock the Notifications