மனுநீதி சோழனின் 'ஆராய்ச்சி மணி'.. ஊராட்சித் துறை புகார்களை கூற 'ஊராட்சி மணி'.. பலே முதல்வர்
சென்னை: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் நடைபெறும் புகார்களை தெரிவிக்க 'ஊராட்சி மணி' என்ற அழைப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஊராட்சி மணி திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். மனுநீதி சோழ மன்னனின் ஆராய்ச்சி மணி திட்டத்தை மையமாக வைத்து இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு மக்களுடன் நேரடி தொடர்பை ஏற்படுத்த பல்வேறு திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. துறை ரீதியான புகார்களை தெரிவிக்க முதல்வர் செல் இணைய தளம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் லட்சக்கணக்கானோர் புகார்களை தெரிவித்து வருகின்றனர்.

இணைய தளங்களில் புகார்களை பதிவு செய்ய முடியாத கிராம பொதுக்களுக்காக புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களின் புகார்களை தெரிவிக்க " ஊராட்சி மணி " திட்டத்தை அறிவித்தது தமிழக அரசு. இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககத்தில் புகார் தீர்க்கும் பொருட்டு உதவி மையத்தினை அமைத்திட தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பாக ஊரக வளர்ச்சி ஊராட்சி இயக்ககத்தில் "ஊராட்சி மணி" அழைப்பு மையம் மற்றும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த "ஊராட்சி மணி" அழைப்பு மையத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊராட்சிகளில் வசிக்கும் பொது மக்கள் தங்களின் புகார்களை தெரிவிக்கும் விதமாக மைய அழைப்பு எண் "155340" வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் தொடர்பு அலுவலராக ( Nodal Officer ) மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ( வார்ச்சி ) நியமிக்கப்பட்டுள்ளது. இந்த ஊராட்சி மணி அழைப்பு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
ஊராட்சி மணி என்ற பெயர், மனுநீதிச் சோழனின் கதையை முன்னோடியாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. குறைகளை உடனடியாகத் தீர்ப்பதை இது உறுதி செய்கிறது. மக்களுக்கு பாரபட்சமற்ற, சமமான சேவையை வழங்கும் வகையில் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக ஊரக வளர்ச்சி இயக்குநரகத்தில் கட்டணமில்லா சேவை தொடங்கப்படுகிறது. அழைப்பு மைய நிர்வாகி மூலமாகவோ, இணையதளம் வாயிலாகவோ குறைகளை உடனடியாக தீர்க்கும்வகையில், உரிய செயல்பாடுகள் முன்னெடுக்கப்படும்.
இதுதவிர, சமூக வலைதளங்கள் மூலமும் குறைகள் பெறப்பட உள்ளன. புகார்களின் தீவிரத்தன்மை அடிப்படையில் அவை வகைப்படுத்தப்பட்டு, உரிய தீர்வு காணப்படும். அதேபோல, சமூக ஊடகங்கள் மூலம் பெறப்படும் புகார்களும் குறைதீர் மையத்தில் ஒருங்கிணைக்கப்பட்டு, அவற்றுக்குத் தீர்வுகாண உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். புகார்களை நேரடி அழைப்பு மையம், வலைதளம், செயலி வாயிலாகவும் பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நீதி தவறாத மன்னன் மனுநீதி சோழன் .. நேர்மைக்கும், நீதிக்கும் பெயர்பெற்றவன். பாரபட்சமின்றி தீர்ப்பு வழங்குபவன். அவனது அரசவை வாயிலில் ஆராய்ச்சி மணி எனப்படும் பெரிய மணி ஒன்று கட்டப்பட்டிருக்கும். யாருக்கு எந்த குறை என்றாலும் அந்த மணியை அடித்தால், அவ்வோசை மன்னனின் அறையில் எதிரொலிக்கும். உடனே மன்னனே நேரே வந்து மணி அடித்தவரின் குறை தீர்ப்பான்.
அவ்வாறு ஒருமுறை ஆராய்ச்சி மணி ஒலிக்கக் கேட்ட மன்னன் , அது யார் என்று பார்த்த போது பசு ஒன்று தன் கொம்பால் முட்டி மணி அடிப்பதைக் கண்டான். விசாரித்ததில், மன்னனின் மகனது தேர்ச்சக்கரத்தில் மாட்டி அந்த பசுவின் கன்று உயிரை விட்டு விட்டதை அறிந்தான்
கன்றை இழந்த பசுவிற்கு நீதி கிடைக்க வேண்டுமானால் குற்றவாளியான தன் ஒரே மகனுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று எண்ணி இளவரசனுக்கு மரண தண்டனை விதித்து, தாமே தேரை ஓட்டி சென்று மகனைக் கொன்று, பசுவிற்கு நீதி கிடைக்கச் செய்தான் என்று நாம் புத்தகங்களில் படித்திருப்போம். அதுபோல மக்களின் குறைகளை நிவர்த்தி செய்யவே இந்த ஊராட்சி மணி திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications