உதயநிதியின் தந்தையாக மகிழ்ச்சி.. தலைவனாக பெருமை.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு!
சென்னை: திமுக இளைஞரணி செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், இளைஞரணியின் செயல்பாடுகளால் உதயநிதி தந்தையாக மகிழ்ச்சியடைவதாகவும், கட்சியின் தலைவனாக பெருமையடைவதாகவும் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இளைஞரணி நிகழ்ச்சியில் திமுக இளைஞரணிக்காக உருவாக்கப்பட்டுள்ள செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். அதனைத் தொடர்ந்து திராவிட மாடல் பயிற்சி பாசறை 2-யும் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், நான் பிறந்த வீட்டிற்கு வந்திருக்கிறேன். பிறந்த வீடு என்பதோடு, வளர்த்த வீட்டிற்கு வந்திருக்கிறேன். இன்னும் சொல்லப் போனால், வளர்ந்து கொண்டிருக்கும் வீட்டிற்கு வந்திருக்கிறேன். இளைஞரணியின் செயல்பாடுகளால் உதயநிதியின் தந்தையாக இருந்து மகிழ்ச்சியடைகிறேன். ஆனால் ஒரு தலைவனாக இருந்து பெருமைப்படுகிறேன் என்று பாராட்டு தெரிவித்துள்ளார்.

உதயநிதியை கண்காணிக்கிறேன்
தொடர்ந்து, இளைஞரணியின் செயலாளராக பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டது. ஆனால் முதலமைச்சரை ஒரு நிகழ்ச்சிக்கும் அழைக்கவில்லை என்று உதயநிதி ஸ்டாலின் பேசியதை குறிப்பிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஏன் அழைக்கவில்லை என்று கேள்வி எழுப்பியது தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் உதயநிதியின் செயல்பாடுகளை கண்காணித்து வருகிறேன். சமூக ஊடகங்களில் உதயநிதி பற்றி நல்ல செய்திகளும், கேலி செய்து விமர்சனம் செய்த செய்திகளும் வருகின்றன.

ஒரு செங்கல்
திமுக இளைஞரணியின் செயலாளராக பொறுப்பேற்று மூன்றரை ஆண்டுகளில் சிறப்பாக பணிகளை உதயநிதி ஸ்டாலின் செய்துள்ளார். திமுகவில் பல்வேறு அணிகளும், அமைப்புகளும் இருந்தாலும், சிறந்த அணியாக இளைஞரணிக்கு தான் முதலிடம். நான் பணியாற்றிய போதும் அப்படிதான். இப்போதும் அப்படியே தொடர்கிறது. நாடாளுமன்றத் தேர்தலை பற்றி சொல்ல வேண்டுமென்றால் ஒரு செங்கல் தான். அதன் தாக்கம் பற்றி நான் விளக்க வேண்டிய அவசியமில்லை. அதேபோல் எதிர்க்கட்சியாக இருந்த போது, நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டிய பணிகளை முன்னெடுத்தார்.

திமுக ஆட்சி
அதேபோல் கடற்கரைக்கு மாற்றுத்திறனாளிகள் செல்வதற்கு ஏதுவாக மரப்பலகை அமைக்க முக்கியக் காரணமாக இருந்தவர் உதயநிதி ஸ்டாலின். 234 தொகுதிகளிலும் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டத்தை நடத்தி முடித்திருப்பது சாதனையாக பார்க்கிறேன். திமுக பேசி பேசி வளர்ந்த கட்சி. 50 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாடு எப்படி இருந்தது, திமுக ஆட்சிக்கு வந்த பின் எப்படியெல்லாம் மாறி இருக்கிறது என்பதை இளைஞர்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

தமிழகம், தமிழ்நாடு
தற்போது நவீன வகையில் சமூக வலைதளங்களில் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. அதனை பயன்படுத்தி நம் வளர்ச்சியை தடுக்க, நம்மை ஒழிக்க திட்டமிட்டு பிரச்சாரம் நடந்து வருகிறது. அதனை முறியடிக்க நிர்வாகிகளாலும், தொண்டர்களாலும் மட்டுமே முடியும். அதற்காக தான் இளைஞரணி செயலி, திராவிட பாசறை கூட்டம் உள்ளிட்டவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். முன்னதாக தமிழகம் என்று உச்சரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பின்னர் தமிழ்நாடு என்று பேசினார். இதற்கு தொண்டர்கள் மத்தியில் பலத்த கரகோஷம் எழுந்தது.












Click it and Unblock the Notifications