அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.. மம்தா பானர்ஜி விரைந்து குணமடைய முதல்வர் ஸ்டாலின் விருப்பம்!
சென்னை: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சென்ற கார் விபத்துக்குள்ளான செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்ததாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இன்று பர்த்வானில் நடந்த கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட பின்பு காரில் கொல்கத்தாவுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவர் கான்வாய் செல்லும் வழியில் எதிர்பாராத விதமாக மற்றொரு கார் குறுக்கே வந்தது. திடீரென எதிரே வந்த காரில் மோதாமல் இருக்க, மம்தா பானர்ஜியின் கார் ஓட்டுநர் உடனடியாக பிரேக் போட்டார்.

சடன் பிரேக் போட்டதால் முதல்வர் மம்தா பானர்ஜியின் நெற்றி, வேகமாக மோதியது. இதில் அவரது நெற்றியில் காயம் ஏற்பட்டது. எனினும், உடனடியாக காரை நிறுத்தாமல் அங்கிருந்து கிளம்பினர். இந்த விபத்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்த விபத்து குறித்து வேதனை தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், "மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சென்ற கார் துரதிர்ஷ்டவசமாக விபத்துக்குள்ளான செய்தி அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். காயமடைந்த அவர் விரைந்து நலம் பெற விழைகிறேன். நல்ல ஆரோக்கியத்துடன் விரைவாக உடல் நலம் தேற விழைகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications