ஒரே டேபிளில்.. ஓபிஎஸ்ஸுடன் அமர்ந்து ஸ்னாக்ஸ் சாப்பிட்ட ஸ்டாலின்.. புது கலாச்சாரம்!
சென்னை: முதல்வராக பதவியேற்று முடித்தவுடன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் இணைந்து விருந்தில் கலந்து கொண்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அப்போது முன்னாள் சபாநாயகர் தனபால், முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோருடன் இணைந்து அவர் சாப்பிட்ட காட்சி வித்தியாசமாக இருந்தது.
பல மாநிலங்களில் ஆளுங்கட்சித் தலைவர்களும், எதிர்க்கட்சித் தலைவர்களும் ஒன்றாக பேசுவது, சாப்பிடுவது எல்லாம் மிக மிக சகஜமானது. பக்கத்து மாநிலமான கேரளாவில் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவரும் ரொம்ப இயல்பாக பழகுவார்கள்.
Recommended Video

கேரளா மட்டுமல்லாமல் கர்நாடகத்திலும் கூட இது சகஜமானதுதான். மாநிலப் பிரச்சினை என்று வந்தால் ஒன்று கூடி விடுவார்கள். கொஞ்சம் கூட தயங்கவே மாட்டார்கள். ஆனால் தமிழகத்தில் மட்டும் இது, இதுவரை மக்களுக்கு எட்டாத கனவாகவே இருந்து வருகிறது.

விருந்தில் கண்ட வித்தியாசம்
இந்த நிலையில் இன்று முதல்வர் பதவியேற்பு விழாவுக்குப் பின் நடந்த விருந்தின்போது வித்தியாசமான காட்சிகளைக் காண முடிந்தது. முதல்வர் பதவியேற்று முடித்ததும், ஆளுநர் விருந்தளித்துக் கெளரவித்தார். அப்போது ஒரு டேபிளில் ஆளுநர் புரோகித், முதல்வர் மு.க.ஸ்டாலின், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் விருந்து சாப்பிட்டனர்.

ஒரே டேபிளில்
அதே மேடையில் துரைமுருகனுக்கு அருகில் ஓ.பன்னீர் செல்வம் அமர்ந்திருந்தார். அவருக்கு அடுத்து, அதாவது ஸ்டாலினுக்கு அருகே தனபால் அமர்ந்து சாப்பிட்டார். இந்தக் காட்சிதான் இப்போது இணையதளத்தில் வைரலாகியுள்ளது. கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் சட்டசபையில் பல அனல் பறக்கும் காட்சிகள் நடந்தேறின. சபாநாயகர் தனபால் உத்தரவின் பேரில் அவைக் காவலர்களால் ஸ்டாலின் பலமுறை அப்புறப்படுத்தப்பட்ட காட்சிகளையும் கண்டது தமிழகம்.

அது அப்போ.. இது இப்போ
அவைக் காவலர்கள் குண்டுக்கட்டாக தூக்கி வந்தபோது சட்டை கிழிந்துபோன காட்சியையும் தமிழகம் கண்டது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓ.பி.எஸ்ஸை. கடுமையாக விமர்சித்தவர் மு.க.ஸ்டாலின். ஆனால் இன்றைய நிகழ்வில் இவர்கள் அத்தனை பேரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டது வித்தியாசமாக இருந்தது. இந்த புதிய கலாச்சாரம் தொடர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமும் கூட.

கூடுங்கள் தலைவர்களே
இப்படி விருந்து சாப்பிடுவதற்கு மட்டும் ஒன்று கூடாமல் கொரோனா ஒழிப்பிலும் அனைத்துத் தலைவர்களும் இணைந்து செயல்பட வேண்டும். மக்களுக்காகத்தான் தலைவர்கள். எனவே அவர்களுக்காக ஒன்று கூடுவதில் எந்த சங்கோஜமும், தயக்கமும் தேவையில்லை என்பதை தலைவர்கள் உணர்ந்து புதிய பாதையை போட்டுக் காட்ட வேண்டும். அது இவர்களுக்கு மட்டுமல்ல, இவர்களை நம்பியிருக்கும் மக்களுக்கும் நல்லது.












Click it and Unblock the Notifications