டி.எம்.செளந்தரராஜன் சாலை.. பெயர்ப் பலகையை திறந்து வைத்த மு.க.ஸ்டாலின்.. மாலையில் இசைக் கச்சேரி!
சென்னை: டி.எம்.சௌந்தரராஜன் சாலை என்ற பெயர்ப் பலகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலியில் இன்று திறந்து வைத்துள்ளார். மந்தைவெளி மேற்கு வட்டச் சாலை டிஎம்.சௌந்தரராஜன் சாலை என மாற்றப்பட்டதையடுத்து பெயர்ப் பலகை திறக்கப்பட்டுள்ளது.
பின்னணிப் பாடகர் டி.எம்.சௌந்தரராஜன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னையில் அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள மந்தைவெளி மேற்கு வட்டச் சாலைக்கு, டி.எம்.சௌந்தரராஜன் சாலை என புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த சாலையின் பெயர்ப் பலகையை இன்று காலை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.

இன்று இசைக் கச்சேரி
இதனைத் தொடர்ந்து, டி.எம்.சௌந்தரராஜன் அவர் பாடிய புகழ்பெற்ற பாடல்களை நினைவுகூரும் வகையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில், நாளை மாலை 5 மணியளவில் மாபெரும் இன்னிசைக் கச்சேரி நடைபெறவுள்ளது. இதில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சென்னை மாநகராட்சி மேயர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள். இந்நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம்.

முதல் பாடல் எது?
தமிழ் திரைப்பட பின்னணிப் பாடகர் டி.எம்.சௌந்தரராஜன் 1923 ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தார். தனது இளம் வயதிலேயே இசைப் பயிற்சி பெற்று இசை ஞானத்தை வளர்த்தார். தமிழ்த் திரையுலகில் 1950 ஆம் ஆண்டு வெளியான கிருஷ்ண விஜயம் திரைப்படத்தில் "ராதை நீ என்னை விட்டுப் போகாதேடி" என்ற பாடல்தான் அவர் குரலில் ஒலித்த முதல் பாடல் ஆகும்.

முத்திரைப் பதித்த டி.எம்.செளந்தரராஜன்
அன்று முதல் அரை நூற்றாண்டு காலம் தமிழ்த் திரையுலகில் சிறப்புமிக்க பாடகராகத் திகழ்ந்தார். இதனைத் தொடர்ந்து, திரையுலகில் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட பாடல்களை பாடி தமிழக மக்கள் அனைவரின் உள்ளங்களில் இடம் பிடித்தார். அவருடைய குரல் வளம், இசை ஞானம் மூலம் தனித்துவமான பாடல்களை பாடி திரையிசை வரலாற்றில் முத்திரைப் பதித்தவர் டி.எம்.சௌந்தரராஜன்.

முதல்வருக்கு நன்றி
கருணாநிதியால் 1970 ஆம் ஆண்டு "ஏழிசை மன்னர்" என்ற பட்டம் டி.எம்.சௌந்தரராஜனுக்கு வழங்கப்பட்டது. மேலும், டி.எம்.சவுந்தரராஜன் பெயர் சூட்டப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு டி.எம்.சவுந்தரராஜன் மகன் நன்றி தெரிவித்துள்ளார். தங்களுடைய வீடு உள்ள பகுதியின் சாலைக்கு தனது தந்தையாரின் பெயர் சூட்டப்படுவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications