• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

புரேவி புயல் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுடச்சுட உணவு தர முதல்வர் உத்தரவு

|

சென்னை: மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில், வீடு வீடாக சென்று, உணவு பொட்டலங்கள், குடிநீர் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான பால் பவுடர் ஆகியவற்றை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தேவைக்கு ஏற்ப, நடமாடும் உணவகங்கள் அமைத்து, சூடான உணவு வழங்கவும் முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

புரெவி புயலின் தாக்கத்தால், கடந்த 3.12.2020 அன்று பெய்த அதீத மிக கனமழை மற்றும் 4.12.2020 அன்று பெய்த மிக கனமழையினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் எடுக்கப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் எனது தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

Chief Minister orders food quality to be baked for the people affected by the Burevi Cyclone floods

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக ஏற்கெனவே, 18.9.2020 அன்று தலைமைச் செயலாளர் தலைமையிலும், 12.10.2020, 23.11.2020 மற்றும் 1.12.2020 ஆகிய தினங்களில் எனது தலைமையிலும், 21.10.2020 அன்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் தலைமையிலும், விரிவான ஆய்வுக் கூட்டங்கள் நடைபெற்றன.

கடந்த 23.11.2020 அன்று நடைபெற்ற நிவர் புயல் தொடர்பாக எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில், விரிவாக ஆய்வு செய்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டேன்.

மேலும், 24.11.2020 அன்று எழிலகம் வளாகத்தில் உள்ள மாநில அவரச கால கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு மேற்கொண்டு, நிவர் புயல் தொடர்பான நிலவரங்களை நேரடியாக அறிந்து தேவையான அறிவுரைகள் உடனுக்குடன் வழங்கினேன்.

26.11.2020 அன்றே நான் நிவர் புயலால் பாதிப்படைந்த கடலூர் மாவட்டத்தில் கள ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் நேரில் ஆறுதல் தெரிவித்தேன். மேலும், 30.11.2020 அன்று சென்னை பள்ளிக்கரணை மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள முட்டுக்காட்டில் நிவர் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து, எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கினேன்.

இந்திய வானிலை ஆய்வு மையம், 3.12.2020 அன்று இரவு பாம்பன்-கன்னியாகுமரி அருகில் புரேவி புயல் கரையைக் கடக்கும் என்று அறிவிப்பு வெளியிட்டதைத் தொடர்ந்து, உடனடியாக போர்க்கால அடிப்படையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு தீவிரப்படுத்தியது.

Chief Minister orders food quality to be baked for the people affected by the Burevi Cyclone floods

இதன் காரணமாக, உயிர் சேதங்கள் பெருமளவில் தவிர்க்கப்பட்டன. இப்புயலின் காரணமாக, கடலூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் வீசிய பலத்த காற்றினாலும், பெய்த கன மழையினாலும் ஏற்பட்ட பாதிப்புகளை விரைந்து சீர் செய்யும் நடவடிக்கைகள் தற்போது போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

புரேவி புயல் காரணமாக, தாழ்வான பகுதிகளில், கடற்கரையோரங்களில் மற்றும் ஆற்றோரங்களில் வசிக்கும் 36 ஆயிரத்து 986 எண்ணிக்கையிலான நபர்கள் எவ்வித பாதிப்புக்கும் உள்ளாகாமல் இருக்க, அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு 363 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்குத் தேவையான சூடான உணவு, குடிநீர், பாய், போர்வை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் பொதுமக்களுக்கு, நாள் ஒன்றுக்கு சுமார் 1 லட்சம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும், குடும்பம் ஒன்றுக்கு 10 கிலோ அரிசி, ஒரு வேட்டி, ஒரு சேலை மற்றும் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது.

இது தவிர ஒரு கிலோ பருப்பும், ஒரு லிட்டர் சமையல் எண்ணெயும் வழங்க நான் உத்தரவிட்டேன். பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில், வீடு வீடாக சென்று, உணவு பொட்டலங்கள், குடிநீர் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான பால் பவுடர் ஆகியவற்றை வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். மேலும், தேவைக்கு ஏற்ப, நடமாடும் உணவகங்கள் அமைத்து, சூடான உணவு வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.

புரேவி புயலால் உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி

புயல் காரணமாக உயிர் சேதத்தைத் தடுக்க எனது தலைமையிலான அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தது. எனினும், எதிர்பாராமல் புரெவி புயல் மற்றும் கன மழை காரணமாக இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வருத்தமடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களது குடும்பங்களுக்கு 4 லட்சம் ரூபாய் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்தும், 6 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்தும், ஆக மொத்தம் தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

மேலும், இப்புயல் மற்றும் கன மழை காரணமாக 37 பசு மாடுகள், 4 எருமை மாடுகள், 4 எருதுகள், 28 கன்றுகள் மற்றும் 123 ஆடுகள் உயிரிழந்துள்ளன. உயிரிழந்த மாடு ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாயும், எருது ஒன்றுக்கு 25 ஆயிரம் ரூபாயும், கன்று ஒன்றுக்கு 16 ஆயிரம் ரூபாயும், ஆடு ஒன்றுக்கு 3,000 ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

புரேவி புயல் காரணமாக 75 குடிசை வீடுகள் முழுமையாகவும், 1,725 குடிசை வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன. மேலும், 8 ஓட்டு வீடுகள் முழுமையாகவும், 410 ஓட்டு வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன. சேதமடைந்துள்ள வீடுகளுக்கு உரிய நிவாரண உதவிகள் வழங்கப்படும்.

புரேவி புயல் காரணமாக, சாலைகளில் 66 மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. சாலையில் விழுந்துள்ள மரங்களை மின் ரம்பங்கள் மூலம் வெட்டி, போர்க்கால அடிப்படையில் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.

புரேவி புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் 27 மின் கம்பங்கள் விழுந்துள்ளன. மின் வயர்கள் சேதமடைந்துள்ளன. மரங்கள் சாய்ந்து விழுந்ததனால் சேதமடைந்த மின் மாற்றிகள் மற்றும் மின் கம்பங்களை சீர் செய்யும் வகையில் மரங்களை அகற்றும் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மின்மாற்றிகள் மற்றும் மின் கம்பங்களை மாற்றியமைக்கும் பணிகளை மேற்கொள்ள கூடுதலாக மின் துறை பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

புரேவி புயல் காரணமாக மக்களுக்கு எந்தவித தொற்று நோயும் ஏற்படாமல் தடுக்க, எனது தலைமையிலான அரசு போர்க்கால அடிப்படையில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில், பொதுமக்களை நோயிலிருந்து பாதுகாக்கும் வண்ணம் 34 மருத்துவ முகாம்களும், 43 நடமாடும் மருத்துவக்குழுக்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இது வரை சுமார் 13 ஆயிரத்து 556 நபர்கள் இம்மருத்துவ முகாம்கள் மூலம் பயன் பெற்றுள்ளனர். தேவையான மருந்துகள் மற்றும் கிருமி நாசினிகள் கையிருப்பில் வைக்கப்பட்டு, உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து பன்முக நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

புரேவி புயலால் ஏற்பட்ட பயிர் சேதாரத்தை முறையாக கணக்கீடு செய்து, பேரிடர் நிவாரண நிதியிலிருந்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கவும், இது மட்டுமின்றி பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டு தொகை பெற்றுத் தரவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.

தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்ட கடற்கரையின் அருகில் மையம் கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு பகுதி நகராமல் அங்கேயே நிலை கொண்டுள்ளது. அது, அடுத்த 12 மணி நேரத்தில் அங்கேயே நிலை கொண்டு மேலும் வலுவிழக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் கன மழை மற்றும் மிக கனமழை, இன்றும் நாளையும் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி மற்றும் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்தும், திருவாரூர் மாவட்டத்தில் உயர்கல்வி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் உணவுத் துறை அமைச்சர் இரா.காமராஜூம், நாகப்பட்டினம் மாவட்டத்தில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மற்றும் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரும், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் மற்றும் ஊரக தொழில் துறை அமைச்சர் பி.பெஞ்சமினும், சென்னை மாவட்டத்தில் மீன்வளம் மற்றும் பணியாளர் சீர்திருத்தத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் மற்றும் தமிழ் ஆட்சி மொழி மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் கே.பாண்டியராஜனும் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள நான் உத்தரவிட்டுள்ளேன்.

பாதிப்புக்கு உள்ளான மாவட்டங்களில் சம்பந்தப்பட்ட கண்காணிப்பு அலுவலர்களும் முகாமிட்டு முன்னெச்சரிக்கை, மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். தேசிய பேரிடர் மீட்புப் படையின் 14 குழுக்கள், கன்னியாகுமரியில் 2, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், நாகப்பட்டினம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

சென்னை மாநகராட்சியிலும், இதர மாவட்டங்களில் உள்ள நகர்புறப் பகுதிகளில் தாழ்வான இடங்களில் தேங்கியுள்ள மழை நீரை உடனடியாக வெளியேற்ற நான் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையருக்கும் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிட்டுள்ளேன்.

தொலைத் தொடர்பு கருவிகள் மூலம் தொடர்புகொண்டு, மீனவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை அலுவலர்கள் அனைத்து நீர்நிலைகளையும் தொடர்ந்து கண்காணித்து, கரைகளுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும்.

பாலங்கள் மற்றும் சிறுபாலங்களில் அடைப்புகள் ஏற்படா வண்ணம் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். மேலும், தேவையான இடங்களில், பணியாளர்களை நியமித்து மாற்று சாலையில் பொதுமக்கள் பயணிக்க உதவ வேண்டும்.

பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகளில் போதுமான அளவு இருப்பு வைத்துக் கொள்ள சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. நீர்நிலைகளின் ஓரம் மற்றும் கடற்கரையோரங்களில் மக்கள் கூடாமல் கண்காணிக்க காவலர்கள் வருவாய்த்துறை அலுவலர்கள் பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர். அதிகாரப்பூர்வ மற்றும் நம்பத்தகுந்த ஊடகங்களில் வரும் செய்திகளை கேட்குமாறும், வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் பொதுமக்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

நிவர் மற்றும் புரேவி புயல் மற்றும் கனமழையினால் பாதிப்படைந்த பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு, இயல்பு நிலைக்கு கொண்டு வர அமைச்சர்களும், அதிகாரிகளும், அனைத்துத் துறை பணியாளர்களும் துரிதமாக பணியாற்ற நான் உத்தரவிட்டுள்ளேன் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

 
 
 
English summary
The Chief Minister has ordered door-to-door visits to rain-affected areas to provide food parcels, drinking water and milk powder to children. The Chief Minister has also ordered to set up mobile restaurants and provide hot meals as required.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X