ஸ்பீடாக இருக்கனும்! நிறைய எதிர்பார்க்கிறேன்! அதிகாரிகளிடம் முதல்வர் ஸ்டாலின் காட்டிய கண்டிப்பு!
சென்னை: அரசு மீது மக்கள் அதிக எதிர்பார்ப்பு வைத்துள்ளதால், அதனை பூர்த்தி செய்யும் வகையில் அதிகாரிகளின் பணி சிறப்புடன் இருக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற துறைச் செயலாளர்களுடனான முதல் நாள் ஆய்வுக் கூட்டத்தில் பேசிய அவர் கண்டிப்புடன் சில அறிவுரைகளை வழகியுள்ளார்.
அதன் விவரம் வருமாறு;

மக்கள் எதிர்பார்ப்பு
நான் பல மாவட்டங்களுக்குச் சுற்றுப்பயணம் செய்யும்போது பார்க்கிறேன்; மக்கள் நம் மீது அதிகமான அளவிற்கு, மிகப் பெரிய எதிர்பார்ப்பினை வைத்துள்ளனர். அதனை பூர்த்தி செய்யும் வகையில் உங்கள் பணி சிறப்பாக அமைய வேண்டும். பெரும்பாலான மக்களுக்கு, குறிப்பாக ஏழை எளிய மக்களுக்கு நலம் பயக்கும் திட்டங்களில் எந்தவிதமான தொய்வும், தாமதமும் இன்றி நீங்கள் பணியாற்றிட வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

நவீன தொழில்நுட்பம்
உதாரணமாக, நகர்ப்புர வேலைவாய்ப்புத் திட்டம், சாலை அமைத்தல், குடிநீர்த் திட்டம் போன்ற திட்டங்களை செயல்படுத்துவதில் நீங்கள் அதிக அளவில் தனிக் கவனம் செலுத்தி, குறிப்பிட்ட காலத்தில் அவற்றை நிறைவேற்றிட வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன். கூடுமான வரையில், அனைத்துத் துறைகளும் திட்டங்களை நிறைவேற்றும்போது, நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அவற்றைச் செயல்படுத்த வேண்டுமென்றும் நான் கேட்டுக் கொள்கிறேன்.

கால விரயம்
இதன்மூலம் பணிகளுடைய தரம் மேம்படும்; சிறப்பாக இருக்கும்; கால விரயமும் குறையும். ஒவ்வொரு துறைச் செயலாளரும் இதனை தங்களுடைய கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். அதேபோல், திட்டங்களை வகுப்பதிலும், திட்டங்களை நிறைவேற்றுவதிலும் அரசு சாராத துறை வல்லுநர்களின் கருத்துகளை - ஆலோசனைகளைப் பெறலாம். பிற மாநிலங்களில், பிற நாடுகளில் இதுபோன்ற திட்டங்கள் எந்த வகையில் செயல்படுத்தப்படுகின்றன என்பதையும், நம் மக்களுக்கு எவ்வாறு சிறப்பாக அவற்றை வழங்கலாம் என்பதையும் கண்டறிய வேண்டும்.

பெஸ்ட் பிராக்டீஸ்
Best Practices எங்கு இருந்தாலும், அதனை நாம் நமக்கேற்ற வகையில் பின்பற்றி, மக்களுக்கு அரசு அறிவிக்கும் திட்டங்களின் பயன்களை கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும். அரசாணைகளை வெளியிடுவது என்பது, திட்டச் செயலாக்கத்தில் முதல் படி மட்டுமே என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். போதுமான நிதி ஒதுக்கீட்டுடன் அரசாணைகள் வெளியிடப்பட்ட பின்னர், துறைத் தலைவர்கள் எவ்வித தாமதமும் இன்றி, அவற்றை நடைமுறைப்படுத்தி, மக்களிடம் திட்டங்களின் பயன்களைக் கொண்டுபோய்ச் சேர்த்திட வேண்டும். அதுதான் மிகவும் முக்கியமானது.

கள ஆய்வு முக்கியம்
அதிலும் மிக முக்கியமானது - "கள அளவில் ஆய்வுகள்" மேற்கொள்வதாகும். தேவையான இனங்களில், திட்ட செயலாக்கத்தின் போது மக்களின் கருத்துகளையும் கேட்டறிய வேண்டும். இவை ஒவ்வொன்றிலும் மாவட்ட ஆட்சியர்களை ஈடுபடச் செய்து, அனைத்து திட்டங்களையும் நீங்கள் நிறைவேற்றிட வேண்டும். பேருந்து நிலைய திட்டங்கள், குடிநீர் மற்றும் சாலைத் திட்டங்கள், வீட்டு வசதி மற்றும் வேலைவாய்ப்புத் திட்டங்கள் போன்றவை எல்லாம் மக்கள் பெரிதும் எதிர்பார்க்கக்கூடிய திட்டங்கள் ஆகும். அவற்றை நீங்கள் சிறப்பாக நிறைவேற்றிட வேண்டும்.

அரசுத்திட்டங்கள்
அதேபோல், அரசின் சேவைகளான பல்வேறு சான்றிதழ்கள், கட்டிட அனுமதி, பதிவுகள் மற்றும் உரிமங்கள், தடையின்மைச் சான்றிதழ்கள் போன்றவற்றை வழங்குவதில், கணினி தொழில்நுட்ப வசதியினைப் பயன்படுத்தி, அவை தாமதமின்றி வழங்கப்படுவதை துறைத் தலைவர்களாகிய நீங்கள் கள அளவில் ஆய்வு செய்து, உறுதி செய்திட வேண்டும். அப்போதுதான் நாம் அரசு நிர்வாகத்தை செம்மைப்படுத்தி, அரசுத் திட்டங்களை மக்களுக்கு முழுமையாக கொண்டு சென்றதாகக் கருத முடியும்.












Click it and Unblock the Notifications