ராணிப்பேட்டை ரேஞ்சே மாறப்போகுது.. முக்கியமான தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய வாகன உற்பத்தி தொழிற்சாலையை அமைக்கிறது. இந்த தொழிற்சாலையில் ஜாகுவார், லேண்ட்ரோவர் கார்கள் தயாரிக்கப்பட உள்ளன. இந்த புதிய தொழிற்சாலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்ட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டை ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்திட வேண்டும் என்ற இலக்கினை விரைவில் அடைவதற்காக தமிழ்நாடு அரசின் தொழில்துறை பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. மேலும், அதிக அளவிலான முதலீடுகள் கிடைக்கக்கூடிய உயர் தொழில்நுட்பம் சார்ந்த தொழில்களையும், அதிக வேலை வாய்ப்புகளை அளிக்கக்கூடிய தொழில்களையும் ஈர்த்திட பல்வேறு முயற்சிகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

கடந்த ஜனவரி 7, 8 ஆம் தேதிகளில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தப்பட்டு, இதுவரை இல்லாத அளவில்,, ரூ.6.64 லட்சம் கோடி முதலீடு மற்றும் 26.90 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இதையடுத்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் கடந்த மார்ச் 13 ஆம் தேதி தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் 5 ஆண்டுகளில் 9,000 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 5,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் வாகன உற்பத்தி தொழிற்சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு அரசு - டாடா மோட்டார்ஸ் குழுமத்திற்கு இடையே மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சிப்காட் வளாகத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய வாகன உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க உள்ளது. இந்த புதிய தொழிற்சாலைக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் அடிக்கல் நாட்டவுள்ளதாக தொழில்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஜாகுவார், ரேஞ்ச்ரோவர், லேண்ட் ரோவர் போன்ற உயர் ரக சொகுசு கார்கள் ராணிப்பேட்டையில் புதிதாக தொடங்கப்பட உள்ள தொழிற்சாலையில் தயாரிக்கப்பட உள்ளன. இதன் மூலம் சொகுசு கார்களின் முன்னணி உற்பத்தி மையமாக ராணிப்பேட்டை மாவட்டம் மாற உள்ளது.
தமிழ்நாட்டில் தயாராகும் ஜாகுவார், லேண்ட் ரோவர் கார்களை உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், மின்சார வாகனங்களையும் இந்த புதிய தொழிற்சாலையில் தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அடுத்த மாதம் அடிக்கல் நாட்டப்பட்டு, விரைவாகவே தொழிற்சாலை அமைக்கும் பணிகள் நிறைவடையும் எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications