சிட்டா, பட்டா, ஒரிஜினல் பத்திரம்.. பத்திரப்பதிவில் சிக்கல்? கடன் வாங்க சென்னையில் சுற்றிய போலி ஆவணம்
சென்னை: சொத்துக்களை வாங்கி, அதனை சார் பதிவாளர் அலுவலகத்தில் முறையாக பதிவு செய்து, ஒரிஜினல் பத்திரத்தை கையில் வைத்திருந்தபோதிலும்கூட, மோசடி என்பது நடந்துவிடுகிறது. போலி ஆவணங்களை தயாரித்து மோசடி செய்பவர்கள் கைதாகி வந்தாலும், வருவாய்த்துறை, பதிவுத்துறையில் கைது நடவடிக்கைகள் குறையவில்லை.. ஆனால், நீதிமன்றங்கள் இதுபோன்று கைதாகுவோரின் ஜாமீன் மனுவை நிராகரித்து, தண்டனையை தந்து கொண்டிருப்பது, பெருத்த நம்பிக்கையாகவும், ஆறுதலாகவும் பொதுமக்களுக்கு அமைந்து வருகிறது.
ஒரு நிலத்தை சொந்தமாக வாங்கி விற்பதற்கு பத்திரம் என்பது மிகமிக அவசியமானது.. நிலத்தின் உரிமையாளர்கள் இவர்கள்தான் என்பதை நிரூபிக்கக்கூடிய ஆவணமே இந்த பத்திரம்தான்.. ஆனால், போலி பத்திரங்களை தயார் செய்து, நிஜ பத்திரித்தை போலவே உருவாக்கி மோசடிகள் பெருகி வருகின்றன.

போலி பத்திரங்கள், போலி ஆவணம்
இந்த போலி பத்திரங்கள் நடமாட்டத்தை குறைக்கவும், லஞ்ச நடமாட்டத்தை குறைக்கவும் தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதேபோல, ஒருவரின் பத்திரம் உண்மையா? அது அவர்களின் பெயரில்தான் உள்ளதா? உரிமையாளர் யார்? என்பதை கண்டுபிடிப்பதற்காக, http://ecview.tnreginet.net/ என்ற ஆன்லைன் வசதியும் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளன.
அப்படியிருந்தும்கூட, லஞ்சம் கேட்பதால் முறையான பத்திரப்பதிவுகள் நடப்பதில்லை.. சமீபத்தில்கூட, காரைக்குடியில் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரருக்கு பத்திரப்பதிவு முடிந்து பல நாட்கள் ஆகியும் பத்திரம் வழங்கப்படவில்லை. இதனால் நேரில் சென்று சார்பதிவாளரிடம் கேட்டதற்கு, ரூ.1 லட்சம் லஞ்சம் வேண்டும் என்று கேட்கப்பட்டு, அந்த சார் பதிவாளர் கைதானார்.
அதேபோல, போலி பட்டா தயாரிப்புகளும், மோசடி ஆவணங்களும் உலா வருகின்றன.. இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு நீதிமன்றமும் தகுந்த தண்டனைகளை தந்து வருகிறது.
தனி நபர் கடன்கள்
பட்டா, சிட்டா திருத்தம், நில அளவீடு போன்றவற்றிலும் புகார்கள் கிளம்பி வருகின்றன. நேற்றுகூட, இப்படி குற்ற செயலில் ஈடுபட்ட 4 பேரின் ஜாமீன் மனுவை கோர்ட்ட தள்ளுபடி செய்துள்ளது.. போலி ஆவணங்கள் வாயிலாக, தனியார் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில், 2 கோடி ரூபாய்க்கு மேல் தனி நபர் கடன் பெற்று மோசடி செய்த வழக்கில்தான், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 4 பேரின் மனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன.
சென்னை அமைந்தகரையில் செயல்பட்டு வரும் HDFC வங்கியின் கிளையில், ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த குமார், ஏகாம்பரம், கேசவ கங்காராஜூ மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர், தனி நபர் கடன்கள் பெற்றிருந்தனர்.. இதில், குமார் என்பவர், மற்ற 3 பேரும், சாப்ட்வேர் என்ஜினியர்களாக பணியாற்றுவதாக போலி ஆவணங்கள் தயாரித்து தந்துள்ளார்கள்..
போலி ஆவணங்கள்
இந்த போலி ஆவணங்கள் வாயிலாக, கடந்த வருடம் தனி நபர் கடனையும் பெற்றிருக்கிறார்கள். ஆனால், அதற்கான கடன் தவணையை திருப்பி செலுத்தவில்லை. இதுகுறித்து, வங்கி தரப்பில், சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் தரப்பட்டதையடுத்து, போலீஸ் விசாரணையும் ஆரம்பமானது. அப்போதுதான், போலி ஆவணங்கள் வாயிலாக தனி நபர் கடன் பெற்றதும், அனைவரும் கூலி, விவசாய வேலை செய்து வருவதும் தெரியவந்தது.
இதையடுத்து, குமார், ஏகாம்பரம், கேசவ கங்காராஜூ, கிருஷ்ணமூர்த்தி ஆகிய 4 பேருமே கைதானார்கள்.. இவர்கள் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவானது, நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது...
நீதிபதி அதிரடி உத்தரவு
அப்போது காவல்துறை தரப்பில் நடந்த வாதத்தில், "விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளது. மோசடியில் நாகராஜ், மணிகண்டன், கோபால், வெங்கடேஷ், ஹர்ஷா ஆகியோருக்கும் தொடர்பு உள்ளது.. ஆனால், அவர்கள் தலைமறைவாக உள்ளனர். போலி ஆவணங்கள் தயாரித்து, இந்த வங்கியில் மட்டுமின்றி, பல்வேறு வங்கிகள், நிதி நிறுவனங்களிலிருந்தும் 2.47 கோடி ரூபாய் வரை கடன் பெற்று மோசடி செய்திருக்கிறார்கள்.
இதில், குமார் என்பவர் மட்டும், 1.72 கோடி ரூபாய் வரை கமிஷன் வாங்கியிருக்கிறார்.. அந்த மோசடி தொகையையும் மீட்க வேண்டியிருப்பதால் ஜாமீன் வழங்கக் கூடாது" என்று வாதிடப்பட்டது.
காவல் துறை தரப்பு வாதத்தை ஏற்ற நீதிபதி, சம்பந்தப்பட்ட 4 பேரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். நீதிபதியின் இந்த உத்தரவானது, பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications
