பழனி புதிய மாவட்டமா?..வெறும் மலைக்கோட்டையை வெச்சுகிட்டு நாங்க என்ன பண்றது.. குமுறும் திண்டுக்கல்!
சென்னை: பழனியை தலைமையிடமாக புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளதற்கு திண்டுக்கல் மாவட்டத்தில் பரவலான சலசலப்பு நிலவுகிறது.
ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு 1985-ம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் உருவாக்கப்பட்டது. திண்டுக்கல் அண்ணா மாவட்டம், திண்டுக்கல் காயிதே மில்லத் மாவட்டம், திண்டுக்கல் மன்னர் திருமலை மாவட்டம் என சில காலம் அழைக்கப்பட்ட வரலாறும் உண்டு.
திண்டுக்கல் மாவட்டத்தின் பிரதான சுற்றுதலமாக திகழ்வது கொடைக்கானல். அதேபோன் முதன்மையான ஆன்மீக தலமாக விளங்குவது பழனி முருகன் கோவில். தமிழகத்தின் மிக முக்கியமான ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையையும் திண்டுக்கல் மாவட்டம் தன்னகத்தே கொண்டிருக்கிறது.

பழனி மாவட்டம்
திண்டுக்கல் மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 22 லட்சத்துக்கும் அதிகம். ஆகையால் திண்டுக்கல் மாவட்டத்தை 2 ஆக பிரித்து பழனியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டமாக உருவாக்க வேண்டும் என்பது ஒருதரப்பினரின் நீண்டநாள் கோரிக்கை. அப்படி புதிய மாவட்டம் உருவானால் பழனி, கொடைக்கானல், ஒட்டன்சத்திரம், தாராபுரம், மடத்துகுளம் ஆகியவற்றை இணைக்க வேண்டும் என்பதும் ஒரு கருத்து.

முதல்வர் வாக்குறுதி
இது தொடர்பாக பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில்தான் சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்கு வருகை தந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பழனியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை அதிமுக மீண்டும் ஆட்சி அமைத்ததும் உருவாக்கும் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியான உடனேயே அதிமுகவினர் உட்பட திண்டுக்கல் மாவட்ட மக்களிடையே சலசலப்பு எழுந்துள்ளது.

வெறும் மலைக்கோட்டைதானா?
ஏனெனில் திண்டுக்கல் மாவட்டத்தின் முக்கிய அடையாளங்களாக இருப்பவை கொடைக்கானல், பழனி, ஒட்டன்சத்திரம் ஆகியவைதான். இந்த மூன்றையும் உள்ளடக்கியதாக புதிய பழனி மாவட்டம் உருவாகும். அப்படியானால் திண்டுக்கல் மாவட்டத்துக்கு என்னதான் அடையாளம்? திண்டுக்கல்லில் இருக்கும் அந்த ஒற்றை மலைக்கோட்டையும் அதனை சுற்றி நிலத்தடி நீரையே விஷமாக்கி வைத்திருக்கும் நச்சு தோல்தொழிற்சாலை கழிவுகளும்தானா? என்கிற ஆதங்கம் முன்வைக்கப்படுகிறது.

கண்டுகொள்ளப்படாத சிறுமலை
மேலும் கொடைக்கானல் மலையைவிட அதிக கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட இயற்கை பேரழகு கொஞ்சும் மலையாக திகழ்கிறது சிறுமலை. ஆனால் சிறுமலையை முதன்மை சுற்றுலாத்தலமாக்க எந்த ஒரு முயற்சியையுமே எந்த அரசும் செய்யவில்லை. அப்படி சிறுமலையை கொடைக்கானலுக்கு இணையான ஒரு சுற்றுலாதலமாக்கி இருந்தால் பழனி புதிய மாவட்டமாக்கப்பட்டு கொடைக்கானலை அதில் சேர்ப்பதிலும் ஒரு நியாயமிருக்கும்.

திருமலைக்கேணி முருகன் கோவில்
அதேபோல் திருமலைக்கேணி முருகன் கோவிலும் சுற்றுலாத்தலமாக்கப்படாமல் கைவிடப்பட்ட நிலையில்தான் இருக்கிறது. அதை பழனி மலைக்கு இணையான ஒரு திருத்தலமாக உருவாக்குவதற்கு எந்த ஒருதரப்பும் எந்த ஒரு முயற்சியுமே செய்யவில்லையே ஏன்? திருமலைக்கேணி மலையில் உள்ள நீர்வீழ்ச்சிகளுக்கு இந்த நாள் வரை சரியான பாதையில் இல்லை. சிறுமலையில் உள்ள நீர்தேக்கங்களை கொடைக்கானல் ஏரிகளைப் போல பராமரிக்கவில்லை என்கிற குமுறல் இருக்கிறது.

திண்டுக்கல், அய்யலூர் சந்தை
மேலும் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தைக்கு இணையாக திண்டுக்கல் வெங்காயம், நிலக்கடலை சந்தை முக்கியத்துவமானது. ஆனால் திண்டுக்கல் சந்தையையோ, அய்யலூர் தக்காளி சந்தையையே மேம்படுத்தி பொருளாதார மேம்பாட்டுக்கு எந்த ஒரு திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. அத்துடன் ஏற்கனவே தொகுதி மறுசீரமைப்பில் பழனி லோக்சபா தொகுதியில் இடம்பெற்றிருந்த வேடசந்தூர் சட்டசபை தொகுதியை கரூர் லோக்சபா தொகுதியுடன் இணைத்தார்கள். இப்போது வேடசந்தூர் தொகுதி திண்டுக்கல் மாவட்டத்தில் நீடிக்குமா? பழனி மாவட்டத்துக்கு போகுமா? என்கிற புதிய திரிசங்கு நிலை ஏற்பட்டுள்ளது.

ஏகப்பட்ட பஞ்சாயத்துகள்
திண்டுக்கல் மாவட்டத்தின் ஒரே ஆறான குடகனாறு ஆற்றின் இயல்பான வழித்தடத்தை சிலர் திசைதிருப்பிவிட்டதால் என்னதான் கொடைக்கானல் மலையில் இருந்து வெள்ளம் பெருக்கெடுத்து வந்தாலும் மரபுவழி நீர்தடத்தில் குடகனாறு ஆற்றில் நீர் வருவதும் இல்லை. அழகாபுரி குடகனாறு அணையும் நிரம்புவது குதிரை கொம்பாக இருக்கிறது. இப்படி திண்டுக்கல் மாவட்டமே ஏற்கனவே பல்வேறு முட்டுக்கட்டைகளுடன் தள்ளாடிக் கொண்டிருக்கும் நிலையில் பழனி புதிய மாவட்டம் உருவானால் பஞ்சாமிர்தம் போல பஞ்சாயத்துகள் வரிசை கட்டவே வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர் திண்டுக்கல்வாசிகள்.












Click it and Unblock the Notifications