ஆபரேஷன் 1.. தேசிய அளவில் ஸ்டாலின் போடும் பிளான்! குவியும் டாப் எதிர்க்கட்சிகள்! அட டிஜிட்டல் மேடையா!
தேசிய அளவில் எதிர்கட்சிகளை ஒன்று திரட்டும் முதல் கட்ட ஆபரேஷனாக இந்த கூட்டம் பார்க்கப்படுகிறது.
சென்னை: முதல்வர் ஸ்டாலின் நாளை பிறந்தநாள் விழா கொண்டாட உள்ளார். அவரின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடக்க உள்ளது.
முதல்வர் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பின் நடக்கும் இரண்டாவது பிறந்த நாள் விழா ஆகும் இது. இந்த பொதுக்கூட்ட விழாவை தவிர்த்து வேறு விழாக்கள் எதுவும் நடத்த கூடாது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
என்னுடைய பிறந்த நாளுக்காக யாரும் ஆடம்பரமாக பணிகளை செய்ய வேண்டாம் . அதை நான் விரும்ப மாட்டேன். சாதாரணமாக பிறந்தநாளை கொண்டாடினால் போதும்.

விழா வேண்டாம்
யாரும் எனக்காக விழா எல்லாம் எடுக்க வேண்டாம். அதை நான் விரும்ப மாட்டேன் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். இந்த நிலையில்தான் அவரின் பிறந்த நாள் விழாவிற்கான பொதுக்கூட்ட மேடை தயாராகிக்கொண்டு இருக்கிறது. அகில இந்திய அளவிலான கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் வகையில் மிகப்பெரிய மேடை தயாராகிக்கொண்டு இருக்கிறது. சென்னை நந்தனம், ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பொதுக்கூட்டம் நடக்கிறது. இதற்கான மேடை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

மேடை பணிகள்
கூட்டத்திற்கு தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமை தாங்குகிறார். இந்த விழாவை பிரம்மாண்டமாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. தேசிய அளவில் எதிர்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்றிணைய வேண்டும். அதை காங்கிரஸ் வழி நடத்த வேண்டும் என்று ஏற்கனவே காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்து இருந்தார். உத்தவ் தாக்கரேவும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதின் அவசியம் குறித்து பேசி இருந்தார். இந்த நிலையில்தான் தற்போது ஸ்டாலின் மூலம் நடக்கும் சென்னை பொதுக்கூட்டம் எதிர்கட்சிகள் ஒன்றிணைவதற்கான முக்கிய கூட்டமாக பார்க்கப்படுகிறது,

யார் எல்லாம் வருகிறார்கள்
ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொள்கின்றனர். அதேபோல் ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் இந்த நிகழ்வில் கலந்து கொள்கிறார். தேஜஸ்வி யாதவ் - முதல்வர் ஸ்டாலின் இருவரும் நெருக்கமாகி விட்டனர். இவர்கள் மிகவும் நெருக்கமான நண்பர்கள் ஆகிவிட்டனர். சமீபத்தில் சென்னைக்கு வந்து இருந்த தேஜஸ்வி தற்போது மீண்டும் ஸ்டாலினை சந்திக்க வந்துள்ளார். நாளை நடக்கும் இந்த பொதுக்கூட்டத்திற்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமை தாங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆலோசனை
இந்த கூட்டத்தை தொடர்ந்து இவர்கள் எல்லோரும் சந்தித்து சில நிமிடங்கள் ஆலோசனை செய்ய உள்ளதும் குறிப்பிடத்தக்கது. பொதுக்கூட்டத்திற்கான பிரமாண்ட மேடை அமைக்கும் பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது. முழுக்க முழுக்க டிஜிட்டல் மேடை போன்ற அமைப்புகள் வைக்கப்பட்டு வருகின்றன. ஸ்டாலினின் இளம் வயது வாழ்க்கை, அவர் கடந்து வந்த பாதை, மீசாவில் கைதானது உள்ளிட்ட அனைத்து வரலாறும் இடம்பெறும் வகையில் இந்த டிஜிட்டல் திரையில் வீடியோக்கள் ஓட உள்ளன. இந்த மேடையை நேற்று அமைச்சர்கள் துரைமுருகன், மா. சுப்பிரமணியன் மற்றும் எம்பி டி ஆர் பாலு ஆகியோர் பார்வையிட்டனர். தேசிய அளவில் எதிர்கட்சிகளை ஒன்று திரட்டும் முதல் கட்ட ஆபரேஷனாக இந்த கூட்டம் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications