குட் நியூஸ்..சென்னை வரும் பெண்களே! இலவச வைஃபை வசதியுள்ள புதிய அரசு விடுதியை இன்று திறக்கும் ஸ்டாலின்
சென்னை: கல்வி, வேலை போன்ற பல்வேறு காரணங்களுக்காக சென்னை வரும் பெண்களுக்கு வசதியாக சென்னையில் இன்று புதிய அரசு விடுதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.
தினந்தோறும் கல்வி, வேலைவாய்ப்பு போன்ற பல்வேறு தேவைகளுக்காக தலைநகர் சென்னையை நோக்கி ஆயிரக்கணக்கான பெண்கள் சொந்த ஊர்களில் இருந்து வருகிறார்கள். இவர்களுக்கு வாடகைக்கு பாதுக்காப்பான வீடு மற்றும் விடுதிகள் கிடைப்பது பெரும் பிரச்சனையாக உள்ளது. அப்படி கிடைத்தாலும் வாடகை அதிகமாக இருக்கும்.

இப்படிதான் சென்னையில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பெண்கள் தங்கி பணிபுரிந்தோ அல்லது படித்துக்கொண்டோ இருக்கிறார்கள். அவர்களுக்கு பயனளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு பொருளாதாரத்தில் பின் தங்கிய மற்றும் குறைவாக வருவாய் ஈட்டும் பிரிவினருக்குக்காக பல்வேறு மாவட்டங்களில் மகளிர் விடுதிகளை அமைத்து வருகிறது.
'தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம்' என்ற அமைப்பின் மூலம் அரசு தமிழ்நாட்டில் பணிபுரியும் பெண்களுக்கான புதிய விடுதிகளை உருவாக்குவதுடன், ஏற்கனவே இயங்கி வரும் விடுதிகளை புதுப்பிப்பது போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை அடையாறு, சாஸ்திரி நகரின் 2 வது குறுக்கு தெருவில் அரசு சார்பில் மகளிா் தங்கும் விடுதி புதிதாக கட்டப்பட்டது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த புதிய விடுதியை இன்று திறந்து வைக்க உள்ளார். இந்த விடுதியில் இலவச வைஃபை, கை ரேகை பதிவேடு வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வசதி, 24 மணி நேர பாதுகாப்பு, பொழுதுபோக்கு அறை போன்றவை உள்ளன. தனியார் விடுதிகளை விட இங்கு குறைவான கட்டணமே வசூலிக்கப்படுகிறது.
98 படுக்கைகளை கொண்ட இந்த விடுதியில் ஒருவர், 2 பேர், 4 பேர், 6 போ் தங்கும் வகையில் அறை வசதிகள் இருக்கின்றன. அறைகளில் தங்க விரும்புவோர் இணையதளம் மூலமாக அதன் இருப்புத்தன்மையை அறிந்து தேவைப்படும் நேரத்தில் முன்பதிவு செய்துகொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications