அபகரிப்பு நிலங்களை மீட்பதில் அபார வேகம் காட்டும் அரசு.. முதல்வர் ஸ்டாலினின் அடுத்தடுத்த அதிரடிகள்
சென்னை: நடிகர் வடிவேலுவின் 'கிணத்த காணோம்' காமெடி காட்சி தமிழ்நாட்டில் மிகப் பிரபலம். அந்தளவுக்கு நிலமோசடியில் கொடிகட்டிப் பறந்தது தமிழ்நாடு. கருப்புப் பணம் புழங்கும் தொழிலாக 'லேண்ட் மாஃபியா' இருந்து வருகிறது. இந்தப் பூனைக்கு யார் மடி கட்டுவது என மக்கள் பதறிப் போய் இருந்தனர் என்பதே உண்மை. அதற்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்தித் தந்திருக்கிறது தமிழக அரசு.
கடந்த 2021 செப்டம்பர் மாதம் தமிழக அமைச்சரவை நிலமோசடி தொடர்பாகச் சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி இருந்தது. அதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியிருக்கிறார்.
இது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், "பத்திரப்பதிவு துறையில் கடந்த காலங்களில் மோசடியாகப் பதியப்பட்ட ஆவணங்களைப் பத்திரப் பதிவுத் துறையே ரத்து செய்ய அதிகாரம் அளிக்கும் பதிவுச் சட்டத் திருத்த மசோதா கடந்த ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. தற்போது குடியரசுத் தலைவர் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளார். இச்சட்டத்திருத்தம் இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு ஒரு முன்னோடியாக உள்ளது" என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

நிலமோசடி கடந்து வந்த பாதை
இந்த மாதிரியான நிலமோசடிக்குப் பின்பாக திமுக இருப்பதாக ஜெயலலிதா தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்து வந்தார். 2011 இல் அவர் ஆட்சிக்கு வந்ததும் தனது தேர்தல் பிரச்சாரத்தில் வாக்குறுதி அளித்ததைப் போலவே 'நில அபகரிப்பு தடுப்பு பிரிவை' மாவட்டம் தோறும் ஏற்படுத்தினார். அவர் அறிவித்த வேகத்திலேயே தமிழகம் முழுவதும் 1449 புகார்கள் வந்து குவிந்தன. சேலத்தில் மட்டும் 60 வழக்குகள் பதியப்பட்டன. ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை ஆராய்ந்து விசாரணையைத் தொடங்கியது நிலமோசடி தனிப்பிரிவு படை. அந்தக் காலபகுதியில் தினம் ஒரு நிலமோசடி புகார், தினம் ஒருவர் கைது எனப் பரபரப்பாக இருந்தது லேண்ட் மாஃபியாக்களின் நடவடிக்கை. இந்த நிலமோசடி எந்தளவுக்கு உச்சகட்டத்தில் இருந்தது என்றால், தமிழ்நாட்டின் அன்றைய ஏ.டி.ஜி.பி. ஆகப் பதவி வகித்த துக்கையாண்டி மனைவி மீது நிலமோசடி புகார் எழும் அளவுக்கு இருந்தது. மனைவி மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டினால் துக்கையாண்டி தன் பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு ஒருநாள் முன்பு அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். காவல்துறை உயர் அதிகாரி ஒருவரே இந்தப் புகார் பட்டியலில் சிக்கும் அளவுக்கு இந்தப் பத்திரப் பதிவு மோசடிகள் தமிழகத்தில் தயக்கம் இல்லாமல் கடைவிரித்திருந்தன.

குற்றச்சாட்டுக்குள் உள்ளான ஜெயலலிதா
திமுக ஆட்சியின் மீது நிலமோசடி புகாரை முன்வைத்து ஆட்சிக்கு வந்த ஜெயலலிதாவே, இதே அபகரிப்பு புகாரில் சிக்கினார். சிறுதாவூர் தொடங்கி கொடநாடு வரை அவர் மீதே இதே குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக, "ஜெயலலிதா தனது கொடநாடு எஸ்டேட்டை அபகரித்துவிட்டார். குறைந்தவிலைக்கு மிரட்டி வாங்கிவிட்டார். அதற்கு சசிகலாதான் உடந்தை. சசிகலா என் வாழ்வில் குறுக்கிட்ட பேரிடர்" என்று அதன் முன்னாள் உரிமையாளர் பீட்டர் கிரேக் ஜோன் ஒரு பிரபல வார இதழுக்குப் பேட்டி அளித்திருந்தார். அது நாடு முழுவதும் பெரிய அதிர்வலையை எழுப்பியது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலம் தொட்டு தங்களின் பூர்வீக நிலமாக இருந்த கொடநாட்டை மீட்பதே தனது லட்சியம் என்றும் பீட்டர் பேசி இருந்ததை யாரும் லேசில் மறந்துவிட முடியாது. ஜெவைப் போலவே அவரது கட்சியினரும் இதே புகாருக்கு ஆளாகினர். சேலத்தைச் சேர்ந்த கனகராஜ் என்பவரும் முன்னாள் கவுன்சிலர் சித்தானந்தம் என்பவரும் நிலமோசடி புகாருக்கு ஆளாகவே, இருவரையும் ஜெ கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிட்ட சம்பவமும் நடந்தது. சமீபத்தில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஒபிஎஸின் தம்பி ராஜா மீதும் இதே நில அபகரிப்பு புகார் முன்வைக்கப்பட்டது. அதேபோல் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதும் குற்றச்சாட்டு எழுந்தது.

நடிகர் சூரி புகார்
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் தேனியில் அரசுக்குச் சொந்தமான 180 ஏக்கர் புறம்போக்கு நிலம் தனிநபர்கள் பெயரில் பட்டா மாற்றம் செய்யப்பட்டு மோசடி நடந்துள்ளதாகச் செய்தி வெளியானது. இதே மாவட்டத்தைச் சேர்ந்த துணை தாசில்தார் மணவாளன் நிலமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார் என்பது கூடுதல் தகவல். இதேபோல் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனும் இதே நிலமோசடி புகாரில் சிக்கினார். திரைத்துறையை சேர்ந்த நடிகர் சூரியை விஷ்ணு விஷாலின் தந்தை நிலம் வாங்கி தருவதாக மோசடி செய்துவிட்டதாக சூரி காவல் ஆணையரிடம் புகார் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை உண்டாக் கியது.

திமுக ஆட்சியில் கோயில் நிலங்கள் மீட்பு
திமுக மீது ஜெயலலிதாவினால் சுமத்தப்பட்ட பழியைப் போக்கும் விதமாக ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பு ஏற்றதும், இந்த நில அபகரிப்பு குறித்துத் தனிக் கவனத்தைச் செலுத்தத் தொடங்கினார். அவரது தலைமையிலான தமிழக அரசு அதற்காக நடவடிக்கைகளில் மின்னல் வேகம் எடுத்தது. அதன் ஒரு பகுதியாக அறநலத்துறைக்குச் சொந்தமான கோயில் நிலங்கள் ஆட்சி பொறுப்பேற்ற 10 மாதங்களுக்குள் ஏறக்குறைய 2500 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்களை மீட்டுச் சாதித்துக் காட்டியது. மேலும் சென்னை கீழ்ப்பாக்கத்திலுள்ள காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்குச் சொந்தமான 300 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை மீட்டுள்ளதாக அறநலத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார். இந்தளவுக்கு நில அபகரிப்பில் நடவடிக்கை எடுக்கும் அரசு இதற்குமுன் வேறு இல்லை என கூறும்படி இருந்து வருகிறது முதல்வர் ஸ்டாலினின் செயல்பாடு.

இந்தியாவிற்கே முன்மாதிரி
இந்தநிலையில்தான் தமிழக அரசு கொண்டுவந்துள்ள சட்டத்திருத்தம் இந்தியாவிற்கே முன்மாதிரியாக மாறியுள்ளது. இனிமேல் மோசடியாகப் பதிவு செய்யப்படும் நிலத்தைப் பதிவாளரே ரத்து செய்யும் அதிகாரத்தின் மூலம் பல லட்ச வழக்குகள் தீர்த்துவைக்கப்படும். பாதிக்கப்பட்டவருக்கு விரைவாக நீதி கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டத்திருத்தம் குறித்து மூத்த வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணனிடம் பேசினோம். அவர், "இதற்கு முன்பாக நிலம் உள்ள அந்தந்த பகுதியில்தான் பத்திரப் பதிவு செய்யலாம் எனச் சட்டம் இருந்தது. இந்தச் சட்டம் ரியல் எஸ்டேட் தரகர்களுக்கு இடைஞ்சலாக இருந்தது. எனவே தரகர்கள் திருவனந்தபுரத்தில் உள்ள பாரசாலைக்குப் போய் பத்திரப் பதிவு செய்தனர். அப்போது அந்த ஊரில் எந்த மாநிலத்தின் நிலத்தையும் பதிவு செய்யும் நடைமுறை இருந்துவந்தது. அதை அறிந்து தமிழக அரசு அதையும் சட்டம் போட்டுத் தடுத்தது.

வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் கருத்து
இதனால் திருட்டுத்தனமாக அடுத்தவர் நிலத்தைப் பதிவு செய்யும் மோசடி தடுக்கப்பட்டது. 2015இல் உச்சநீதிமன்றத்தில் நிலமோசடி செய்வது தடுக்கப் பட வேண்டும் என ஒரு தீர்ப்பு வந்தது. அந்தத் தீர்ப்பையொட்டி மத்திய அரசு சில வழிமுறைகளை வகுத்தது. அதன் தொடர்ச்சியாக கடந்த செப்டம்பர் மாதம் தமிழக அரசு இந்தச் சட்டத்திருத்தத்தைக் கொண்டு வந்தது. இது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் மாபெரும் சாதனை. இந்த சட்டத்திருத்தம் வந்த வேகத்திலேயே பத்திரப் பதிவு ஐஜிக்கு 15 ஆயிரம் புகார் மனுக்கள் வந்துள்ளன. மசோதா குடியரசுத் தலைவருக்கு அனுப்பி அது சட்ட வடிவம் பெறுவதற்கு முன்பே இவ்வளவு மனுக்கள் குவிந்துள்ளன என்றால் இந்தச் சட்டத்திருத்தத்தின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ள முடியும். இதனால் ரியல் எஸ்டேட் மாஃபியா தடுக்கப்படும்" எனக் கூறும் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் தன் மனைவியின் நிலத்தை 20 ஆண்டுகளுக்கு முன்னால் சில விஷமிகள் அபகரித்துவிட்டதாகவும் அதனைச் சட்டப் போராட்டம் நடத்தி மீட்டதாகவும் தெரிக்கின்றார்.
-
8,000 ரூபாய் கூப்பன்.. என்ன வாங்கலாம்? இப்போது இந்த 'டிஸ்கஷன்'தான் ஓடுகிறது! ஸ்டாலின் சொன்ன மெசேஜ்! -
தொகுதி மறுவரையறை.. திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை -
நானும் டெல்டா காரன் தான்.. ஸ்டாலின் சொன்னதில் இதுதான் பெரிய காமெடி! அட்டாக் மோடில் அன்புமணி ராமதாஸ் -
மீஞ்சூரில் சூறையாடப்பட்ட மாணவி.. வாய் திறப்பாரா ஸ்டாலின்? உச்சகட்ட கோபத்தில் எடப்பாடி பழனிசாமி! -
Delimitation: பொருளாதாரம், நிதி ஆதாரத்தில் பெரிய ஓட்டை விழும்.. தென்னிந்திய மாநிலங்களுக்கு 'இரட்டை தண்டனையா'? -
Delimitation! தமிழகத்திற்கு மாபெரும் அநீதி! நாளை வீடுகளில் கருப்புக் கொடி போராட்டம்- ஸ்டாலின் -
மாப்ள சிவசங்கர் தான்.. ஆனால் சட்டை செந்தில் பாலாஜியோடது! திமுகவின் போலி கூப்பன்! அன்புமணி அட்டாக்! -
கடுகடு ராகுல்.. கண்டு கொள்ளாத ஸ்டாலின்! கரையேறுமா காங்கிரஸ்? தனி ரூட் எடுத்துப் பாயும் அறிவாலயம்! -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்!












Click it and Unblock the Notifications