எங்கு என்று சொன்னால் நான் உடனடியாக நடவடிக்கை எடுக்கத் தயார்.. ஸ்டாலின் அளித்த 'நச்' பதில்
சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலினிடம், ஒருவர் ஆக்சிஜன் வசதியுள்ள படுக்கைகள் குறைவாக உள்ளதே என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார் அதற்கு பதில் அளித்த ஸ்டாலின், எங்கு இல்லை என்று சொன்னீர்கள் என்றால் நான் உடனடியாக நடவடிக்கை எடுக்கத் தயாராக இருக்கிறேன் என்று பதில் அளித்த வாயடைக்க வைத்தார்.
ஒரு நல்ல அரசுக்கு விமர்சனங்களை தாக்கும் பக்குவமும், குறைகளை சுட்டிக்காட்டினால் சரி செய்ய தயாராக இருப்பதும் தான் சிறந்த கொள்கை. அதை தான் ஸ்டாலின் தமிழகத்தில் முதல்வராக பதவியேற்ற அடுத்த சில நாட்களிலேயே வெளிப்படுத்த தொடங்கினார்.
கொரோனா பரவல் அதிகரித்த போது, தானே நடவடிக்கை எடுக்காமல், அனைத்து அரசியல் கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகளை அழைத்து பேசி என்ன செய்யலாம் என்று கருத்துக்களை கேட்டார். அவர்களின் கருத்துக்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறார் ஸ்டாலின்.

உடனே நடவடிக்கை
இந்நிலையில் எதிர்க்கட்சிகள், ஊடகங்களின் விமர்சனங்களை ஏற்று, சுட்டிக்காட்டும் குறைகளை கண்டு, அதை உடனே கவனத்தில் கொண்டு நடவடிக்கையும் எடுத்து வருகிறார் ஸ்டாலின். திருவள்ளூர் மாவட்டம், நேமம், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை முதல்வர் ஸ்டாலின் நேற்று பார்வையிட்டார்.

எங்கு குறைவு
அப்போது செய்தியாளர் ஒருவர் திருவள்ளூர் மாவட்டத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதிகள் குறைவாக இருப்பதாக சொல்லப்படுகிறதே? என்றார். அதற்கு பதில் அளித்த ஸ்டாலின்,. ஆட்சிப் பொறுப்பேற்பதற்கு முன்பும், ஆட்சிப் பொறுப்பேற்ற நேரத்திலும் அந்தச் சூழ்நிலை இருந்தது. அதை மறுக்கவில்லை. அது இப்போது சரி செய்யப்பட்டு இருக்கிறது. இப்போது எங்கும் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என்ற நிலைதான் இருக்கிறது. ஏதாவது குறிப்பிட்ட இடத்தில் இல்லை என்று சொன்னீர்கள் என்றால் நான் உடனடியாக நடவடிக்கை எடுக்கத் தயாராக இருக்கிறேன் என்று கூறினார்.

நடவடிக்கை எடுப்போம்
அடுத்தாக கோவை உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் கொரேனானா பரவுகிறது என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த ஸ்டாலின். மேற்கு மாவட்டங்களில் கொரோனா பரவல் கொஞ்சம் அதிகரித்து இருப்பது உண்மைதான். நான் மறுக்கவில்லை. சென்னைதான் முதலிடத்தில் இருந்தது. கோவை இரண்டாவது இடத்தில் இருந்தது. இப்போது சென்னையைப் பொறுத்தவரைக்கும் படிப்படியாகக் குறைந்து வந்து கொண்டிருப்பதை நீங்களே நேரடியாகப் பார்க்கிறீர்கள். கோவையைப் பொறுத்தவரைக்கும் குறைப்பதற்கான முயற்சிகளில் நாங்கள் ஈடுபட்டு இருக்கிறோம். தடுப்பதற்கான முயற்சிகளில் நாங்கள் ஈடுபட்டு இருக்கிறோம். அதற்கான பணிகள் வேகமாக நடைபெறுகிறது என்றார்.

மக்கள் நலன் முக்கியம்
திருவள்ளுர் மாவட்டத்தில் அம்மா உணவகங்கள் முறையாக செயல்படவில்லை என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த ஸ்டாலின்,
குற்றச்சாட்டுகள் எதுவாக இருந்தாலும் அதை உடனடியாகப் பரிசீலித்து ஆய்வு செய்து நிச்சயம் நடவடிக்கை எடுப்போம். நாங்கள் அரசியல் நோக்கத்தோடு எதையும் அணுகமாட்டோம். மக்கள் நலனை அடிப்படையாக வைத்துதான் அணுகுவோம் என்றார்.

எடப்பாடி பழனிசாமி புகார்
அண்மையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அதிமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட களபணியாளர்களை நீக்கப்போவதாக கூறப்படுகிறதே என்று கேள்வி எழுப்பினார். இதை மறுத்த ஸ்டாலின், யாரையும் நீக்க மாட்டோம் என்றார். இதேபோல் கடலூர் மருத்துவமனையில் ஆக்சிஜன் இல்லாமல் ஒருவர் இறந்தது குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுப்பிய குற்றச்சாட்டையும் உடனே விசாரிக்க உத்தரவிட்டார். அரசின் குறைகளை சுட்டிக்காட்டினால் உடனே நடவடிக்கை என்கிற அஸ்திரத்தை முதல்வர் ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் செயல்படுத்தி வருகிறார். இது எதிர்க்கட்சியினரிடையேயும் வரவேற்பை பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications