Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழின நிலப்பரப்புக்கு தமிழ்நாடு பெயரிட இயலாத அவமானம் அகற்றப்பட்ட நாள் இன்று- முதல்வர் மு.க.ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழினத்தின் நிலப்பரப்புக்கு தமிழ்நாடு என பெயரிட முடியாத அவமானம் அகற்றப்பட்ட நாள் ஜூலை 18 இன்று என்று தமிழ்நாடு நாள் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு வீடியோ கான்பரன்ஸ் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

ஜூலை 18 என்ற மதிப்புமிக்க நாளில் இத்தகைய சிறப்பான விழாவை ஏற்பாடு செய்திருக்கக்கூடிய அரசுத் துறைகளை நான் மனதாரப் பாராட்டுகிறேன். தமிழ்நாடு முதலமைச்சர் என்ற முறையிலும் எனது தனிப்பட்ட முறையிலும், பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
எத்தனையோ விழாக்கள், நிகழ்ச்சிகள் இருந்தாலும், தமிழ்நாடு திருநாள் என்ற நிகழ்ச்சிக்கு இணையானது எதுவுமில்லை. ஏனென்றால், 'தமிழ்நாடு நாள்', 'தமிழ்நாடு திருநாள்' என்று சொல்லும்போதே நமது உள்ளத்தில் ஒரு மகிழ்ச்சி ஏற்படுகிறது. அதனைச் சொல்லும்போதே ஒரு ஆற்றல் பிறக்கிறது.
"தமிழ்நாடு என்று பெயர் சூட்டியதைவிட, வேறு சாதனை ஏதாவது தேவையா?" : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை !
1938 முதல் தொடங்கிய அந்த போராட்ட உணர்ச்சியின் அடிப்படையாகத் தான்

CM MK Stalin Speech in Tamilnadu Day

* இந்தி எதிர்ப்பு போராட்டமாக இருந்தாலும் -
* தமிழ்க்காப்பு போராட்டமாக இருந்தாலும் -
* மொழிவாரி மாகாண உருவாக்கமாக இருந்தாலும் -
* தமிழ்நாடு என்று பெயர் சூட்டுவதற்கான முயற்சிகளாக இருந்தாலும் - இந்த நாட்டில் தொடங்கியது.அந்த விதையில் முளைத்தவை இந்தப் போராட்டங்கள்.

தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டுங்கள் என்று சொல்லி 72 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து மறைந்தார் விருதுநகர் தியாகி சங்கரலிங்கனார்! தலைகொடுத்தாவது தலைநகரைக் காப்பேன் - என்று முழங்கியவர் தமிழரசு கழகத் தலைவர் ம.பொ.சி.அவர்கள். தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை மொழிவாரி மாகாணம் உருவாக்க ஒப்படைத்துக் கொண்டவர் சிலம்புச் செல்வர் அவர்கள்.

திருத்தணியில் நடந்த தடியடியில் இறந்து போனார்கள் இரண்டு தியாகிகள். தென் எல்லைப் போராட்டத்தில் 11 பேர் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து போனார்கள். தமிழ்நாடு கேட்டு போராடுபவர்களை 'நான்சென்ஸ்' என்று சொன்னதை எதிர்த்து மும்முனைப் போராட்டம் நடத்தியது திராவிட முன்னேற்றக் கழகம். நாடுமுழுவதும் பல்லாயிரக்கணக்கானவர்கள் , பல மாதங்கள் சிறை வைக்கப்பட்டார்கள். தூத்துக்குடியில் நான்கு பேர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார்கள்.

CM MK Stalin Speech in Tamilnadu Day

"தமிழ்நாடு என்று பெயர் சூட்டியதைவிட, வேறு சாதனை ஏதாவது தேவையா?" : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை !
என்னுடைய ஒரே வருத்தம் என்பது, கலைவாணர் அரங்கிற்கே நேரடியாக வந்து கலந்துகொள்ள இயலவில்லையே என்பதுதான்! கொரோனா என்ற தொற்றால் பாதிக்கப்பட்டு, இரண்டு மூன்று நாட்களாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நான், இன்று காலையில்தான் இல்லம் திரும்பினேன்.

தொற்று என்பது முழுமையாக நீங்கிவிட்டது என்றாலும், மருத்துவர்களின் ஆலோசனைப்படி ஓய்வெடுத்து வருகிறேன். சாதாரணமான காய்ச்சலாக இருக்குமானால், அது குணமடைந்ததும் நம்முடைய பணிகளைத் தொடங்கி விடலாம். கொரோனா தொற்று என்பதால், அது மற்றவர்களுக்கும் பரவாமல் இருப்பதற்காக, நம்மைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். தொற்று நீங்கிவிட்டாலும், சில நாட்களாவது ஓய்வெடுக்க வேண்டும். அந்த அடிப்படையில், நேரடியாக வந்து விழாவில் பங்கேற்பது இயலாத ஒன்று ஆகிவிட்டது.

மற்ற நிகழ்ச்சிகளை ஒத்தி வைப்பது, தள்ளி வைப்பது போல, தமிழ்நாடு திருநாளை தள்ளி வைக்க இயலாது என்பதால், காணொலி மூலமாகவாவது பேசி விடுவது என்று நான் முடிவெடுத்தேன்.

தமிழ்நாடு நாளில் பேசுவது என்பது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பெருமை!

காணொலி மூலமாகப் பேசுவதன் மூலமாக, உடல்சோர்வு நீங்கிவிட்டதாகவே நான் உணர்கிறேன்.

CM MK Stalin Speech in Tamilnadu Day

"தமிழ்நாடு வாழ்க!
தமிழ்நாடு வாழ்க!
தமிழ்நாடு வாழ்க!"

என்று பேரறிஞர் பெருந்தகை அறிஞர் அண்ணா அவர்கள், 1967-ஆம் ஆண்டு ஜூலை 18-ஆம் நாள், தமிழ்நாடு சட்டமன்றத்தில் முழங்கிய முழக்கத்தை, மீண்டும் ஒரு முறை முழங்குவதன் மூலமாக, என் உள்ளத்தில் மலர்ச்சி ஏற்படுகிறது.

செந்தமிழ் நாடென்னும் போதினிலே -
இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே -
எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே -
ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே -

என்று பாடினார் மகாகவி பாரதியார். அத்தகைய உணர்ச்சியை நாம் இன்று பெறுகிறோம். இத்தகைய உணர்ச்சியை ஊட்டும் தமிழ்நாடு என்ற பெயர் சூட்டிய சாதனையானது, சாதாரணமாக நடந்து விடவில்லை.

தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் மாநிலத்துக்கு, தமிழ்நாடு என்று பெயர் சூட்டுவதற்கே நாம் பல பத்தாண்டுகளாகப் போராட வேண்டி வந்தது, வாதாட வேண்டி இருந்தது, பேச வேண்டி இருந்தது, எழுத வேண்டி இருந்தது, உயிரைத் தர வேண்டி இருந்தது, ரத்தம் சிந்த வேண்டி வந்தது, மாநிலங்களவையில் குரல் எழுப்ப வேண்டி வந்தது, சட்டமன்றத்தில் தொடர்ந்து கேட்க வேண்டி வந்தது, தீர்மானங்களைக் கொண்டு வர வேண்டி வந்தது. அத்தனைக்குப் பிறகும் 'தமிழ்நாடு' என்று சொல்வதற்கான அனுமதி கிடைக்கவில்லை.

இறுதியாக, திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் அமர்ந்த காரணத்தால்தான், தாய்த் தமிழ்நாட்டுக்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டது.

காஞ்சி தந்த வள்ளுவன் பேரறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக வந்ததால்தான் தாய்த் தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டது.

"தமிழாய்ந்த தமிழ்மகன்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆதல் வேண்டும்" என்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் குறிப்பிட்டாரே...!

அத்தகைய தலைமகனான பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில், நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர், நாவலர் போன்றவர்கள் அமைச்சர்களாக வந்ததால்தான், இந்தத் தாய்த் தமிழ்நாட்டுக்கு, தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டது.

CM MK Stalin Speech in Tamilnadu Day

பேரறிஞர் அண்ணா

திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இயக்கம் உருவாகாமல் போயிருந்தால், தமிழ்நாட்டில் இந்த இயக்கம் ஆட்சிக்கு வராமால் போயிருந்தால், இந்த மாநிலத்திற்கு இன்று வரையில் தமிழ்நாடு என்ற பெயர் சூட்டப்படாமலே இருந்திருக்கும் என்பதை யாரும் மறந்துவிடவேண்டாம்.

உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம் போல இதுவும், 'சென்னைப் பிரதேசம்' என்று அடையாளமற்ற மாநிலமாகத்தான், இன்று வரை இருந்திருக்கும் என்பதை யாரும் மறந்துவிட வேண்டாம்.

திராவிடம் என்ன கிழித்தது என்று வாய்கிழியப் பேசுபவர்கள் இதனை அறிய வேண்டும்.

தமிழ்நாட்டுக்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டியதைவிட, வேறு சாதனை ஏதாவது தேவையா?

மூவாயிரம் ஆண்டு பழமை கொண்ட தமிழ்மொழிக்குச் செம்மொழி என்ற தகுதியைப் பெற்றுத் தந்தது திராவிட முன்னேற்றக் கழகத்தின் சாதனை அல்லவா? இதனைவிட வேறு சாதனை தேவையா? இத்தகைய சாதனைச் சரித்திரத்துக்குச் சொந்தக்காரர்கள் நாம்.

அதனால்தான், தமிழ்நாடு நாளைத் தமிழ்நாடு திருநாளாக நாம் கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம். உலகம் முழுவதும் பரந்து விரிந்து வாழும் ஓர் இனம் உண்டென்றால் அது தமிழினம்தான்.

நம்முடைய இனம், ஒரு நிலத்தில் ஒரு நாட்டில் மட்டுமே வாழும் இனம் அல்ல, உலகளாவிய இனம். முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் அதிக எண்ணிக்கையிலும், அறுபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் குறைந்த எண்ணிக்கையிலும் தமிழர்கள் வாழ்கிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும் தமிழ்நாடுதான் தாய்வீடு!
இவர்கள் அனைவருக்கும் தமிழ்நாடுதான் தாய்நாடு!

"கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு
முன் தோன்றிய மூத்த குடி - நம்முடைய தமிழ்க்குடி!"

அத்தகைய தமிழ்க்குடியின் தாய்மடி இந்தத் தமிழ்நாடுதான்!

தமிழ்நாட்டில், கி.மு.ஆறாம் நூற்றாண்டிலேயே நகரமயமாக்கம் ஏற்பட்டிருந்தது என்பதை, கீழடி நமக்கு நிரூபித்துக் கொண்டு இருக்கிறது. அதேபோல், சிவகளை முதுமக்கள் தாழியில் கண்டெடுக்கப்பட்ட உமி நீங்கிய நெல்மணிகளின் காலம் கி.மு.1155 எனக் கண்டறியப்பட்டுள்ளது.

'தண் பொருநை' என்று அழைக்கப்பட்ட தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகம் மூவாயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முற்பட்டது. இவை அனைத்தும் உலகப்புகழ்பெற்ற மானுடவியல் ஆராய்ச்சியாளர்களால் ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மைகள். "உலகில் முதலில் பிறந்த குரங்கு - தமிழ்க்குரங்குதான்" என்று நம்மைச் சிலர் அந்தக் காலத்தில் கிண்டல் செய்வார்கள். அதைப் பற்றி நமக்குக் கவலையில்லை.

நாம் எதைச் சொன்னாலும் ஆய்வுப்பூர்வமாகத்தான் சொல்கிறோம். சிலர் போலக் கற்பனையாகச் சொல்லவில்லை. அத்தகைய வரலாற்றுப் பெருமை கொண்ட நமது தமிழினம் வாழ்ந்த நிலப்பரப்புக்கு, தமிழ்நாடு என்ற பெயர் இல்லை. அதற்காகவும் போராட வேண்டி இருந்தது என்பது அவமானம் அல்லவா? அந்த அவமானம் துடைக்கப்பட்ட நாள்தான், இந்த ஜூலை 18-ஆம் நாள்!. இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+