நானும் பத்திரிகையாளர்... பாராட்டுபவர்களுக்கு தான்.. திட்டுவதற்கும் உரிமை இருக்கிறது -முதல்வர் பேச்சு
சென்னை: பாராட்ட வேண்டிய நேரத்தில் பாராட்டுபவர்களுக்கு மட்டுமே திட்டுவதற்கும் உரிமை இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஆங்கில நாளிதழ் ஒன்று நடத்திய கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய அவர், இந்த நிகழ்ச்சிக்கு முதலமைச்சராக வரவில்லை, ஒரு பத்திரிகையாளராக வந்திருக்கிறேன் என பெருமிதம் தெரிவித்தார்.
முரசொலி நாளிதழில் கல்லுரிக்காலத்திலேயே பணியாற்றத் தொடங்கிவிட்டதாகவும் இப்போது நேரம் கிடைக்கும் போதெல்லாம் முரசொலி நாளிதழ் அலுவலகத்துக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருப்பதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

ஆங்கில நாளிதழ்
முன்னணி ஆங்கில நாளிதழ் ஒன்று 'ட்ரியல்லன் டாலர் தமிழ்நாடு' என்ற பெயரில் சிறப்புக் கருத்தரங்கம் சென்னையில் நடத்தியது. அதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அச்சுத் தொழிலை நச்சுத் தொழில் என அந்தக் காலத்தில் பலரும் சொல்ல தாம் கேட்டிருப்பதாகவும், அந்தளவுக்கு ஒரு பத்திரிகையை நடத்துவதில் ஆயிரம் கஷ்டங்கள் இருக்கக் கூடும் எனவும் தெரிவித்தார். முரசொலி நாளிதழை நடத்தி வருவதால் பத்திரிகையாளர் என்ற அடிப்படையில் தமக்கும் இது தொடர்பான சிக்கல்கள் தெரியும் எனக் கூறினார்.

முரசொலியில் பணி
பள்ளி மற்றும் கல்லூரிக்காலங்களில் மாலை நேரத்தில் முரசொலி அலுவலகத்துக்கு சென்று பணிபுரிந்த அனுபவங்களை பகிர்ந்த முதலமைச்சர் ஸ்டாலின், நாளிதழை வெளியூர்களுக்கு பார்சல் அனுப்பி வைப்பது வரை தாம் எல்லா நிலைகளிலும் வேலைபார்த்துள்ளதாக நினைவலைகளை பகிர்ந்துகொண்டார். இந்தியாவிலேயே ஏற்றுமதியில் 3-வது மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என பெருமிதம் தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின், அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சி, அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்கிற வகையில் அரசு செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.

முதல்வர் வருத்தம்
பாராட்ட வேண்டிய நேரத்தில் பாராட்டுபவர்களுக்கு மட்டுமே திட்டுவதற்கும் உரிமை இருப்பதாக கூறிய அவர், சிறுதவறுகளை ஊதி பெரிதுபடுத்தும் ஒரு சில பத்திரிகைகள் அரசின் நல்ல செயல்திட்டங்களை பாராட்ட மனமின்றி நடந்துகொள்வதாக ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இதனிடையே, அரசை பாராட்ட எழுதுங்கள் என தாம் கட்டளை போடவில்லை என்றும் தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து விமர்சனம் வைக்கலாம் என்றும் அதை திறந்த மனதோடு ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தனிநபர் வருமானம்
தமிழகத்தில் தனி நபர் வருமானம் அதிகரிக்க வேண்டும் என்பதை இலக்காக கொண்டு அரசு செயல்பட்டு வருவதாகவும் தமிழகத்தை தொழில்துறையில் முதலிடத்திற்கு உயர்த்திக்காட்டுவதே தமது லட்சியம் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.












Click it and Unblock the Notifications