தமிழ்நாட்டில் ‘கேலோ’ போட்டிகள் : பச்சைக்கொடி காட்டிய பிரதமருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நன்றி!
சென்னை : 'கேலோ இந்தியா' விளையாட்டு போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்த அனுமதி அளித்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர்.
நடப்பு ஆண்டுக்கான கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்த மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. சென்னை மாமல்லபுரத்தில் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வெகு சிறப்பாக நடத்தப்பட்டது. இதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட பிரம்மாண்ட நிகழ்ச்சிகள், போட்டியாளர்களுக்கான பிரத்யேக ஏற்பாடுகள் அனைவரின் பாராட்டுகளையும் பெற்றன.

இதனைத்தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் சென்னை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சர்வதேச விளையாட்டு போட்டிகளை நடத்துவதற்கான தமிழ்நாட்டின் தொலைநோக்கு பார்வையை கருத்தில் கொண்டு அடுத்த கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்த அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.
இதேபோல, விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டெல்லி சென்று, பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்தபோதும், கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்நிலையில், இந்தக் கோரிக்கைகளை ஏற்று பிரதமர் மோடி ஒப்புதல் அளித்துள்ளார்.
இளம் விளையாட்டு வீரர்களை ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேச போட்டிகளுக்கு தயார்படுத்துவதற்காக கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த போட்டிகளில் வெற்றி பெறும் இளம் வீரர்கள் தேசிய அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெற வாய்ப்பு கிடைக்கும் .
கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்த ஒப்புதல் அளித்த பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார். 2023-ம்ஆண்டு 'கேலோ இந்தியா' விளையாட்டு போட்டிகளை தமிழகத்தில் நடத்த வேண்டும் என்ற எனதுவேண்டுகோளை ஏற்றுக்கொண்டதற்காக, பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ்நாட்டின் கலாச்சாரத்தையும், விருந்தோம்பலையும் உணர்த்தும் வகையில் கேலோ இந்தியா போட்டி நடத்தப்படும். இந்தியாவில் உள்ள இளைஞர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி சிறந்த களமாக அமையும் எனவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "முதல்வர் ஸ்டாலினின் வேண்டுகோளை ஏற்று, 'கேலோ இந்தியா' போட்டிகளை நடத்த தகுதியான மாநிலமாக தமிழகம் தேர்ந்தெடுக்கப்பட்டதில் மகிழ்ச்சி. இதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications