பரபர நொடிகள்! அன்பில் மகேஷுக்கு நெஞ்சு வலி.. கேட்டதும் பதறிப்போன உதயநிதி.. உடனே வரச் சொன்ன ஸ்டாலின்!
சென்னை: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி காரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட தகவல் அறிந்து முதல்வர் ஸ்டாலினும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் பதறிப்போய் விசாரித்துள்ளனர். முதல்வர் ஸ்டாலின், உடனே சென்னைக்கு வருமாறு கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியை முடித்துவிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெறவிருந்த அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக காரில் சென்று கொண்டிருந்தார். தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தை நெருங்கியபோது அவருக்கு திடீரென லேசாக நெஞ்சு வலி ஏற்பட்டது.

திடீர் நெஞ்சு வலி: இதையடுத்து, காரிமங்கலத்தில் இருந்த முன்னாள் அமைச்சரும், திமுக மாவட்ட செயலாளருமான பழனியப்பனிடம் தகவலைச் சொல்லியுள்ளார். உடனடியாக அவர், காரிமங்கலத்திலேயே மருத்துவரைப் பார்க்கலாம், உடனே வாருங்கள் என அழைத்ததோடு, அதற்குள் முக்கியமான மருத்துவரிடம் பேசி அன்பில் மகேஷை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க ஏற்பாடுகளைச் செய்தார்.
காரிமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடனடி சிகிச்சைக்காக அமைச்சர் அன்பில் மகேஷை அனுமதித்தினர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் மேற்கொண்டதில் அஜீரணம் தொடர்பான பிரச்சனை ஏற்பட்டிருக்கலாம் கூறி அவருக்கு சிகிச்சை அளித்தனர். அதற்குள் தகவல் அறிந்து, கிருஷ்ணகிரியில் இருந்து அமைச்சர்கள் சக்கரபாணி, சிவசங்கரும் மருத்துவமனைக்கு வந்தனர். திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் மருத்துவமனை முன்பாக திரண்டனர்.
உடனே சென்னை வாங்க: இதற்குள் முதலமைச்சர் ஸ்டாலினுக்கும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் தகவல் சொல்லப்பட்டுள்ளது. உடனடியாக மா.செ பழனியப்பனுக்கு அழைத்த முதல்வர் அன்பில் மகேஷின் உடல்நிலை குறித்து கேட்டறிந்து, அவரிடமே போனை கொடுக்கச் சொல்லி பேசியுள்ளார். அன்பில் மகேஷுக்கு தைரியம் கொடுத்த முதல்வர் ஸ்டாலின், உடனே சென்னை வந்துடுங்க.. இங்கே பார்த்துக்கலாம் எனக் கூறியுள்ளார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், தனது நீண்டகால நண்பனான அன்பில் மகேஷ் உடல்நிலை குறித்த தகவலால் அதிர்ந்து, அவரிடம் போனில் பேசி விசாரித்துள்ளார். அன்பில் மகேஷும், முதல்வர் ஸ்டாலின் சொன்னபடி, சென்னைக்கு செல்லும் முடிவில் இருந்தார். எனினும், மருத்துவர்கள், பயப்படும்படி ஒன்றும் இல்லை என்றாலும், அலட்சியமாக இருக்ககூடாது, சென்னை செல்வதை விட பெங்களூருக்கு விரைவாகச் சென்றுவிடலாம். அங்கே போய் இதய நிபுணரை கன்சல்ட் செய்து பார்த்துவிடுங்கள் எனக் கூறி அனுப்பி வைத்தனர்.
பெங்களூருக்கு கிளம்பிய அமைச்சர்கள்: அமைச்சர்கள் அர.சக்கரபாணி, எஸ்.எஸ்.சிவசங்கர், முன்னாள் அமைச்சர் பழனியப்பன், எம்,ல்.ஏ ஒய்.பிரகாஷ் மற்றும் திமுக நிர்வாகிகள் பத்துக்கும் மேற்பட்ட கார்களில் பெங்களூர் சென்றனர். அங்கு நாராயணா ஹிருதாலயா மருத்துவமனையில் அன்பில் மகேஷுக்கு மருத்துவப் பரிசோதனைகள் நடைபெற்றன.
இசிஜி மற்றும் ஆஞ்சியோகிராம் பரிசோதனைகள் நடந்தன. அதைத் தொடர்ந்து, அவர் நலமுடன் உள்ளதாகவும், மாரடைப்பு அறிகுறிகள் எதுவும் இல்லை என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். நாளை இங்கிருந்து செல்லலாம் எனக் கூறி மருத்துவமனையிலேயே ஓய்வெடுக்குமாறு கூறியுள்ளனர்.
முதல்வரிடம் போனில் பேசிய மகேஷ்: இதையடுத்து உடனடியாக, முதல்வர் ஸ்டாலினிடமும், உதயநிதி ஸ்டாலினிடமும், தனது குடும்பத்தினருடனும் அன்பில் மகேஷ் போனில் பேசி, ஒன்றும் இல்லை, அஜீரணப் பிரச்சனைதான் என டாக்டர்கள் சொல்லிவிட்டனர், இன்று பயணிக்க வேண்டாம் எனக் கூறியுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.
அன்பில் மகேஷ் உடல்நிலை பற்றி தகவல் வந்தது முதல் தொடர்ந்து, முதல்வரும், அமைச்சர் உதயநிதியும் அமைச்சர்களிடமும், முன்னாள் அமைச்சர் பழனியப்பனிடமும் பேசி, அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் உடல் நிலை குறித்து விசாரித்தபடியே இருந்துள்ளனர். அன்பில் மகேஷுக்கு பெங்களூரில் பரிசோதனை முடிந்து டாக்டர்கள், எந்த பிரச்சனையும் இல்லை என்று சொன்ன தகவலை கூறிய பிறகே நிம்மதி அடைந்தனராம்.












Click it and Unblock the Notifications