ஊழல்வாதிகள் பாஜக கூட்டணிக்கு வந்தபின்பு, #WashingMachine-இல் வெளுப்பது எப்படி? மு.க.ஸ்டாலின் சுளீர்
சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் நேற்று பேசிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மத்திய அரசை நோக்கி கேள்விகளை எழுப்பியிருந்தார். நாட்டின் மக்கள் தொகையில் தமிழ்நாடு ஆறு சதவீதத்தை கொண்டிருக்கும் நிலையில் நான்கு சதவீதம் மட்டுமே நிதி பகிர்வு அளிப்பது ஏன் என கேள்வி எழுப்பியிருந்தார். இந்த நிலையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மட்டுமல்ல நாட்டு மக்களின் நெஞ்சங்களிலும் ஏராளமான கேள்விகள் நிரம்பி இருக்கிறது என கூறியுள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தமிழ்நாடு சட்டசபை கூட்டத் தொடர் நடைபெற்ற நிலையில் நேற்று தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார். அப்போது மத்திய அரசை நோக்கி பல்வேறு கேள்விகளை எழுப்பினார். இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் தமிழ்நாடு ஆறு சதவீதத்தை கொண்டிருக்கும் நிலையில் நான்கு சதவீத நிதி பகிர்வு மட்டுமே அளிக்கப்படுவதாக கூறினார்.
மேலும் உத்தரபிரதேசம் பீகார் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்குவது ஏன் எனவும் கேள்வி எழுப்பியிருந்தார். இந்த நிலையில் தங்கம் தென்னரசுவின் பேச்சை சுட்டிக்காட்டி உள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு எழுப்பிய கேள்விகளை விட நாட்டு மக்களிடம் நிறைய கேள்விகள் எழுந்துள்ளது. நானும் கேட்கிறேன் என சில கேள்விகளை முன் வைத்துள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிடுள்ள அவர்," மாண்புமிகு நிதி அமைச்சர்
தங்கம் தென்னரசு அவர்களுக்கு மட்டுமல்ல, நாட்டு மக்களின் நெஞ்சங்களிலும் ஏராளமான கேள்விகள் நிரம்பியுள்ளன. அவற்றில் சிலவற்றை நான் கேட்கிறேன்: ஊழல்வாதிகள் பா.ஜ.க.வின் கூட்டணிக்கு வந்தபின்பு, #WashingMachine-இல் வெளுப்பது எப்படி?
நாட்டின் முக்கியமான திட்டங்களுக்கும், சட்டங்களுக்கும் இந்தியிலும் சமஸ்கிருதத்திலும் மட்டுமே பெயரிடப்படுவது என்ன மாதிரியான ஆணவம்? ஒன்றிய அமைச்சர்களே நம் குழந்தைகளை அறிவியலுக்குப் புறம்பான மூடநம்பிக்கைகளைச் சொல்லி மட்டுப்படுத்துவது ஏன்? எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில், ஆளுநர்களை வைத்துக் குழப்பம் விளைவித்து என்ன சாதிக்கப் போகிறீர்கள்?
பா.ஜ.க.வின் தேர்தல் வெற்றிக்காக, மக்களின் வாக்குகளைப் பறிக்கும் வாக்குத் திருட்டை #SIR ஆதரிப்பது ஏன்? இரும்பின் தொன்மை குறித்து அறிவியல்பூர்வமாகத் தமிழ்நாடு மெய்ப்பித்த அறிக்கையைக்கூட அங்கீகரிக்க மனம்வராதது ஏன்? கீழடி அறிக்கையைத் தடுக்கக் குட்டிக்கரணங்கள் போடுவது ஏன்? இதற்கெல்லாம் பதில் வருமா? இல்லை வழக்கம்போல, வாட்சப் யூனிவர்சிட்டியில் பொய்ப் பிரசாரத்தைத் தொடங்குவீர்களா?" என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications