ரூ.2 லட்சம் ரொக்கம் + ஒரு சவரன் தங்கப்பதக்கம்.. தமிழக அரசின் 7 முக்கிய விருதுகளை வழங்கிய ஸ்டாலின்
சென்னை: தமிழ் மொழிக்கும், தமிழ் பண்பாட்டுக்கும் தொடர்ந்து உழைத்து வரும் 7 பேருக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று முக்கிய விருதுகளை வழங்கினார். ரூ.2 லட்சத்துடன் ஒரு சவரன் தங்கப்பதக்கத்தை முதல்வர் ஸ்டாலின் வழங்கி அவர்களை பாராட்டினார்.
தமிழக அரசு சார்பில் தமிழ் மொழி வளர்ச்சிக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் தமிழ் மொழி, பண்பாடு தொடர்பான படைப்புகள், ஆய்வுகளை மேற்கொண்டு வரும் அறிஞர்களுக்கு ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் நேற்று 7 பேருக்கான விருது பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி அய்யன் அய்யன் திருவள்ளுவர் விருது என்பது பாலமுருகனடிமை சுவாமிக்கும், பேரறிஞர் அண்ணா விருது பத்தமடை பரமசிவத்துக்கும் அறிவிக்கப்பட்டது.
மேலும் பெருந்தலைவர் காமராசர் விருது காங்கிரஸ் கட்சியின் உ.பலராமனுக்கும், மகாகவி பாரதியார் விருது கவிஞரும், பாடலாசிரியருமான பழனி பாரதிக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருது எழுச்சி கவிஞர் ம. முத்தரசுவுக்கும்,
முத்தமிழ் காவலர் கிஆபெ விசுவநாதன் விருது முனைவர் இரா கருணாநிதி, தென்றல் திருவிக விருது பெற்ற பேராசிரியர் எஸ் ஜெயசீல ஸ்டீபனுக்கும் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து விருது வழங்கும் விழா இன்று சென்னை தலைமை செயலகத்தில் நடந்தது. முதல்வர் முக ஸ்டாலின் 7 பேருக்கும் விருது வழங்கினார். ஒவ்வொருவருக்கும் விருதுத்தொகையாக ரூபாய் இரண்டு லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது. அதன்பிறகு அவர்கள் அனைவரும் முதல்வர் ஸ்டாலினுடன் சேர்ந்து குழு புகைப்படம் எடுத்து கொண்டனர்.
தற்போது அய்யன் திருவள்ளுவர் விருது பெற்ற பாலமுருகனடிமை சுவாமி பள்ளி மாணவர்களுக்கு 1983ம் ஆண்டிலிருந்து திருக்குறள் ஒப்புவித்தல், கட்டுரை, பேச்சு போட்டிகள் நடத்தி வெற்றிபெறுவோருக்கு விழா எடுத்து ரூபாய் 3 லட்சம் பரிசு வழங்கி வருகிறார். மேலும் உலகத் திருக்குறள் மாநாடு மாநில அளவில் இருமுறை நடத்தி தமிழ் தொண்டாற்றியுள்ளார்.
பேரறிஞர் அண்ணா விருது பெற்ற பத்தமடை பரமசிவம் பேரறிஞர் அண்ணாவின் முதன்மை தொண்டர் என பாராட்டப்படுபவர். இவர் தனது 18 வயது முதல் திராவிட இயக்கத்தில் ஈடுபட்டு பல்வேறு போராட்டங்களில் பங்கு கொண்டு சிறை சென்றவர் ஆவார். அதேபோல் பெருந்தலைவர் காமராசர் விருது பெற்ற உ.பலராமன் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக இருக்கிறார். முன்னாள் எம்எல்ஏவான இவர் தேசிய தமிழ் கவிஞர் பேராயம், சிலப்புச் செல்வம் மபொசியை கொண்டு இளங்கோ இலக்கிய மன்றம் ஆகிய அமைப்புகளை தொடங்கியவர்.
பாடலாசிரியரும், கவிஞருமான பழனி பாரதி தனது எழுத்து மூலம் தமிழுக்கு தொண்டாற்றி வருகிறார். தமிழ்நாடு அரசின் முதன்மையான பல்கலைக்கழங்கள், கேரள மாநில அரசின் பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பாடத்திட்டத்தில் இடம் பெறும் அளவிற்கு கவிதைகளை படைத்துள்ளார். பாவேந்தர் பாரதிதாசன் விருது பெற்ற ம முத்தரசு, முத்தமிழஞர் கலைஞரின் முத்தரசனாரின் ‛‛கற்கண்டு கவிதை கேட்டு கழிப்பேறுவகை கொண்டேன்'' என்று பாராட்டை பெற்றுள்ளார். 92 வயதிலும் கூட தனித்தமிழ் வேட்டை அகலாமல் அருந்தமிழ் பணியாற்றி வருகிறார். இவர் எழுச்சி கவிஞர் என அழைக்கப்பட்டு வருகிறார்.
தென்றல் திருவிக விருது பெற்ற பேராசிரியர் எஸ் ஜெயசீல ஸ்டீபன் பல்வேறு நாடுகளின் ஆவண காப்பகங்களில் தகவல்களை திரட்டி வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். சோழமண்டல கடற்கரையை முழுமையாக ஆய்வு செய்துள்ளார். முத்தமிழ் காவலர் கிஆபெ விசுவநாதன் விருது பெற்ற இரா கருணாநிதி தமிழ் இலக்கணத்தை மாணவர்கள் எளிமையாக கற்கும் வகையில் பாடல்களாக அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications