கள்ளக்குறிச்சி மேட்டரில் சதி.. எதையோ மறைக்கத்தான் சிபிஐ விசாரணை கேட்கிறார்கள்.. ஸ்டாலின் சந்தேகம்!
சென்னை: ஒருபுறம் தேர்தல் தோல்வி, மறுபுறம் சொந்தக் கட்சியினரின் நெருக்கடி என சிக்கித் தவிக்கிறது அதிமுக, அதை மறைக்கத்தான் கள்ளக்குறிச்சி விவகாரத்தை எழுப்பி அதிமுக சதி செய்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.
கள்ளச்சாராய விற்பனையை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில் மதுவிலக்கு சட்டத்திருத்த மசோதா தமிழக சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மதுவிலக்கு சட்டத்திருத்த மமசோதாவை அமைச்சர் முத்துசாமி தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், தமிழகத்தில் செய்கூலி, சேதாரமின்றி, நாற்பதுக்கு நாற்பது தொகுதிகளிலும் வெற்றி பெற்றுத் தந்த மக்களுக்கு தலைவணங்கி நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மக்களவைத் தேர்தல் முடிவுகளை அலசி ஆராய்ந்தால் 221 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
'வாக்களித்த மக்கள் - வாக்களிக்காத மக்கள்' என்ற பாகுபாடின்றி, அனைவருக்கும் கடந்த மூன்றாண்டு காலத்தில் ஏராளமான நன்மைகளைச் செய்துள்ளோம். அதற்கான அங்கீகாரத்தை வாக்குகள் மூலமாக மக்கள் நமக்கு அளித்துள்ளார்கள். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நின்று, வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கு வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
வரும் இரண்டாண்டு காலமும் இதே போன்ற ஈடு இணையற்ற திட்டங்களைத் தீட்டித் தந்து, 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் மகத்தான வெற்றியை நாங்கள் பெறுவோம் இதனை மமதையோடு நான் சொல்லவில்லை; மனச்சாட்சிப்படி செயல்படும் இந்த ஸ்டாலின் மீதும் திராவிட மாடல் அரசின் மீதும் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையின் அடிப்படையில் துணிச்சலோடு சொல்கிறேன்.” என்றார். அதைத்தொடர்ந்து கள்ளக்குறிச்சி விவகாரம் பற்றி பேசினார் முதல்வர் ஸ்டாலின்.
“இந்தத் தேர்தல் தோல்வியை மறைக்க அவர்கள் போட்ட சதித்திட்டம்தான், நடவடிக்கை எடுக்கப்பட்ட கள்ளக்குறிச்சி விவகாரத்தை தொடர்ந்து கிளப்பியது. கடந்த 19 ஆம் தேதி இந்த சம்பவத்தை நான் கேள்விப்பட்டதும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டேன். அது குறித்து இதே அவையில் 20 ஆம் தேதி முழுமையான அறிக்கையை தாக்கல் செய்துள்ளேன். கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கான உண்மையான காரணத்தை அறிய - உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் கோகுல்தாஸ் அவர்கள் தலைமையில் ஆணையம் அமைத்தேன். சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க உத்தரவிட்டேன்.
அமைச்சர்கள், உள்துறை செயலாளர், டி.ஜி.பி. ஆகியோரை உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்தேன். குற்றவாளிகளில் 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கள்ளச்சாராயம், விஷச்சாராயம் ஒழிப்பு மற்றும் குற்றவாளிகள் கைது நடவடிக்கைகள் தீவிரமாகத் தொடர்கிறது.
இறந்தோர் மற்றும் பாதிக்கப்பட்டோர் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. பெற்றோரை இழந்த பிள்ளைகளின் கல்வி, வாழ்க்கைப் பொறுப்பை அரசு ஏற்றுக் கொண்டிருக்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது பணியிடை நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட நடவடிக்கைகளை 24 மணி நேரத்தில் எடுத்துள்ளோம். இதன் பிறகும் நடவடிக்கைகள் சரியில்லை என்று சொல்வது, அவர்கள் நடத்தும் திசைதிருப்பல் நாடகம்.
எதை மறைத்தோம் என்று சி.பி.ஐ. விசாரணை கேட்கிறார்கள்? "சாத்தான்குளம் சம்பவத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டதற்கே சி.பி.ஐ. விசாரணை கேட்டீர்களே" என்று எதிர்க்கட்சித் தலைவர் பேட்டி அளித்திருக்கிறார். மனித உயிர்கள் இறந்து போனால், இரண்டு பேரா, இருபது பேரா என்று பார்ப்பது இல்லை. ஒரே ஒருவர் இறந்தாலும் அது மாபெரும் இழப்புதான். சாத்தான்குளம் சம்பவத்தை அன்றைய அ.தி.மு.க. அரசு முழுக்க முழுக்க மறைக்க, திரிக்க நினைத்தது. அதனால் அப்போது சி.பி.ஐ. விசாரணை கேட்டோம். ஆனால் இன்றைக்கு இந்த அரசு எதையும் மறைக்கவில்லை. குறுகிய காலத்திற்குள், குற்றவாளிகளைக் கைது செய்து, ஒருவர்கூட தப்ப முடியாது என்ற நிலையை உருவாக்கி இருக்கிறோம்.” என்றார்.
மேலும், “ஒருபுறம் தேர்தல் தோல்வி, மறுபுறம் சொந்தக் கட்சியினரின் நெருக்கடி என சிக்கித் தவிக்கிறது அதிமுக, அதை மறைக்கத்தான் கள்ளக்குறிச்சி விவகாரத்தை எழுப்பி அதிமுக சதி செய்கிறது” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.
மேலும் தமிழகத்தில் குற்றங்களைத் தடுக்க தண்டனைகள் கடுமையாக்கப்படும். சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுக அளித்த 190 ஆறிவிப்புகளில் கடந்த 3 ஆண்டுகளில் 179 திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறோம். காவலர்கள் விடுப்புக்கு விண்ணப்பம் செய்ய செயலி அறிமுகம் செய்துள்ளோம்.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றவாளிகள் 8 பேரின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுவரை இந்த வழக்கில் 268 சாட்சியங்களிடம் விசாரணை நடைபெற்றுள்ளது. மேலும் சிலருக்குத் தொடர்புள்ளதா என்ற கோணத்தில் விசாரிக்க இன்டர்போல் உதவியை நாடியுள்ளோம். பொதுமக்கள் அதிகம் கூடும் அனைத்து திருவிழாக்களும் அமைதியாக நடந்து முடிந்துள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications