நெருங்கும் புயல்.. அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை! முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு அறிவுறுத்தல்
சென்னை: இலங்கையை ஒட்டிய கடல் பகுதியில் உருவாகியிருக்கும் புயல், அடுத்த 2 நாட்களுக்கு சென்னையை நெருங்கும் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக பருவமழை இயல்பை விட அதிகரிக்கலாம். எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனையில் மேற்கொண்டார்.
தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு இலங்கை-இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இன்று புயலாக உருவெடுத்திருக்கிறது. இந்த புயல் இலங்கையிலிருந்து கிழக்கு வட கிழக்கே சுமார் 120 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 730 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டிருக்கிறது.

இது வடக்கு வடமேற்கு திசையில் நடந்து, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளில் வழியாக வட தமிழகம், புதுவை மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதியை நோக்கி வரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. இதன் காரணமாக நாளை டெல்டா மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்றும், தரைக்காற்று 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசப்படும் என்றும் எச்சரித்திருந்தது.
அதேபோல நாளை மறுநாள், டெல்டா மற்றும் வட தமிழக மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கப்பட்டு இருக்கிறது. மழை தொடர்பாக ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துறை சார்ந்த அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
ஆலோசனை கூட்டத்தில் பொறுப்பு டிஜிபி. ஏடிஜிபி, அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன், தலைமை செயலாளர், வருவாய் துறை செயலாளர், பொதுப்பணித்துறை மற்றும் உள்துறை செயலாளர், சென்னை மாநகராட்சி போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் பங்கேற்று இருந்தனர்.
முகாம்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை உடனடியாக அங்கிருந்து மீட்டு, மேடான பகுதியில் தங்க வைக்கப்பட்டு அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார். அதேபோல செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களை சேர்ந்த ஆட்சியர்களிடமும் காணொளி வாயிலாக முதலமைச்சர் பேசி, சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
கனமழையால் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கக் கூடிய மாவட்டங்களில், போதுமான அளவுக்கு மருந்து மற்றும் உணவு இருப்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், குழந்தைகள் பெண்கள் மற்றும் வயதானவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
அதேபோல தமிழகத்தில் உள்ள நீர் நிலைகளை கண்காணிப்பது, ஆபத்தான நிலைக்கு நீர் மட்டம் உயர்ந்தால் உடனடியாக அதை வெளியேற்றுவது உள்ளிட்ட விஷயங்கள் தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் மற்றும் துறை செயலாளர் ஜெயகாந்தன் ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications