செந்தில் பாலாஜி நீக்கம்.. ஆளுநர் ஆக்ஷனால் கொதித்துப்பொன ஸ்டாலின்! “அதிகாரமே இல்லை” உடனடி ரியாக்ஷன்!
சென்னை: செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்ட நிலையில், இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக எதிர்வினை ஆற்றியுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இந்நிலையில் தான் அவரை அமலாக்கத்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். இதய பிரச்சனை காரணமாக பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது சிகிச்சையில் இருந்து வருகிறார் செந்தில் பாலாஜி.

இதையடுத்து, செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக இருக்க முதல்வர் ஸ்டாலின் பரிந்துரைத்தார். அவரது வசம் இருந்த இலாகாக்கள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துச்சாமி ஆகியோருக்கு கூடுதலாக வழங்கப்பட்டன. இதில் இலாகா மாற்றத்துக்கு ஆளுநர் ஆர்என் ரவி ஒப்புதல் வழங்கினார். ஆனால், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர அவர் ஒப்புக்கொள்ளவில்லை.
இதுதொடர்பாக தமிழக அரசு மற்றும் ஆளுநர் ஆர்என் ரவிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் தனது அதிகாரத்தை பயன்படுத்தி இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிப்பு வெளியிட்டார்.
இந்நிலையில் ஆளுநர் ஆர்என் ரவி இன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி தமிழ்நாடு அமைச்சரவையில் இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்து வரும் செந்தில் பாலாஜியை ஆளுநர் ரவி, அமைச்சரவையில் இருந்து நீக்கியுள்ளதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. இது அரசியல் அரங்கில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆளுநருக்கு அதிகாரம் இல்லை: அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்குவதாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிவிப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக எதிர்வினை ஆற்றியுள்ளார். "ஆளுநருக்கு இதற்கு அதிகாரம் கிடையாது, இதை நாங்கள் சட்ட ரீதியாக சந்திப்போம்" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாகப் பேசியுள்ள திமுக செய்தி தொடர்பாளர் கான்ஸ்டண்டைன் ரவீந்திரன், "ஆளுநரின் அறிவிப்பை பொருட்டாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. தனக்கு அதிகாரம் இல்லாத ஒன்றை ஒரு அரசு அதிகாரி ஒரு பேப்பரில் கையெழுத்து போட்டுக் கொடுத்தால் அதற்கு என்ன நிலைமையோ அதுதான் இதற்கும் மதிப்பு.
ஆளுநர் கூறியுள்ள காரணங்கள் உண்மை என்றே ஒரு வாதத்திற்கு ஏற்றுக்கொண்டாலும், அமைச்சரவையில் இருந்து டிஸ்மிஸ் செய்வதற்கு ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. அதை ஒரு பரிந்துரையாக முதலமைச்சருக்குத்தான் அனுப்ப முடியும். அவரே டிஸ்மிஸ் செய்ய முடியாது.
2015 காலகட்டத்தில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி மீது குற்றம் சுமத்தப்படுகிறது. அப்போது அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கப்பட்டார். அதன்பிறகு உயர் நீதிமன்றம் அவர் குற்றவாளி இல்லை என தீர்ப்பளித்துள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றவாளி என எந்த நீதிமன்றமும் தீர்ப்பளிக்கவில்லை. விசாரிக்கத்தான் சொல்லி இருக்கிறது. விசாரணை நடக்கும்போது, குற்றச்சாட்டுகளுக்காக ஒரு அமைச்சரை பதவி நீக்குவது தவறானது. மத்திய அரசில் பல அமைச்சர்கள் மீது பயங்கரமான குற்ற வழக்குகள் உள்ளன. அவர்கள் எல்லாம் பதவியில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications