திராவிடர் கழகத் தலைவராக பொறுப்பேற்று 45-வது ஆண்டு! கி.வீரமணியை நேரில் வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: திராவிடர் கழகத் தலைவராக கி.வீரமணி பொறுப்பேற்று 45 ஆண்டுகள் ஆனதால் அவரை நேரில் சந்தித்து வாழ்த்துக் கூறியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்த கையோடு பெரியார் திடலுக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின் கி.வீரமணியின் அரசியல் பயணம் மேலும் பல்லாண்டு தொடர வேண்டும் என வாழ்த்தியிருக்கிறார்.
இதனிடையே தன்னால் முடியும் வரை கடமைகளை செய்துகொண்டே இருப்பேன் என கி.வீரமணி அறிக்கை வாயிலாக தெரிவித்திருக்கிறார்.

திராவிடர் கழகம்
திராவிடர் கழகத் தலைவராக கி.வீரமணி பொறுப்பேற்று 44 ஆண்டுகள் நிறைவடைந்து இன்று 45-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். பொதுவாழ்க்கையில் கருணாநிதி, அன்பழகன் ஆகியோருக்கு அடுத்தப்படியாக அதிக காலம் ஒரு அமைப்பின் தலைமை பொறுப்பை வகித்து வருபவர் என்ற பெருமையை பெற்றிருக்கக் கூடிய கி.வீரமணிக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

பெரியார் கொள்கைகள்
அந்த வகையில் முதலமைச்சர் ஸ்டாலின் பெரியார் திடலுக்கு நேரில் சென்று ஆசிரியர் கி.வீரமணிக்கு தனது வாழ்த்தை கூறினார். அப்போது அவருடன் வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும் உடன் சென்றிருந்தார். இதேபோல் அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலும், தந்தை பெரியார் கொள்கைகள் போல் நூற்றாண்டுகள் கடந்து வாழ்க என வாழ்த்தி வணங்குவதாக தெரிவித்துள்ளார்.

கி.வீரமணி அறிக்கை
திராவிடர் கழகத் தலைவராக 45-வது ஆண்டு பயணத்தை தொடங்கியுள்ள கி.வீரமணி இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில், தனக்கு வயது ஒரு பொருட்டல்ல என்றும் கொள்கை உறவுகளுக்கும், நல்லெண்ணத்தோடு வாழ்த்துவோருக்கும், என்றும் உண்மையாக உழைப்பேன் எனத் தெரிவித்துள்ளார். மேலும், அனைவருக்கு இன்றைய தினத்தை நன்றி தெரிவிக்கும் நாளாக கருதி மெத்தப் பணிவுடனும், தலை தாழ்ந்த வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்வதாக கூறியிருக்கிறார்.

பெரியாருக்கு பிறகு
பெரியார் மறைவுக்கு பிறகு திராவிடர் கழகத் தலைவராக கி.வீரமணி பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது. சமூகநீதி, பகுத்தறிவு, பெண்ணுரிமை உள்ளிட்ட விவகாரங்களுக்காக பெரியார் வழியில் கி.வீரமணி கடந்த 44 ஆண்டுகளாக குரல் கொடித்து வந்தது கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications