ஒடுக்குமுறையின் சாதிய அடையாளமான "காலனி"யை அகற்றியுள்ளோம்- ஸ்டாலின் பேச்சு
சென்னை: "காலனி" என்ற ஒடுக்குமுறையின் அடையாளத்தை அகற்றி அரசு விடுதிகளையும் சமூகநீதி விடுதிகளாக பெயர் மாற்றம் செய்து சாதிய அடையாளங்களை நீக்கி வருகிறோம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவர் மேலும் 2030 ஆம் ஆண்டு 1 டிரில்லியன் பொருளாதாரம் என்ற இலக்கு குறித்தும் பேசியுள்ளார்.
கோவையில் நடந்த "இந்தியா டுடே மாநாடு 2025"ல் காணொலி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அவர் அப்போது பேசியதாவது: தமிழகத்தின் முன்னேற்றப் பயணம் குறித்து எனது கருத்துகளை உங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என திட்டமிட்டிருந்தேன். ஆனால் ஐரோப்பிய பயணத்தை முடித்துவிட்டு, நேற்றுதான் சென்னைக்குத் திரும்பினேன்.

அதனால் என்னால் நேரில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை. இருந்தாலும் காணொலி வாயிலாக உங்களை எல்லாம் சந்திப்பதில் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழ்நாடு இன்று இந்தியாவின் வளர்ச்சி என்ஜினாக உள்ளது. எல்லா துறைகளிலும் நம்பர் 1 மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இதற்கு அடித்தளமாக திராவிட மாடல் ஆட்சியின் சமூகநீதி, சமத்துவம், கூட்டாட்சி மற்றும் அனைத்துத் தரப்பு மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவை அமைந்திருக்கிறது.
சமமான வாய்ப்பு
தமிழகத்தின் ஒவ்வொரு குடிமகனும் குறிப்பாக ஆதிதிராவிட, பழங்குடியின மக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள், பெண்கள் என எல்லோரும் சமூக அளவில் கல்வியில், பொருளாதாரத்தில் மேம்பட வேண்டும். சமமான வாய்ப்புகளை பெற வேண்டும் என்பதுதான் எங்களுடைய குறிக்கோள்.
சமத்துவம்
சமத்துவம் என்பது சொற்களில் மட்டுமல்ல. செயல்பாட்டிலும் எதிரொலிக்கிற அளவுக்கு செயல்படுகிறோம். இதற்கு எடுக்காட்டாக "காலனி" என்ற ஒடுக்குமுறையின் அடையாளமாக மாறியிருக்கும் சொற்களை அகற்றி, அரசு விடுதிகளையும் சமூகநீதி விடுதிகளாக பெயர் மாற்றம் செய்து சாதிய அடையாளங்களை நீக்கி வருகிறோம்.
சமத்துவத்துக்கு அலர்ஜி
இதையெல்லாம் சமத்துவத்துக்கு எதிரானவர்களுக்கு அலர்ஜியை வழங்கியிருக்கிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள், இந்த வளர்ச்சிக்கு காரணமான திராவிட மாடல் மீது அவதூறு பரப்புகிறார்கள். அவர்களையெல்லாம் புறந்தள்ளி, எங்களுடைய பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறோம்!
கூட்டாட்சி
கூட்டாட்சி முறை வலுப்பெற வேண்டும். மாநில உரிமை காக்கப்பட வேண்டும் என போராடுகிறோம். வளமான இந்தியா, வலிமையான இந்தியாவும் உருவாக வேண்டும் என்றால் மாநிலங்கள் வலிமையாக இருக்க வேண்டும். இதற்கு கூட்டாட்சி முக்கியத்துவம் வாய்ந்தது.
கல்வி முக்கியம்
மாநிலங்கள் தங்களது வளர்ச்சிப் பாதையை தாங்களே வகுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக, கல்வி, மருத்துவம் மாநிலங்களின் கையில் இருக்க வேண்டும். இந்தியா என்பது ஒரு துணைக் கண்டம். அதனால் நாடு முழுமைக்கும் ஒரே கல்விக் கொள்கை சரியானதாக இருக்காது.
இருமொழி கொள்கை
இருமொழிக் கொள்கையை உறுதியாக பின்பற்றி வரும் நாங்கள், தேசியக் கல்விக் கொள்கை எனப்படும் மும்மொழிக் கொள்கையை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம். இந்த மும்மொழி கொள்கையை நாங்கள் ஏற்காததால் நியாயமாக எங்களுக்கு வர வேண்டிய கல்வி நிதியை மத்திய அரசு தர மறுக்கிறது. மற்ற நிதி ஒதுக்கீட்டிலும் தமிழகத்திற்கு ஓரவஞ்சனை காட்டுகிறார்கள்.
ஆளுநரின் முட்டுக்கட்டை
தமிழகத்தில் ஒவ்வொரு உரிமைகளையும் போராடி பெற வேண்டியதாக இருக்கிறது. நியமன ஆளுநரின் முட்டுக்கட்டைகள், மத்திய அரசின் தடைக் கற்கள் என பல வருகிறது . ஆனாலும் தமிழ்நாடு போராடி வெல்லும்.
எத்தனை போராட்டம்
எத்தனை போராட்டங்கள் இருந்தாலும் திராவிட மாடலின் வளர்ச்சியை துக்க முடியவில்லை. இந்தியாவிலேயே இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை எட்டிய ஒரே மாநிலம் தமிழ்நாடுதான். 2030 ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தை 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற வேண்டும்.
திராவிட மாடல்
இந்த இலக்கை நோக்கி வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறோம். நிச்சயம் திராவிட மாடல் அதையும் சாதித்து காட்டும். தொழில் வளர்ச்சியில் தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு முதலீடுகள் குவிகின்றன. முதல்வரின் காலை உணவுத் திட்டத்தில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவு வழங்குகிறோம். நான் முதல்வன் திறன் மேம்பாட்டு திட்டம் மூலம் உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி பயில வாய்ப்பு உருவாக்கியிருக்கிறோம்.
உயர்கல்வி
பெண்களின் உயர்கல்வியை ஊக்குவிக்க மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குகிற புதுமைப் பெண் திட்டம். அது போல் மாணவர்களுக்கு வழங்க தமிழ்ப் புதல்வன் திட்டம் உருவாக்கியிருக்கிறோம். கல்வி என்பது நாம் போராடி பெற்ற உரிமை. பெண்கள் முன்னேற்றம், பாலினச் சமத்துவத்தை நோக்கி உழைக்கிறோம்.
என்னென்ன திட்டங்கள்
"உங்களுடன் ஸ்டாலின்" திட்டம் மூலம், 10 ஆயிரம் சிறப்பு முகாம்கள் நடத்தத் திட்டமிடப்பட்டு, இதுவரை, 5 ஆயிரத்து 691 முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது. இதில், 46 அரசுத்துறை சேவைகளை வழங்குகிறோம். மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் இட ஒதுக்கீடு வழங்கி, அவர்கள் குரல் ஒலிப்பதை உறுதி செய்திருக்கிறோம். இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications