கருணை மிகு தாய் தயாளு.. தூணாக மனைவி துர்கா.. தன்னம்பிக்கை மகள் செந்தாமரை.. முதல்வர் பெருமிதம்
சென்னை: ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண்ணின் பல மணி நேர உழைப்பு உள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். கருணை உள்ளம் கொண்ட தாய் தயாளு அம்மாள், தூணாக மனைவி துர்கா, தன்னம்பிக்கை தரும் வகையில் மகள் செந்தாமரை இருப்பதாகவும் முதல்வர் ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். காஞ்சிபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதாமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை தொடங்கி வைத்தார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 115வது பிறந்த நாளையொட்டி கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஒரே நேரத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்டோருக்கு ஆயிரம் ரூபாயை வங்கி கணக்கில் செலுத்த முடியாது என்பதால் இந்த திட்டம் நேற்றே தொடங்கப்பட்டது.
இந்த விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், எனது அரசியல் பயணத்துக்கான உந்துசக்திகளுக்கு எல்லாம் சிகரம் வைத்ததுபோல் இருப்பதுதான் காஞ்சி மாநகரம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 18 வயதில் அண்ணா சுடரை ஏந்தி சென்னையில் இருந்து காஞ்சிபுரம் வந்தேன். தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்ற பெயர் நீடிக்கும் வரை இந்த நாட்டை அண்ணாதுரைதான் ஆள்கிறான் என்றார் பேரறிஞர் அண்ணா. அதேபோல் இன்று 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தொடங்கும் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் சொல்கிறேன், இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு பெண்கள் மகளிர் உரிமைத்தொகையை பெறுகிறார்களோ அத்தனை ஆண்டுகளுக்கும் இந்த ஸ்டாலின் தான் ஆள்கிறான் என்று பொருள்.
பயன் எதிர்பார்க்காமல் வாழ்நாளெல்லாம் உழைக்க கூடிய பெண்களுக்கு அளிக்க கூடிய அங்கீகாரம்தான் ஆண்டுக்கு 12,000 ரூபாய். பெண்கள் சுயமரியாதையோடு வாழ்வதற்கும், அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் பயன்படும். மாதம் 1000 ரூபாய் தங்கள் வாழ்வினை சிறிதேனும் மாற்றிவிடும் என நம்பும் எந்தக் குடும்பத் தலைவியையும் மனிதநேய அடிப்படையிலான, பெண்ணுரிமையைக் காக்க கூடிய எனது தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசு கைவிட்டு விடாது என்று கூறினார்.

இத்திட்டத்தின் அடையாளமாக சில பயனாளிகளுக்கு ஏடிஎம் கார்டையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.தொடர்ந்து சிறப்புரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "எனது அரசியல் பயணத்திற்கான உந்துசக்திகளுக்கு எல்லாம் சிகரம் வைத்தது போல் இருப்பது தான் காஞ்சி மாநகரம்.18 வயதில் அண்ணா சுடரை ஏந்தி சென்னையில் இருந்து காஞ்சிபுரத்திற்கு வந்தேன்.தமிழ் சமுதாயத்தை காக்கக்கூடிய திராவிட சுடரை ஏந்தி தற்போது காஞ்சிபுரம் வந்து இருக்கிறேன். கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை தொடங்கி வைத்தது வாழ்நாளில் மிகப்பெரிய பேராக கருதுகிறேன்.
மகளிர் உரிமை திட்டம் 2 முக்கிய நோக்கங்களை அடிப்படையாக கொண்டு செயல்படுத்தப்படுகிறது. பிரதிபலன் பாராமல் வாழ்நாள் எல்லாம் ஓயாமல் உழைக்கும் பெண்களின் உழைப்பிற்கு கொடுக்கும் அங்கீகாரம் முதன்மையானது. ஆண்டுக்கு ரூ.12,000 என்பது பெண்களின் வாழ்வாதாரத்திற்கே உறுதுணையாக இருக்கும்.
அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்று பெண்களை அடக்கி வைத்திருந்தார்கள்.குழந்தை திருமணங்களை இன்றும் ஆதரித்து பேசும் பிற்போக்குவாதிகள் இருக்கிறார்கள்.பெண்கள் படிக்க முடியாது. வேலைக்கு செல்ல முடியாது என்ற சூழலை மாற்றியுள்ளோம். மதத்தின் பெயராலும் பழமையின் பெயராலும் வீட்டுக்குள்ளேயே முடக்கப்பட்டு இருந்தனர். பெண்களுக்கு கல்வி உரிமை அளிக்கப்பட்டதை அடுத்து ஆண்களை விட பெண்கள் நன்றாக படிக்கின்றனர் என்று கூறினார்.

ஆணும் பெண்ணும் சரிநிகர் சமம் என்பதை நிரூபித்து காட்டியதுதான் திராவிட மாடல் ஆட்சி.பெண்களை அனைத்து நிலைகளிலும் உயர்த்துவதே திராவிட மாடல். பெண்களுக்கு சொத்தில் சம உரிமை தந்தார். பெண்கள் ஒவ்வொரு நாளும் உழைக்கும் நேரத்தை கணக்கு பார்த்து ஊதியம் கொடுத்தால் எவ்வளவு ஊதியம் கொடுக்க முடியும். ஆனால் அவுஸ் ஒய்ப் என்ற சாதாரணமாக சொல்லிவிடுகிறார்கள்.பெண்கள் சுயமரியாதையுடன் வாழவே மகளிர் உரிமைத் திட்டம் என்று கூறினார்.
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பிறகும் ஒரு பெண்ணின் பல மணி நேர உழைப்பு இருக்கிறது என்று கூறினார் முதல்வர் ஸ்டாலின். தனது குடும்பத்தில் கருணை உள்ளம் கொண்ட தாயாக தயாளு அம்மாள் இருப்பதாகவும்,தன்னை கண்ட உடன் அவர் அடையும் மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை என்றும் ஸ்டாலின் கூறினார். எனது செயல்பாடுகளுக்கு தூணாக மனைவி துர்காவும், தன்னம்பிக்கை தரும் வகையில் மகள் செந்தாமரையும் உள்ளதாக பெருமிதத்துடன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications