போலீஸ் ஸ்டேஷனுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் விசிட்.. “ஆக்ஷன் எடுக்குறீங்களா?” - ஆடிப்போன போலீசார்!
சென்னை: சென்னை பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்த ஸ்டாலின், திடீரென அப்பகுதியில் உள்ள பழவந்தாங்கல் காவல் நிலையம் சென்று ஆய்வு நடத்தினார். இதனால், அந்த காவல் நிலைய போலீசார் வெலவெலத்துப் போயினர்.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.2,325 கோடி மதிப்பீட்டில் 738.22 கி.மீ தொலைவுக்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. வட சென்னை பகுதியின் கொசஸ்தலையாறு வடிநிலப் பகுதியில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் பணிகள் ஆசிய வளர்ச்சி வங்கி நிதியின் கீழ் 769 கி.மீ நீளத்துக்கு ரூ. 3,220 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் இதுவரை 483.83 கி.மீ நீளத்துக்கு பணிகள் நிறைவடைந்துள்ளன.

பருவமழையை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் உள்ள மழைநீர் வடிகால்வாய்களை தூர்வரும் பணி மற்றும் சிறு பழுதுபார்க்கும் பணிகள் ரூ.27.55 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை மாநகராட்சிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்தார்.
சென்னை கிண்டி இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்டில் அமைந்துள்ள சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்திய பிறகு அப்படியே நங்கநல்லூர் எம்.ஜி.ஆர். சாலை, பழவந்தாங்கல் சுரங்கப்பாதை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார் முதல்வர் ஸ்டாலின்.

இதையடுத்து, பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு காவல்துறை ஆய்வாளரிடம் பல்வேறு கேள்விகள் கேட்டு பதில் பெற்றார். பதிவேடுகள் முறையாகப் பராமரிக்கப்படுகிறதா? புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என போலீசாரிடம் கேட்டறிந்தார். காவல் நிலையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகளையும் ஆய்வு செய்தார்.

மேலும், ஒவ்வொரு அறையாகச் சென்று பார்வையிட்டு போலீசாரிடம் விசாரித்தார். காவல் நிலையத்தில் பணியில் இருந்த காவலர்களிடம் மக்களின் புகார்களைக் கனிவுடன் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும், அங்கிருந்த போலீசார் கேட்டுக்கொண்டதால் அவர்களுடன் குரூப் போட்டோவும் எடுத்துக்கொண்டார். முதல்வரின் திடீர் விசிட்டால் போலீசார் வெலவெலத்துப் போயினர்.












Click it and Unblock the Notifications