தமிழக மீனவர்கள் கைது.. “வெளியுறவுத்துறை அமைச்சர் உடனடியாக தலையிட வேண்டும்!” - முதல்வர் ஸ்டாலின்
சென்னை: இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 8 மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகையும் பாதுகாப்பாக மீட்டுக் கொண்டு வருவதை உறுதி செய்யவும், மீன்பிடி தொடர்பான பிரச்சினைகளைக் கையாள்வதில், கட்டுப்பாடு மற்றும் பரஸ்பர புரிதலை உறுதி செய்வதற்கு இலங்கை அதிகாரிகளுடன் உரிய தூதரக நடவடிக்கைகளை முன்னெடுக்க வலியுறுத்தியும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இக்கடிதம் குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பில், "கடிதத்தில் இந்திய மீனவர்கள், குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பையும் கடுமையாக பாதிக்கும் இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கை குறித்து மத்தியவெளியுறவுத் துறை அமைச்சரின் கவனத்தை ஈர்த்துள்ள முதலமைச்சர் , 29.06.2025 அன்று இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 08 மீனவர்களுடன், IND-TN-10-MM-773 பதிவு எண் கொண்ட அவர்களது இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகையும் சிறை பிடித்துள்ளதாக வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

இத்தகைய கைது நடவடி படகுகள் மற்றும் உபகரணங்கள் இழப்பிற்கும். நீண்டகால சிறை பிடிப்பிற்கும் வழிவகுப்பதோடு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார். எனவே கைது செய்யப்பட்ட மீனவர்களையும் அவர்களது படகையும் பாதுகாப்பாக மீட்டுக் கொண்டு வருவதை உறுதி செய்ய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்கள் உடனடியாக தலையிட வேண்டும் என்று தனது கடிதத்தில் முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.
வருடாந்திர மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்து, மீன்பிடிப் பருவம் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், நமது மீனவர்கள் வாழ்வாதாரம் ஈட்டும் நம்பிக்கையுடன் மீன்பிடிக்க கடலுக்குத் திரும்பியுள்ளதாக குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், மீன்பிடி தொடர்பான பிரச்சனைகளைக் கையாள்வதில், கட்டுப்பாடு மற்றும் பரஸ்பர புரிதலை உறுதி செய்ய இலங்கை அதிகாரிகளுடன் உரிய தூதரக நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸும் இந்த விவகாரம் குறித்து வலியுறுத்தியுள்ளார். அதாவது, "வங்கக்கடலில் மீன் பிடித்து விட்டு கரைக்கு திரும்பிக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை கச்சத்தீவு அருகே இலங்கைக் கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தமிழக மீனவர்களுக்கு எதிரான சிங்களக் கடற்படையினரின் இந்த அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது.
வங்கக் கடலில் மீன்பிடிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த 2 மாதத் தடைக் காலம் கடந்த 15-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், 16ஆம் தேதி முதல் தான் தமிழக மீனவர்கள் வங்கக்கடலில் மீன் பிடிக்கச் சென்று வருகின்றனர். இதுவரை 4 அல்லது 5 முறை மட்டுமே அவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று வந்திருப்பார்கள் எனும் நிலையில், இருமுறை அவர்கள் மீது இலங்கை அரசின் ஆதரவுடன் இயங்கி வரும் கடல் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தினார்கள். இப்போது தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்திருக்கிறது.
தமிழக மீனவர்களை கைது செய்வதன் மூலமும், அவர்களிடம் உள்ள பொருள்களை கொள்ளையடிப்பதன் மூலமும் அவர்களின் வாழ்வாதாரங்களை சிதைப்பது தான் சிங்கள் அரசின் நோக்கம் என்பதை பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறது. கடந்த சில நாள்களில் தமிழக மீனவர்கள் மீது கடல் கொள்ளையர்கள் நடத்திய தாக்குதலும், இப்போது மேற்கொள்ளப்பட்டுள்ள கைது நடவடிக்கையும் பா.ம.க.வின் நீண்ட நாள் குற்றச்சாட்டை உறுதி செய்திருக்கிறது. இது தொடரக்கூடாது.
தமிழ்நாட்டிற்கும், இலங்கைக்கும் இடையிலான கடல் பகுதி மிகவும் குறுகலாக இருக்கும் நிலையில், தமிழக மீனவர்கள் இலங்கை கடல் பகுதிக்குள்ளும், இலங்கை மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள்ளும் நுழைந்து மீன் பிடிப்பது தவிர்க்க முடியாதது. இத்தகைய சூழலில் இரு தரப்பு மீனவர்களும் பயனடையும் வகையில் வங்கக்கடலில் மீன் பிடிப்பதற்கான திட்டத்தை வகுப்பது தான் சரியானதாக இருக்கும். இதை மத்திய அரசு தான் செய்ய முடியும் எனும் நிலையில், அதற்கான அழுத்தத்தை தமிழக அரசு தான் தொடர்ந்து கொடுக்க வேண்டும்.
ஆனால், ஒவ்வொரு முறையும் மீனவர்கள் கைது செய்யப்படும் போதெல்லாம், அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது கடமையை முடித்துக் கொள்கிறார். மீனவர்கள் நலனில் அவருக்கு அக்கறை இல்லை என்பதையே அவரது செயல்பாடுகள் காட்டுகின்றன.
தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்வது, சிறையில் அடைப்பது, தண்டம் விதிப்பது போன்ற அத்துமீறல்கள் நடப்பாண்டிலும் தொடரக் கூடாது. அதற்காக தூதரக நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்வதற்கான அழுத்தத்தை பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்துக் கொடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications