மீனவர்களுக்கு கோடிகளில் அபராதம் விதிப்பு.. என்ன கொடுமை இது..? மத்திய அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்!
சென்னை: தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திடவும், மீனவர்கள் மீது விதிக்கப்பட்ட அபராதத் தொகையினை தள்ளுபடி செய்யவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 12 பேருக்கு தலா ரூ.1.5 கோடி அபராதம் விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. மீனவர்கள் அபராதத்தை செலுத்த தவறினால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் இலங்கை நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின், மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை ஆழமாக பாதிக்கும் கவலைக்குரிய விஷயத்தை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வருவதாக குறிப்பிட்டுள்ள அவர், தமிழ்நாட்டு மீனவர்கள் தங்களது பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகளில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும்போது அடிக்கடி கைது செய்யப்படுவது அவர்களது வாழ்வாதாரத்தை மிகவும் பாதிப்பதாகக் குறிப்பிட்டுள்ளதுடன், தமிழ்நாட்டின் புதுக்கோட்டையைச் சேர்ந்த 4 மீனவர்களை அவர்களது மீன்பிடிப் படகுடன் (பதிவு எண்.IND-TN-08-MM-1418) இலங்கைக் கடற்படையினர் சிறைபிடித்துள்ளதாகவும் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இந்தப் பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகள் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு பல தலைமுறைகளாக வாழ்வாதாரமாகத் திகழ்வதாகவும், மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படுவதும் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தமிழ்நாட்டு மீனவர் சமூகத்தினருக்கு மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 21-07-2024 அன்று IND-TN-12-MM-5900 என்ற பதிவு எண் கொண்ட படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்ட 12 தமிழ்நாட்டு மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் 03-09-2024 அன்று 1.5 கோடி ரூபாய் அபராதம் விதித்ததாகவும், இது ஏற்கனவே துயரத்தில் உள்ள மீனவ குடும்பங்களை மிகவும் வேதனைக்குள்ளாக்குவதுடன் அவர்களுக்கு மிகப்பெரிய இழப்பையும் ஏற்படுத்தும் என்று முதல்வர் ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, இலங்கை வசம் உள்ள மீன்பிடிப் படகுகளை விடுவித்திடவும், மீனவர்களை தாயகத்திற்குத் திரும்பி அழைத்து வரவும், மீனவர்கள் மீது விதிக்கப்பட்ட அபராதத் தொகையினை மனிதாபிமான அடிப்படையில் தள்ளுபடி செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் அவர்களை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications