உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களின்.. எதிர்காலம் அச்சுறுத்தலில் உள்ளது! முதல்வர் ஸ்டாலின் கடிதம்
சென்னை: உக்ரைன் போரால் தாயகம் திரும்பிய மாணவர்கள் இந்தியாவில் படிப்பைத் தொடர அனுமதி தேவை என்பதை வலியுறுத்தி பிரதமர் மோடிக்குத் தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
உக்ரைன் நாட்டில் கடந்த பிப். 24ஆம் தேதி தொடங்கிய போர் 12ஆவது நாளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தப் போர் காரணமாக உக்ரைன் வான்வழி மூடப்பட்டது. போர் தொடங்கிய சமயத்தில் அங்கு மாணவர்கள் உட்பட 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் இருந்தனர்.
இதையடுத்து அண்டை நாடுகளின் உதவியுடன் ஆப்ரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் அவர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டனர். உக்ரைன் நாட்டில் போருக்குப் பின் நிலைமை எப்படி இருக்கும் எனத் தெரியாததால், தாயகம் திரும்பிய மாணவர்களின் படிப்பு என்னவாகும் என்று கேள்வி எழுந்துள்ளது.

முதல்வர் கடிதம்
இந்தச் சூழலில் உக்ரைன் போர் தொடர்பாகப் பிரதமர் மோடிக்குத் தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் உக்ரைன் போரால் தாயகம் திரும்பிய மாணவர்கள் இந்தியாவில் படிப்பைத் தொடர அனுமதி தேவை என முதல்வர் வலியுறுத்தியுள்ளார், போர் தொடங்கியதிலிருந்து 1200 தமிழக மாணவர்கள் தாயகம் திரும்பியுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், அவர்களின் படிப்பு சீர்குலைந்துள்ளது என்றும் எதிர்காலமும் அச்சுறுத்தல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் அவர்கள் இந்தியாவிலேயே படிப்பைத் தொடர அனுமதிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

நடவடிக்கை
இது தொடர்பாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையே நடைபெற்று வரும் போரில் சிக்கித் தவிக்கும் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்களை மீட்டு அழைத்து வருவதில் இந்திய அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகளை அங்கீகரிக்கும் அதேவேளையில், ஆயிரக்கணக்கான மாணவர்கள் தங்கள் படிப்பைத் தொடர்வதில் எதிர்கொள்ளும் நிச்சயமற்ற தன்மையைத் தீர்க்க வேண்டிய அவசியம் குறித்து பிரதமரின் கவனத்தை ஈர்க்க விரும்புவதாகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலம் அச்சுறுத்தலில் உள்ளது
போர் தொடங்கியதில் இருந்து, இதுவரை 1200-க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் தமிழ்நாட்டிற்குத் திரும்பியுள்ளனர் என்று தெரிவித்துள்ள முதலமைச்சர், எஞ்சியுள்ள மாணவர்களும் வரும் நாட்களில் உக்ரைனிலிருந்து தாயகம் திரும்புவார்கள் என்று எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டு, தற்போதைய சூழ்நிலை, அம்மாணவர்களின் படிப்பினை சீர்குலைந்துள்ளதாகவும், அவர்களின் எதிர்காலம் அச்சுறுத்தலில் உள்ளது என்றும் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

நிச்சயமற்ற நிலை
மேலும், உக்ரைனில் முன்னெப்போதும் இல்லாத வகையில், தற்போது நிலவும் சூழ்நிலையில், இந்த மருத்துவ மாணவர்கள் உக்ரைனில் உள்ள தங்கள் கல்லூரிகளுக்குத் திரும்புவதும், படிப்பைத் தொடர்வதும் நடைமுறையில் சாத்தியமில்லை என்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், போர் நிறுத்தப்பட்ட பின்னரும், பல்கலைக்கழகங்களில் இயல்பு நிலை திரும்பும் வரையிலும் இந்த நிச்சயமற்ற நிலை நிலவும் என்றும் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
Recommended Video

நடவடிக்கை தேவை
எனவே, இந்தப் பிரச்சினையில் பிரதமர் அவசரமாகத் தலையிட்டு, சிறப்புக் கவனம் செலுத்தி, தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் தொடர்புடைய அமைச்சகங்களின் கவனத்திற்குக் கொண்டுசென்றிட வேண்டுமென்று தெரிவித்துள்ள முதலமைச்சர், உக்ரைனில் தங்களது படிப்பு தடைப்பட்ட நிலையில், அம்மாணவர்கள் இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் தங்களது படிப்பைத் தொடர உடனடியாகத் தீர்வு காண உரிய வழிமுறைகளைக் கண்டறிய அவர்களுக்கு உத்தரவிடப்பட வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளதோடு, இது தொடர்பாக இந்திய அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் தமிழக அரசு தனது இடைவிடாத ஆதரவை அளிக்கும் என்று தான் உறுதியளிப்பதாகவும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications