விஜய் டெல்லி பயணம் 2.0.. அமித் ஷாவை எப்படியாவது சந்திக்க காய் நகர்த்தும் முதல்வர்.. மீண்டும் ட்ரிப்?
சென்னை: முதல்வர் விஜய் விரைவில் மீண்டும் டெல்லிக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. அவரது அடுத்தடுத்த டெல்லி பயணங்களும், தேசிய தலைவர்களுடனான சந்திப்புகளும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இரண்டு நாட்களுக்கு முன்பு டெல்லி சென்ற விஜய், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை நேரில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புகள் அரசியல் அரங்கில் பெரும் புயலை கிளப்பிய நிலையில், வரும் ஜூன் 11-ம் தேதி மீண்டும் டெல்லி செல்லும் விஜய்யின் பயணம் மீது அனைத்து கண்களும் பதிந்துள்ளன.

கடந்த பயணத்தின்போது பிரதமர் மோடியை விஜய் சந்தித்தது வெறும் மரியாதை சந்திப்பு என்று தவெக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டாலும், டெல்லி வட்டாரங்கள் வேறு கருத்து தெரிவிக்கின்றன. இதன் பின்னணியில் ஆழமான அரசியல் உத்திகள் இருப்பதாக பேசப்படுகிறது. குறிப்பாக, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் நடைபெற்ற சந்திப்பில் தமிழகத்தின் நிதி நிலை, மாநில வளர்ச்சித் திட்டங்கள், உள்கட்டமைப்பு மற்றும் மத்திய-மாநில உறவுகள் குறித்த முக்கிய விவாதங்கள் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தப் பயணத்தின்போது விஜய், காங்கிரஸ் தலைவர்களான ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியை சந்திக்க திட்டமிட்டிருந்ததாக ஒரு தகவல் பரவியது. ஆனால், பிரதமரை சந்தித்துவிட்டு காங்கிரஸ் தலைவர்களை சந்திக்காமல் சென்னை திரும்பியது, சத்தியமூர்த்தி பவனில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திமுக-காங்கிரஸ் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் தரப்பினர், விஜய்யின் இந்த நகர்வு தங்களுக்கு எதிரான சமிக்ஞையா என்ற கேள்வியுடன் கடும் வருத்தத்தில் இருப்பதாக தெரிகிறது. விஜய் எங்கள் ஆதரவுடன் ஆட்சி அமைத்துவிட்டு எங்கள் தலைவர்களை கூட சந்திக்காமல் இருப்பது என்ன விதத்தில் நியாயம் என்று கேள்வி எழுப்ப தொடங்கி உள்ளனர்.
இந்தப் பரபரப்பு அடங்கும் முன்பே, தவெக தலைவர் விஜய் ஜூன் 11-ம் தேதி மீண்டும் டெல்லி பயணம் மேற்கொள்ள உள்ளார். இம்முறை மத்திய அரசின் முக்கிய அமைப்பான நிதி ஆயோக் (NITI Aayog) கூட்டத்தில் பங்கேற்பதற்காக அவர் செல்கிறார். மாநிலங்களின் வளர்ச்சி, திட்டமிடல், கூட்டாட்சித் தத்துவம் உள்ளிட்ட முக்கிய விவாதங்கள் நடைபெறும் இந்த கூட்டத்தில் விஜய்யின் பங்களிப்பு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. தமிழகத்தின் உள்கட்டமைப்பு திட்டங்கள், மாநில உரிமைகள், நீர் பங்கீடு உள்ளிட்ட பிரச்சினைகளில் அவர் தீர்மானகரமான குரல் எழுப்புவாரா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் உயர்ந்துள்ளது.
இந்தப் பயணம் விஜய்யை தேசிய அளவில் ஒரு முதிர்ச்சியான அரசியல் தலைவராக முன்னிறுத்தும் வியூகமாகவும் பார்க்கப்படுகிறது. மேலும், கடந்த பயணத்தின்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க முயன்றும் முடியாததால், ஜூன் 11 பயணத்தின்போது அவரை சந்திக்க விஜய் தீவிர முயற்சி எடுப்பார் என்று டெல்லி சோர்ஸ்கள் தெரிவிக்கின்றன. அமித் ஷாவுடனான சந்திப்பு தவெக-வின் எதிர்கால அரசியல் நகர்வுகளுக்கு மிக முக்கியம் என்பது விஜய் தரப்பின் நிலைப்பாடு.
ஜூன் 11 பயண அறிவிப்புக்குப் பிறகு காங்கிரஸ் வட்டாரங்களில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. "இந்த முறையாவது ராகுல் காந்தியை சந்திப்பாரா?" என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி வலுவாக இருந்தாலும், விஜய்யின் அரசியல் எழுச்சி இரு தரப்புக்கும் சவாலாக மாறியுள்ளது. மோடியை சந்தித்த பின்னர் காங்கிரஸையும் அரவணைப்பாரா அல்லது தனித்துவப் பாதையில் செல்வாரா என்பது தற்போது மிகப் பெரிய கேள்வியாக உள்ளது.
தமிழக அரசியலின் அடுத்தகட்டம் விஜய்யின் டெல்லி நகர்வுகளைப் பொறுத்தே அமையும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.












Click it and Unblock the Notifications