"மகளிர் உரிமைத் தொகை! விரைவில் வரவு வைப்பு!" சொன்னதை செய்த விஜய்! சபாஷ் உதயநிதி!
சென்னை: மே மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகை ரூ 1000 வரவு வைக்கப்படுவது குறித்து முதல்வர் விஜய், நிதித் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய நிலையில் விரைவில் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில் விஜய் கூறியிருப்பதாவது: பெண்களுக்கு மாதந்தோறும் ரூ 1000 உரிமைத் தொகையாக வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை மறுசீரமைப்பு செய்ய அரசுக்கு உரிய கால அவகாசம் தேவைப்படுகிறது.
மே 2026 மாதத்திற்கான ரூ 1000 மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் நேரடியாக வரவு வைக்கப்படும் என விஜய் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

உயர் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கான தமிழ்ப்புதல்வன், புதுமைப் பெண் ஆகிய திட்டங்களில் பயன்பெற்று பயனாளிகளுக்கு நேற்று தலா ரூ 1000 வரவு வைத்து விஜய் அரசு மாணவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துவிட்டார்.
இந்த பணம் மாதந்தோறும் 7ஆம் தேதியே வரவுவைக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது 5 நாட்கள் கழித்து நேற்று வரவு வைக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினார். அதன் மீது நடந்த விவாதத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், விஜய் அரசை சரமாரியாக விமர்சித்திருந்தார்.
அவர் பேசுகையில், திமுகவின் திட்டங்களில் அரசியல் செய்ய வேண்டாம். இந்த மாதம் 15 ஆம் தேதி உரிமைத் தொகைக்காக மகளிர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
கடந்த 7ஆம் தேதியே வரவு வைக்கப்பட வேண்டிய புதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டத்திற்கான தொகைகள் செல்லவில்லை. முக்கியமாக அடுத்த மாதம் ஜூன் 2 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும், அப்போது காலை உணவுத் திட்டத்திற்காக மாணவர்கள் காத்திருக்கும் நிலை உள்ளது. இதையெல்லாம் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என அவர் தெரிவித்திருந்தார்.
இதற்கு முதல்வர் விஜய் பதிலளிக்கையில், முந்தைய திமுக அரசில் தொடங்கப்பட்ட நல்ல திட்டங்கள் நம் ஆட்சியிலும் தொடரும் என தெரிவித்திருந்தார்.
அந்த வகையில் உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கான ரூ 1000 உதவித்தொகை அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. அந்த வகையில் மாதந்தோறும் 15 ஆம் தேதி மகளிர் உரிமைத் தொகை வரவு வைக்கப்படும் நிலையில் நாளை அந்த தொகை வரவு வைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
இது குறித்து நிதித் துறை அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தினர். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: மே மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகை ரூ 1000 திட்டம் மறுசீரமைப்பு செய்து விரைவில் பயனாளிகளின் வங்கிக் கணக்கிற்கு வரவு வைக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த உரிமைத் தொகையால் 1.31 கோடி மகளிர் பயன்பெற்று வருகிறார்கள். கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி இந்த திட்டம் திமுக அரசால் தொடங்கப்பட்டது. இது படிப்படியாக விரிவாக்கம் செய்யப்பட்டது.
தகுதிகள்
ஒரு குடும்பத்தில் ஒரு பெண் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் (ரேஷன் கார்டு அடிப்படையில்). விண்ணப்பதாரர் 21 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும் (செப்டம்பர் 15, 2002-க்கு முன் பிறந்திருக்க வேண்டும்).
பொருளாதாரத் தகுதிகள்: குடும்பத்தின் ஆண்டு வருமானம் ₹2.5 லட்சத்திற்குக் கீழ் இருக்க வேண்டும்.குடும்பத்திற்குச் சொந்தமாக 5 ஏக்கருக்குக் குறைவாக நஞ்சை நிலம் அல்லது 10 ஏக்கருக்குக் குறைவாக புஞ்சை நிலம் மட்டுமே இருக்க வேண்டும்.ஆண்டு மின் பயன்பாடு 3,600 யூனிட்டிற்கும் குறைவாக இருக்க வேண்டும்.
யார் விண்ணப்பிக்க முடியாது?
அரசு ஊழியர்கள் (மத்திய, மாநில அரசு, பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள்) மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்கள்.
சொந்தப் பயன்பாட்டிற்காகக் கார், ஜீப், டிராக்டர் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்கள்.
வருமான வரி செலுத்துபவர்கள் மற்றும் தொழில் வரி செலுத்துபவர்கள்.
சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் ஏற்கனவே முதியோர் ஓய்வூதியம் போன்ற இதர உதவித்தொகை பெறுபவர்கள்.
விண்ணப்பித்தல்: இ-சேவை மையங்கள் (e-Sevai) வழியாகவோ அல்லது அரசு நடத்தும் சிறப்பு முகாம்கள் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். தேவையான ஆவணங்கள்: குடும்ப அட்டை (Ration Card), ஆதார் அட்டை, வங்கிப் புத்தகம் மற்றும் மின்சாரக் கட்டண ரசீது.
நிலை அறிதல் (Status Check): விண்ணப்பத்தின் நிலையை kmut.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உங்கள் ரேஷன் கார்டு எண் அல்லது விண்ணப்ப ஐடியைப் பயன்படுத்தித் தெரிந்து கொள்ளலாம்.
ஒருவேளை உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தால், அதற்கான காரணத்தைத் தெரிந்து கொண்டு வருவாய்த் துறை அதிகாரிகளிடம் மேல்முறையீடு (Appeal) செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications