குழந்தைகள் தினத்தில் மாணவர்களுக்கு கேக்! வி.எஸ்.பாபுவின் தொகுதியில் இன்று விஜய் கொண்டாட்டம்!
சென்னை: குழந்தைகள் தினத்தையொட்டி, மாணவர்களுக்கு கேக் வழங்கும் திட்டத்தை முதல்வர் விஜய் இன்று கொளத்தூரில் உள்ள அரசுப் பள்ளியில் தொடங்கி வைக்கிறார். நவம்பர் 14 ஆம் தேதிதான் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. ஆனால் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் தமிழக அரசு இன்றே கொண்டாடுகிறது.
குழந்தைகள் தினத்தையொட்டி இந்த ஆண்டு வழக்கம் போல் இல்லாமல் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு கேக் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு தொடங்கி வைக்கிறது. இதற்காக ரூ. 9.27 கோடியில் டெண்டர் விடப்பட்து.

கேக் தயாரிக்கும் முன்னணி நிறுவனங்கள் இதற்கான டெண்டரை பெற்றுள்ளன. ஒவ்வொரு கேக்கும் 45 கிராம் எடை கொண்டதாக இருக்கும் வகையில் இந்த கேக்குகள் கொள்முதல் செய்யப்பட்டன.
கொள்முதல் செய்யப்பட்ட கேக் துண்டுகள் பள்ளிகளுக்கு பாதுகாப்பான முறையில் அனுப்பப்பட்டுள்ளது. முதல்முறையாக செயல்படுத்தப்பட இருக்கும் இந்த கேக் வழங்கும் திட்டத்தை முதல்வர் விஜய் இன்று தொடங்கி வைக்கிறார்.
முதலில் அம்பாசமுத்திரத்தில் இந்த திட்டத்தை தொடங்கி வைப்பதாக இருந்தது. ஆனால் இது மாற்றப்பட்டு கொளத்தூரில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் நடக்கவுளளது. காலை 9 மணிக்கு இந்த திட்டத்தை தொடங்கி வைத்து மாணவர்களுக்கு கேக் வழங்குகிறார்.
அவர்களுக்கு குழந்தைகள் தின வாழ்த்து அட்டைகளையும் வழங்குகிறார். தொடர்ந்து இந்த தொகுதியில் நலத் திட்ட உதவிகளையும் அவர் வழங்குகிறார். கொளத்தூர் தொகுதியின் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது தொகுதிக்கான நலத் திட்டங்களை முதல்வர் விஜய்யே இன்று தொடங்கி வைக்கிறார்.
கொளத்தூரில் இந்த திட்டம் தொடங்கி வைத்த பிறகு, தமிழகம் முழுவதும் மாணவர்களுக்கு கேக் வழங்கப்படவுள்ளது. மொத்தம் 61,84,566 கேக் துண்டுகள் வழங்கப்படுகின்றன. சென்னை மாநகராட்சி பகுதிகளில் 2.90 லட்சம் மாணவர்களுக்கு கேக்கும் வாழ்த்து அட்டையும் வழங்கப்படுகிறது.
இந்த கேக் வழங்கும் திட்டத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின. கேக் எப்போது தயாரித்து, அதை பேக் செய்து, மாணவர்களுக்கு கொடுப்பதற்குள் அதன் தரம் எப்படி இருக்கும் என்றெல்லாம் கேள்வி எழுந்தது. மேலும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் தகவல் கிடைத்தன.
இதுகுறித்து கடந்த மாதம் 24-ஆம் தேதி தமிழக அரசின் உண்மை சரிபார்க்கும் குழு வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ள கேக் கூடுதல் விலைக்கு வாங்கப்படுவதாக பரவும் தவறான தகவல்.
உண்மை என்ன ?
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள 45 கிராம் எடையுள்ள ஒரு பிரிட்டானியா கேக் ரூ.12.15-க்கு ( Excluding GST ) கொள்முதல் செய்யப்படவுள்ளது. 33 கிராம் கேக் ரூ.15-க்கு மார்க்கெட் விலையில் விற்பனை செய்யப்படுவதாக காணொலியில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், மார்க்கெட் விலையை விட கூடுதல் விலைக்கு கேக் கொள்முதல் செய்யப்படுவதாக பரவும் தகவல் தவறானதாகும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. அது போல் அந்த கேக்கில் தயாரிப்பு தேதி, காலாவதியாகும் தேதி எல்லாம் குறிப்பிட்டிருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
இதே போல் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்ளுக்கான காலை உணவு வழங்கும் திட்டத்தின் விரிவாக்கத்தை முதல்வர் விஜய் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கி வைத்தார். திருவான்மியூரில் உள்ள அரசு பள்ளியில் தொடங்கி வைத்தார்.



Click it and Unblock the Notifications
