ஐக்கிய அரபு அமீரகத்தில் கோர விபத்து! லாரி மோதி தீப்பிடித்ததில் இந்தியர்கள் உட்பட 14 பேர் பலி
துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தின் புஜைரா பகுதியில் நடந்த மிகப்பெரிய சாலை விபத்தில் இந்தியர்கள் உட்பட 14 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த விபத்தில் 30 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நடந்தது என்ன?
புஜைரா நகரின் நுழைவுப் பகுதிக்கு அருகே உள்ள 'ஷேக் கலீஃபா பின் சயீத்' சாலையில், நள்ளிரவுக்கு சற்று முன்பு இந்த கோர விபத்து நடந்துள்ளது. அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்று கொண்டிருந்தன. பல வாகனங்கள் வரிசையாக நின்று கொண்டிருந்தன.
அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு பெரிய லாரி, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. கட்டுப்பாட்டை இழந்த லாரி, முதலில் ஒரு வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது. பின்னர் அந்த லாரி சாலையில் கவிழ்ந்து, போக்குவரத்து நெரிசலில் நின்று கொண்டிருந்த பல வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதியது.

தீப்பிடித்து எரிந்த வாகனங்கள்
வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதிய வேகத்தில், அந்த லாரியில் திடீரென தீப்பிடித்தது. கண் இமைக்கும் நேரத்தில் அந்த தீ மளமளவென பரவி, விபத்தில் சிக்கிய மற்ற வாகனங்களையும் சூழ்ந்தது. நள்ளிரவு நேரம் என்பதால், வாகனங்களுக்குள் இருந்தவர்களால் உடனடியாக வெளியே வர முடியவில்லை. தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் அந்தப் பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது
மீட்புப் பணிகள் மற்றும் உயிரிழப்புகள்
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் புஜைரா காவல்துறையினர், தீயணைப்புப் படையினர் மற்றும் ஆம்புலன்ஸ் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு வீரர்கள் கடுமையாகப் போராடி வாகனங்களில் எரிந்த தீயை அணைத்தனர். விபத்தில் படுகாயமடைந்த 30 பேரை மீட்டு உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கோர விபத்தில் மொத்தம் 14 பேர் உடல் கருகியும், இடிபாடுகளில் சிக்கியும் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். உயிரிழந்தவர்களில் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்தவர்களும், இந்தியர்களும் அடங்குவர்.
மரபணு (DNA) சோதனை மூலம் அடையாளம் காணும் பணி
தீ விபத்து காரணமாக பல உடல்கள் அடையாளம் தெரியாத அளவிற்கு கருகிவிட்டன. இதனால், உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காண்பதற்காக மரபணு (DNA) சோதனைகளை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். சோதனை முடிவுகள் வந்த பிறகே உயிரிழந்தவர்களின் முழு விவரம் தெரியவரும்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 30 பேரில், 15 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 15 பேருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்திய தூதரகம் உதவி
இந்த விபத்தில் இந்தியர்கள் உயிரிழந்ததை துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகம் உறுதி செய்துள்ளது. இது குறித்து இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்தியில், "இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த இந்தியர்களின் குடும்பத்தினரை நாங்கள் தொடர்பு கொண்டுள்ளோம். அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்காக உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்" என்று தெரிவித்துள்ளது. எத்தனை இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர் என்ற சரியான எண்ணிக்கை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
ஐக்கிய அரபு அமீரக வரலாற்றில் நடந்த மிக மோசமான சாலை விபத்துகளில் ஒன்றாக இந்த சம்பவம் பார்க்கப்படுகிறது. இந்த விபத்து குறித்து புஜைரா காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.




Click it and Unblock the Notifications
