கோவை அவிநாசி சாலை மேம்பாலத்திற்கு ஜி.டி. நாயுடு பெயர் – சிக்ஸர் அடித்த ஸ்டாலின்
சென்னை: தமிழ்நாட்டின் நீளமான உயர்மட்ட மேம்பாலம் என்ற பெருமையை பெற்ற கோவை அவிநாசி சாலை மேம்பாலம் அக்டோபர் 9 ஆம் தேதி திறக்கப்படவுள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த பாலத்தைத் திறந்து வைக்கவுள்ள நிலையில், அந்த பாலத்திற்கு ஜி.டி நாயுடு என்று பெயர் சூட்டுவதாக ஸ்டாலின் அறிவித்திருப்பது கோவை மக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
கோவை மாவட்டத்தின் முக்கிய பகுதியாக அவிநாசி சாலை உள்ளது. திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட பிற மாவட்டங்களுடன் கோவை மாநகரை இணைப்பது அவிநாசி சாலை தான். அங்கு ஏராளமான கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள், ஐடி நிறுவனங்கள், விமான நிலையம் ஆகியவை உள்ளது. இதனால் அந்தப் பகுதி எப்போதுமே பரபரப்பாக காணப்படும்.

போக்குவரத்து நெரிசலை எளிமைப்படுத்துவதற்காக அங்கு மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பொது மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வந்தனர்.கடந்த அதிமுக ஆட்சியில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் பகுதி வரை சுமார் 10.10 கி.மீ தொலைவுக்கு உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும் என்று அறிவித்தனர். இதற்காக சுமார் ரூ.1,700 கோடி ஒதுக்கப்பட்டு கடந்த 2020 ஆம் ஆண்டு பணிகள் தொடங்கின.
திறக்கப்படும் அவிநாசி சாலை மேம்பாலம்
தமிழ்நாட்டின் நீளமான பாலம் என்ற பெயரை பெற்ற இந்த பாலத்தின் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்கனவே இந்த பாலத்தை மேலும் 5 கி.மீ தொலைவுக்கு நீலாம்பூர் வரை நீட்டிக்கப்படும் என்று அறிவித்துவிட்டார். அவிநாசி சாலை உயர்மட்ட மேம்பால பணிகள் நிறைவடைந்து, சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.
நாளை மறுநாள் அக்டோபர் 9 ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த பாலத்தை திறந்து வைக்கவுள்ளார். இதற்கான ஏற்பாடுகளில் அரசு ஈடுபட்டு வருகிறது. இதற்காக ஸ்டாலின் நாளை மறுநாள் கோவை வருகை புரியவுள்ளார். அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்க திமுகவினர் திட்டமிட்டு வருகிறார்கள். சட்டமன்ற தேர்தலுக்கு குறுகிய காலமே உள்ள நிலையில், ஸ்டாலின் கோவைக்கு முக்கிய அறிவிப்புகள் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜி.டி. நாயுடு பெயர்
இதுகுறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "2020-இல் அறிவிக்கப்பட்டு, 2021 மே மாதம் வரையில் 5% பணிகள் மட்டுமே நடைபெற்றிருந்த #AvinashiRoadFlyover-ஐ, நமது #DravidianModel அரசு பொறுப்பேற்று, ரூ.1,791 கோடி செலவில் 10.10 கி.மீ நீளமுள்ள இந்தப் பாலத்தின் மீதமிருந்த 95% பணிகளையும் விரைந்து முடித்துள்ளது.
கோவை மக்களின் நீண்டநாள் கோரிக்கையான இந்த 'அவினாசி சாலை உயர்மட்ட மேம்பால'த்தை நாளை மறுநாள் மக்களின் பயன்பாட்டுக்குத் திறந்து வைக்க இருக்கிறேன். கோவை என்றாலே புதுமை என்பதற்கேற்ப, புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளால் பெருமை சேர்த்த இந்தியாவின் எடிசன், தந்தை பெரியாரின் உற்ற கொள்கைத் தோழர் #GDNaidu அவர்களின் பெயரை இந்த மேம்பாலத்துக்குச் சூட்டி மகிழ்கிறேன். "என்று கூறியுள்ளார்.
முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்கு ஜிடி நாயுடுவின் உறவினர்கள், பொது மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். கோவையின் பெருமைகளில் ஒருவராக உள்ள ஜிடி நாயுடுவின் பெயரை, கோவையின் முக்கிய அடையாளமாக மாறப் போகும் அவிநாசி சாலைக்கு பெயர் வைத்துள்ளார் என்று பாராட்டி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications