கையும் களவுமாக சிக்கிய குன்றத்தூர் குமாரி.. சென்னையில் நிலத்தை வரன்முறைப்படுத்த இவ்வளவு லஞ்சமா?
சென்னை: சென்னையின் புறநகர் பகுதியான குன்றத்தூரில் நிலத்தை வரன்முறைப்படுத்த ரூ.24 ஆயிரம் லஞ்சம் வாங்கிய குன்றத்தூர் நகராட்சி பெண் கமிஷனரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். இந்த விவகாரத்தில் குன்றத்தூர் நகரமைப்பு ஆய்வாளர் மற்றும் உதவியாளரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையை அடுத்த பெருங்குடியை சேர்ந்த ஓய்வுபெற்ற இன்ஸ்பெக்டரான முனுசாமிக்கு குன்றத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 3 நிலங்கள் இருக்கிறது. இவர் அந்த காலி நிலங்களில் வீடு கட்டுவதற்காக நிலம் வரன்முறை பெற விரும்பினார். இதற்காக குன்றத்தூர் நகராட்சி அலுவலகத்திற்கு வந்த முனுசாமி கடந்த சில மாதங்களுக்கு முன்பு மனு கொடுத்தார்.

குன்றத்தூர் நகராட்சி கமிஷனர் குமாரி, நகரமைப்பு ஆய்வாளர் பாலசுப்பிரமணி இதனை பரிசீலித்த நிலையில், நிலம் வரன்முறை செய்யப்பட்டு பணிகள் அனைத்தும் முடிவடைந்தது. ஆனால் சான்றிதழை வழங்க ஒரு வீட்டுமனை வரன்முறைக்கு தலா ரூ.12 ஆயிரம் வீதம் ரூ.36 ஆயிரம் லஞ்சமாக தரும்படி குன்றத்தூர் நகராட்சி கமிஷனர் குமாரி, நகரமைப்பு ஆய்வாளர் பாலசுப்பிரமணி ஆகியோர் கேட்டதாக கூறப்படுகிறது.ஆனால் அப்போது முனுசாமி, ஒரு நிலம் வரன்முறைக்கு ரூ.8 ஆயிரம் வீதம் ரூ.24 ஆயிரம் தருவதாக கூறி பேசி முடித்திருக்கிறார்.
அதேநேரம் லஞ்சம் கொடுக்க விரும்பாத முனுசாமி, இதுபற்றி காஞ்சீபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து குன்றத்தூர் நகராட்சி கமிஷனர் குமாரி, குன்றத்தூர் நகரமைப்பு ஆய்வாளர் பாலசுப்பிரமணி ஆகிய இருவரையும் கையும் களவுமாக பிடிக்க காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. கலைச்செல்வன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்தனர். அவர்களின் ஏற்பாடடின் பேரில், ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை முனுசாமியிடம் கொடுத்து . அதனை லஞ்சமாக கொடுக்கும்படி அறிவுறுத்தினார்கள்.
அந்த பணத்துடன் முனுசாமி, நேற்று குன்றத்தூர் நகராட்சி அலுவலகத்துக்கு சென்றுள்ளார். ஆனால் 3 வீட்டுமனை வரன்முறைகளுக்கு ரூ.36 ஆயிரம் கொடுத்தால் மட்டுமே நிலம் வரன்முறைப்படுத்தப்பட்ட சான்றிதழ் கொடுக்கப்படும் என அதிகாரிகள் கறாராக கூறினர். இதையடுத்து ரூ.24 ஆயிரம் பெற்றுக்கொண்டு 2 வீட்டுமனைகளுக்கான வரன்முறை சான்றிதழ் கொடுக்குமாறு முனுசாமி கோரிக்கை வைத்தார்.

பின்னர் ரசாயன பொடி தடவிய லஞ்ச பணத்தை அலுவலக உதவியாளர் சாம்சனிடம் முனுசாமி கொடுத்தார். அவர் லஞ்ச பணத்தை கையில் வாங்கியதும், அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பாய்ந்து சென்று அலுவலக உதவியாளர் சாம்சனை கையும், களவுமாக மடக்கி பிடித்தனர். நகராட்சி கமிஷனர் குமாரி, நகரமைப்பு ஆய்வாளர் பாலசுப்பிரமணி ஆகியோர் கூறியதன் பேரிலேயே தான் லஞ்ச பணத்தை வாங்கியதாக சாம்சன் தெரிவித்தார்.
இதையடுத்து குன்றத்தூர் நகராட்சி கமிஷனர், நகரமைப்பு ஆய்வாளர், அலுவலக உதவியாளர் ஆகிய 3 பேரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், தனி அறையில் வைத்து அவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள.
கைதான 3 பேரது வீடுகளுக்கு சென்று சோதனை செய்யவும் லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications