வெளிநாட்டு முதலீடுகள்.. தமிழகத்திற்கு விரோதமாக செயல்படும் ஆளுரை திரும்ப பெறுக.. கம்யூனிஸ்ட்
சென்னை: தமிழகத்திற்கு விரோதமாக செயல்படும் ஆளுநர் ரவியை திரும்ப பெற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் 2023 ஜூன் 6, 7 ஆகிய தேதிகளில் சென்னையில் மத்தியக்குழு உறுப்பினர் பி.சண்முகம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி. சம்பத், உ. வாசுகி, மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:
தீர்மானம் 1: தமிழ்நாட்டிற்கு விரோதமாக செயல்படும் ஆளுநர் ரவியை திரும்பப் பெறுக!
தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர்.என்.ரவி அவர்கள் தொடர்ந்து ஆளுநருக்குரிய அதிகார வரம்புகளை மீறி செயல்படுவதை வழக்கமாக கொண்டுள்ளார். மாநில அமைச்சரவையின் ஆலோசனைகளை ஏற்றுத்தான் ஆளுநர் செயல்பட முடியும் என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்திய பிறகும் அவர் தனது போக்கை மாற்றிக் கொள்ளவில்லை.

தமிழ்நாடு அரசின் ஒப்புதல் இல்லாமலேயே சமீபத்தில் பல்கலை கழக துணை வேந்தர்கள் மாநாட்டை, வேந்தர் என்ற முறையில், ஆளுநர் நடத்தியுள்ளார். மாநில பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களும் அழைக்கப்பட்டுள்ளனர். ஆனால், தமிழ்நாடு அரசின் சார்பில் பங்கேற்க வேண்டிய உயர்கல்வித்துறை அமைச்சர் அழைக்கப்படவில்லை. இம்மாநாட்டில் பேசிய ஆளுநர், தமிழக முதலமைச்சர் அண்மையில் வெளிநாடுகளுக்குச் சென்று வந்தார். நாம் கேட்பதாலோ, அவர்களுடன் பேசுவதாலோ முதலீட்டாளர்கள் வரமாட்டார்கள் என்றும், அதற்கான கட்டுமான வசதிகள் தமிழ்நாட்டில் இல்லை எனவும் பேசியுள்ளார். ஆளுநரின் இந்த பேச்சு உண்மைக்கு புறம்பானது மட்டுமல்ல தமிழ்நாட்டிற்கே விரோதமானதாகும். தமிழ்நாட்டில் மூலதனமிட தயாராக உள்ள வெளிநாட்டு முதலீட்டாளர்களை தடுக்கும் வகையில் ஆளுநரின் பேச்சு அமைந்துள்ளது. மேலும், அனைவருக்கும் கல்வி என்கிற கோட்பாட்டைப் பின்னுக்குத் தள்ளுகிற ஒன்றிய அரசின் தேசியக் கல்விக் கொள்கை அவசியமானது எனவும் ஆளுநர் பேசியுள்ளார்.
மேலும், மற்றொரு கூட்டத்தில் மொழிவழி மாநில கருத்தாக்கத்தை விமர்சித்துள்ளார். ஒரு மாநிலத்திற்கென்று தனி பண்பாடு, கலாச்சாரம் இல்லை, தமிழர், தெலுங்கர் என்பது கற்பனையான அடையாளம் என்று பேசியதன் மூலம் தேசிய இன அடையாளத்தையே நிராகரித்துள்ளார். மாநிலங்களின் ஒன்றியமே பாரதம் என்ற அரசியல் சாசனத்திற்கு மாறாக, இந்த அடையாளங்கள் தேசத்தை பலவீனப்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார். அரசியல் சாசன அடிப்படையில் உருவாக்கப்பட்ட பதவியில் இருந்து கொண்டு அதற்கு புறம்பாகவே பேசுவது முற்றிலும் அநியாயமானது. ஆளுநரின் இத்தகைய கருத்துக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
அரசியல் சாசனத்திற்கு விரோதமாகவும், ஆர்.எஸ்.எஸ்.சின் அரசியல் கருவியாகவும் செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஆளுநரை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டுமெனவும், இவரை ஆளுநர் பொறுப்பிலிருந்து பதவி நீக்கம் செய்வதற்கான உரிய நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டுமென்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 2: மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை முற்றிலும் கைவிடுக! கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு
சிபிஐ (எம்) வலியுறுத்தல்
கர்நாடக மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இதனைத் தொடர்ந்து பாஜக அல்லாத அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளையும் ஒருங்கிணைத்து செயல்பட வேண்டிய அரசியல் தேவை நாட்டின் மீது அக்கறையுள்ளவர்களின் முன்னால் உள்ளது. ஆனால், இது குறித்தெல்லாம் கவலைப்படாமல் கர்நாடக மாநில துணை முதலமைச்சர் திரு டி.கே.சிவக்குமார் அவர்கள் தானடித்த மூப்பாக காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டப்படும் என்று அறிவித்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதை அமைச்சர் அறியாமல் இருக்க வாய்ப்பில்லை. மற்றொன்று, தமிழ்நாடு அரசின் அனுமதி இல்லாமல் இப்படிப்பட்ட கட்டுமானப் பணிகளை காவிரியில் மேற்கொள்ள முடியாது என்று காவிரி நடுவர் மன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. காவிரி நடுவர் மன்ற விவாதத்தின் போதோ, உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பு விசாரணையின் போதோ கர்நாடக அரசு மேகதாது அணை பிரச்சனையை எழுப்பவில்லை. இறுதித் தீர்ப்பில் பெங்களூர் நகர குடிநீர் தேவையும் கணக்கில் கொண்டே காவிரி நீர் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இவையெல்லாம் புறக்கணித்துவிட்டு கர்நாடகத்தில் ஏற்கனவே இருந்த பாஜக அரசு மேகதாது அணைப் பிரச்சனையை புதிதாக எழுப்பி தமிழ்நாட்டிற்கு விரோதமான நிலையினை மேற்கொண்டது. இதேபோக்கில் புதிதாக பதவியேற்றுள்ள கர்நாடக காங்கிரஸ் அரசும் மேகதாது அணை பிரச்சனையை கிளப்புவது நியாயமற்றது, நேர்மையற்றது, உச்சநீதிமன்றம் மற்றும் காவரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புகளுக்கு விரோதமானது.
எனவே, கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு, மேகேதாட்டுவில் அணை கட்டுவது உள்ளிட்ட தமிழ்நாட்டிற்கு விரோதமான நடவடிக்கைகளை முற்றிலும் கைவிட வேண்டுமென்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.












Click it and Unblock the Notifications