எலிசபெத் மகாராணி மறைவுக்கு தமிழக சட்டசபையில் இரங்கல்! 2 நொடி மவுன அஞ்சலி செலுத்தி மரியாதை!
சென்னை: இங்கிலாந்து எலிசபெத் மகாராணி மறைவுக்கு தமிழக சட்டசபையில் இரங்க தீர்மானம் வாசிக்கப்பட்டதோடு அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.
இதேபோல் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள் சிலருக்கும் தமிழக சட்டசபையில் இரங்கல் குறிப்பும், இரங்கல் தீர்மானமும் வாசிக்கப்பட்டது.
இது மட்டுமல்லாமல் எலிசபெத் மகாராணி உள்ளிட்டோருக்கு சட்டசபையில் 2 நொடி மவுன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

சட்டசபை கூட்டம்
தமிழக சட்டசபை கூட்டத்தின் முதல் நாளான இன்று முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களான ஹமீது இப்ராஹிம், கே.கே.வீரப்பன், ஏ.எம்.ராஜா, பச்சையப்பன்,புருஷோத்தமன், திருவேங்கடம், ஜனார்த்தனன், தர்மலிங்கம், ஹக்கீம், கோவை தங்கம் ஆகியோருக்கு முதல் வேலையாக இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டன. இவர்கள் பதவி வகித்த காலம் மற்றும் வெற்றிபெற்ற தொகுதிகள் பற்றி விவரமும் தெரிவிக்கப்பட்டது.

இரங்கல் தீர்மானங்கள்
அடுத்ததாக மறைந்த முக்கியப் பிரமுகர்களுக்கு இரங்கல் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன. அந்த வகையில் ராமநாதபுரம் இளைய மன்னர் நாகேந்திர குமரன் சேதுபதி, இந்திய விடுதலை போராளி அஞ்சலை பொன்னுசாமி அம்மாள், இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத், மலேசிய இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் துன் சாமிவேலு ஆகியோருக்கு இரங்கல் தீர்மானங்கள் சட்டசபையில் வாசிக்கப்பட்டன.

மவுன அஞ்சலி
இதேபோல் மறைந்த கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் கொடியேறி பாலகிருஷ்ணன், சமாஜ்வாதி கட்சியின் நிறுவனத் தலைவரும், உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சருமான மறைந்த முலாயம் சிங் யாதவ், முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா ஆகியோருக்கும் சட்டசபையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்களுக்கு 2 நொடி மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

சட்டசபை ஒத்தி வைப்பு
அப்போது முதலமைச்சர் ஸ்டாலின் உட்பட அனைவரும் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினார்கள். அத்துடன் இன்றைய சட்டசபை நிகழ்வை முடித்து வைத்த சபாநாயகர் அப்பாவு, சட்டசபை மீண்டும் நாளை காலை 10 மணிக்கு கூடும் என அறிவித்தார்.












Click it and Unblock the Notifications