கடந்த முறை தான் டீ, சுண்டல்! இந்த முறை உஷாரான காங்கிரஸ் MLAக்கள்! உதயநிதியால் கிடைத்த உற்சாகம்!
சென்னை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது 1 மாத ஊதியத்தை மழை வெள்ள நிவாரண நிதியாக வழங்கியுள்ளனர்.
முன்னதாக கடந்த மாதம் 22ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலினை அப்பாயிண்ட்மெண்ட் வாங்காமல் பார்க்க வந்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையிலான காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், டீயும், சுண்டலும் மட்டும் சாப்பிட்டுவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பிய நிகழ்வு நடந்தது குறிப்பிடத்தக்கது.

முதலமைச்சர் ஸ்டாலினை சந்திக்க வருபவர்கள் முன் கூட்டியே முதல் நாளோ அல்லது சந்திக்க வருவதற்கு முன்னர் 2 மணி நேரத்துக்கு முன்னரோ முறைப்படி அப்பாயிண்ட்மெண்ட் கேட்பது வழக்கம். அப்போது தான் தன்னை யார் யார் சந்திக்க வருகிறார்கள், யார் யாருக்கு என்னென்ன நேரத்தை ஒதுக்க வேண்டும் என்பது முதலமைச்சருக்கும் தெரியும். ஆனால் அப்படி எதுவுமே கேட்காமல், எப்போது தலைமைச் செயலகம் சென்றாலும் முதலமைச்சரை பார்த்துவிடலாம் என்ற நம்பிக்கையில் காங்கிரஸ் டீம் சென்று பல்பு வாங்கியது.
இந்நிலையில் தான் கடைசி வரை முதலமைச்சர் ஸ்டாலினை சந்திக்க அப்பாயிண்ட்மெண்டே வாங்காமல், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பக்கம் ரூட்டை பிடித்துள்ளனர் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள். செல்வப்பெருந்தகை தலைமையில் சென்ற அவர்கள் மழை வெள்ள நிவாரண நிதியாக தங்கள் ஒரு மாத ஊதியமான 18 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினர். இந்தச் சந்திப்பின் போது அமைச்சர் எ.வ.வேலுவும் உடனிருந்தார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி இந்தச் சந்திப்பில் இடம்பெறவில்லை. முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இருக்கும் பணிச்சுமைகள் காரணமாக அவரது பிரதிநிதியாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான் முக்கிய நிகழ்வுகளிலும், சந்திப்புகளிலும் கலந்துகொள்கிறார். விசிக, மதிமுக, என முன்னதாக பல கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் 1 மாத ஊதியத்துக்கான காசோலையை முதல்வரிடம் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications